உயர்மகசூல் தரும் கரும்புகளை பிரபலப்படுத்த ரூ.12.34 கோடி: அரசாணை வெளியீடு

ரூ.12.34 கோடியில் உயர்மகசூல் தரும் கரும்புகளை விவசாயிகளிடையே பிரபலப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

Update: 2022-11-12 03:07 GMT

பைல் படம்.

ரூ.12.34 கோடியில் உயர்மகசூல் தரும் கரும்புகளை விவசாயிகளிடையே பிரபலப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கரும்பு விவசாயிகளின் நலனுக்காக தமிழ்நாடு அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் உற்பத்தி ஊக்கத்தொகை, சிறப்பு ஊக்கத்தொகை மூலம் டன்னுக்கு ரூ.2950/- கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் காரணமாக, 2020-21 ஆம் அரவைப்பருவம் வரை 95,000 எக்டராக இருந்த கரும்பு பதிவு பரப்பானது, 2021-22 ஆம் அரவைப்பருவத்தில் 1.2 இலட்சம் எக்டராகவும், 2022-23 ஆம் அரவைப்பருவத்தில் 1.4 இலட்சம் எக்டராகவும் உயர்ந்துள்ளது.

அதிக மகசூல் தரும் கரும்பு இரகங்களை பிரபலப்படுத்தும் திட்டம்

அதிக மகசூல், அதிக சர்க்கரை கட்டுமானம் தரக்கூடிய கோ 11015, கோகு 6, கோ கு 7, கோ க 13339, கோ 0212, கோ.உ 09356, புதுப்பிக்கப்பட்ட கோ 86032 போன்ற இரகங்களை கரும்பு விவசாயிகளிடையே பிரபலப்படுத்தும் திட்டத்தினை, நடப்பாண்டில் ரூ.12.34 கோடி நிதியில் செயல்படுத்த அரசு ஒப்புதல் அளித்து, முதல் தவணையாக, மூன்று கோடி ரூபாய் விடுவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

திட்டவிபரம் பின்வருமாறு:

1. வல்லுநர் விதைக்கரும்பு கொள்முதலுக்கு மானியம்

கோயம்புத்தூரில் உள்ள கரும்பு இனப்பெருக்க நிறுவனம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலையங்களிலிருந்து புதுப்பிக்கப்பட்ட கோ 86032, கோ 0212, கோ 11015, கோ.உ.09356, கோக 13339, கோகு 6, கோகு 7 இரகங்களில் வல்லுநர் விதைக்கரும்பு வாங்கிட டன்னுக்கு ரூ.2,500 வீதம் எக்டருக்கு 5 டன் வாங்குவதற்கு ரூ.12,500/- வழங்க ப்படும்.

2. திசுவளர்ப்பு நாற்றுக்கள் கொள்முதலுக்கு மானியம்

கோ 86032, கோ 11015 இரகங்களில் திசுவளர்ப்பு நாற்றுக்களை மேற்காணும் ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் கள்ளக்குறிச்சி 1 கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வாங்கிட நாற்றுக்கு ரூ.6 வீதம் எக்டருக்கு 15,000 திசு வளர்ப்பு நாற்றுக்கள் வாங்கிட ரூ. 90,000/- மானியமாக வழங்கப்படும்.

மேற்கண்ட இரண்டு இனங்களிலும் கரும்பு விவசாயிகளுக்கு தரமான வீரியமிக்க இனத்தூய்மையுள்ள விதைக் கரும்புகளை வழங்கும் நோக்குடன் வல்லுநர் விதைக்கரும்பு மற்றும் திசு வளர்ப்பு நாற்றுகள் மூன்றடுக்கு நாற்றங்கால் திட்டத்தில் நடவு செய்யும் கரும்பு விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்படும்.

3. பரு சீவல் நாற்றுக்கள் கொள்முதல் செய்திட மானியம்

கோ 86032, கோ 11015, கோ உ 09356, கோ க 13339, கோ கு 6, கோ கு 7 இரகங்களின் பருசீவல் நாற்றுக்கள் வாங்கிட ஒரு எக்டருக்கு ரூ.12,500/ மானியமாக வழங்கப்படும்.

4. ஒற்றைப்பரு விதைத் கரணைகள் கொள்முதல் செய்திட மானியம்

விதைக் கரணைகளுக்கு ஆகும் செலவினைக் குறைப்பதற்காக, கோ 86032, கோ 11015, கோ உ 09356, கோ 0212, கோ க 13339, கோ கு 6, கோ கு 7 ஆகிய கரும்பு இரகங்களின் ஒற்றைப்பரு விதைக் கரணைகளைக் கொண்டு நடவு செய்யும் விவசாயிகளுக்கு எக்டருக்கு 2.5 டன் வாங்கிட ரூ.3,750/மானியமாக வழங்கப்படும்.

விதைக்கரும்பின் அளவை குறைத்து சாகுபடி செலவினை குறைப்பதற்கும், உயர்மகசூல் இரக சாகுபடி, கரும்பில் இயந்திரமயமாக்கல் முறையினை ஊக்குவிக்கவும் பருசீவல் நாற்றுக்களுக்கும், ஒரு பரு விதைக் கரணைக்கும் மானியம் வழங்கப்படுகிறது.

மானியம் பெறுவதற்கான தகுதி

கூட்டுறவு, பொது மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளில் கரும்பை பதிவு செய்துள்ள விவசாயிகள் அனைவரும் இம்மானியம் பெறலாம்.

தேவைப்படும் ஆவணங்கள்

சிட்டா அடங்கல், வயல்/நாற்றாங்கால் புகைப்படம், பயனாளியின் புகைப்படம், வங்கிக் கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை நகல், கரும்பு பதிவு ஒப்பந்த நகல் போன்றவை.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

மேற்காணும் திட்ட இனங்களில் மானியம் பெற உழவன் செயலி மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் தகவலுக்கு, கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளாக இருந்தால், மேலாண்மை இயக்குநர்களையும், தனியார் சர்க்கரை ஆலைகளாக இருந்தால், மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்களையும் தொடர்பு கொள்ளலாம்.

கரும்பு விவசாயிகளின் நலனுக்காக அரசு அறிவித்துள்ள இத்திட்டத்தினால், வரும் ஆண்டுகளில் கரும்பு நடவுக்கான செலவு குறையும் என்பதுடன், ஒரு ஏக்கரில் கிடைக்கும் கரும்பு மகசூலும் அதிகரிக்கும் என்பதால், கரும்பு விவசாயிகள் இத்திட்டத்தில் இணைந்து பயனடையுமாறு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர்  எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்  கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

Similar News