10 தமிழ் எழுத்தாளர்களுக்கு வீடு வழங்க அரசாணை வெளியீடு

கனவு இல்லத் திட்டத்திற்கு 2022-23ஆம் ஆண்டுக்கான 10 தமிழ் எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வீடு வழங்கும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.;

Update: 2022-11-22 14:17 GMT

பைல் படம்.

கனவு இல்லத் திட்டத்திற்கு 2022-23ஆம் ஆண்டுக்கான 10 தமிழ் எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வீடு வழங்கும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97-வது பிறந்த நாளை முன்னிட்டு  கடந்த 3.6.2021 அன்று, "தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்ய அகாதமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகளைப் பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக வீடு வழங்கப்படும்" என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கனவு இல்லத் திட்டத்தை அறிவித்தார்.

இந்த அறிவிப்பிற்கிணங்க, 2021-22ஆம் ஆண்டிற்கான கனவு இல்லத் திட்டத்திற்கு, சாகித்ய அகாதமி விருது மற்றும் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்ற ந.செகதீசன் என்கிற ஈரோடு தமிழன்பன், சாகித்ய அகாதமி விருது பெற்ற கவிஞர் புவியரசு என்கிற சு. ஜகன்னாதன், கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்ற முனைவர் இ. சுந்தரமூர்த்தி, சாகித்ய அகாதமி விருது பெற்ற பூமணி என்கிற பூ.மாணிக்கவாசகம், கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்ற முனைவர் கு. மோகனராசு, சாகித்ய அகாதமி விருது பெற்ற திரு. இமையம் என்கிற வெ. அண்ணாமலை ஆகிய ஆறு எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பிற்கான ஒதுக்கீட்டு ஆணைகளை 3.6.2022 அன்று வழங்கினார்.

அதன் தொடர்ச்சியாக, 2022–2023ஆம் ஆண்டிற்கான கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 2005 ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்ற திருமதி ஜி. திலகவதி, 2011 ஆம் ஆண்டு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்ற  பொன். கோதண்டராமன், 2011 ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்  சு. வெங்கடேசன், 2013 ஆம் ஆண்டு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்ற  ப. மருதநாயகம், 2015 ஆம் ஆண்டு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்ற  மறைமலை இலக்குவனார், 2015-16 ஆம் ஆண்டு செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தொல்காப்பியர் விருது பெற்ற மருத்துவர் முனைவர் இரா. கலைக்கோவன், 2018 ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்ற  எஸ். இராமகிருஷ்ணன், 2016 ஆம் ஆண்டு கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்ற  கா. ராஜன், 2013 ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்ற  ஆர்.என்.ஜோ.டி. குருஸ், 2016 ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்ற  சி. கல்யாணசுந்தரம் (வண்ணதாசன்) ஆகிய பத்து தமிழ் எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான அரசாணை 16.11.2022 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்பட்ட இந்த பத்து எழுத்தாளர்களுக்கும் அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் வீடுகள் வழங்கப்படும்.

Tags:    

Similar News