சுனாமி நினைவு தினம்: கடலில் பால் ஊற்றி, பூக்களை தூவி அஞ்சலி
சுனாமி தாக்கிய 18வது நினைவு தினத்தையொட்டி : கடலோரம் வசிக்கும் கிராம மக்கள், கடலில் பால் ஊற்றி, பூக்களை தூவி அஞ்சலி செலுத்தினர்;
18 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள் (டிசம்பர் 26) அதிகாலை சுமத்ரா தீவு கடல் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், 30 மீட்டர் உயரத்துக்கு கடலில் எழுந்த சுனாமி என்னும் ஆழிப்பேரலை 14 நாடுகளில் கடலோரப் பகுதிகளை தாக்கியது.
இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, மாலத்தீவு, தாய்லாந்து, மலேசியா உள்பட 14 நாடுகளில் கரையோரம் இருந்த 2 லட்சத்து 29 ஆயிரத்து 866 பேர் மாண்டு போனார்கள். 43 ஆயிரத்து 786 பேரை காணவில்லை. தமிழகத்தில் சுனாமி தாக்குதலில் சென்னை முதல் குமரி வரை கிழக்கு கடலோர பகுதிகள் பாதிக்கப்பட்டன. 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்தனர்.
தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை சுனாமி தாக்குதலில் கடுமையாக மக்கள் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 6065 பேர் உயிரிழந்தனர். கடலூரில் 610 பேரும், சென்னையில் 206 பேரும் பலியானார்கள். உயிர்ப்பலியை தாண்டி, பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களும் சேதமானது
சுனாமியால் குழந்தைகளை இழந்த பெற்றோரும், பெற்றோரை இழந்த குழந்தைகளும் ஏராளம். கடலோரப் பகுதியில் அன்று எழுந்த மரண ஓலம் அடங்க பல ஆண்டு காலம் ஆனது. இன்னும் துயரச் சுவடுகள்தான் மறையவே இல்லை. என்றாலும், 18 ஆண்டுகளாக இன்றும் கடற்கரையோரம் அந்த சோக கீதம் ஒலித்துக்கொண்டேதான் இருக்கிறது.
இன்றைக்கு சென்னை முதல் குமரி வரை கடலோரம் வசிக்கும் கிராம மக்கள், கடலில் பால் ஊற்றி, பூக்களை தூவி, இறந்துபோனவர்களுக்காக அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும், மீனவ அமைப்பினரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, தங்களுடைய ஆறுதலையும் தெரிவித்தனர்.
சுனாமி நினைவு தினத்தையொட்டி நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. வர்த்தகர் சங்கம் மற்றும் பேராலயம் சார்பாக பேரணி நடைபெற்றது.சுனாமி 18ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திரேஸ்புரம் கடற்கரையில் மீனவர்கள் கடலில் மலர் தூவி, பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் வர்த்தகர் சங்கம் மற்றும் பேராலயம் சார்பாக மவுன ஊர்வலம் நடத்தினர்.
சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வேளாங்கண்ணி பேராலயத்தில் திருப்பலி நடைபெற்றது.
சுனாமி நினைவு தூணில் பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் அஞ்சலி செலுத்தினர். பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும், மீனவ அமைப்பினரும் நிகழ்ச்சியில் பங்கேற்று, தங்களுடைய ஆறுதலையும் தெரிவித்தார்கள்.