இன்ஸ்டாநியூஸ் (Instanews.city) டிஜிட்டல் செய்தி தளம் துவக்கம்..! ரங்கராஜ் பாண்டே பங்கேற்பு..!
Instanews.city துவக்கவிழாவில் சாணக்யா நிறுவனர் ரங்கராஜ் பாண்டே கலந்துகொண்டு துவக்கிவைத்தார்.
தமிழ் கூறும் நல்உலகை இணையதளம் வழியாக இணைக்கும் முயற்சியாக இன்ஸ்டாநியூஸ் தனது செய்தி சேவையை இன்று துவங்கியுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள JKKN நடராஜா கல்லூரி வளாகத்தில், JKKN கலையரங்கில் காலை 10.35 மணியளவில் இன்ஸ்டாநியூஸ் வெளியீடு சிறப்பாக நடந்தது. இவ்விழாவிற்கு சமூக ஆர்வலர்கள், கலைஞர்கள், கல்வியாளர்கள், மூத்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வந்த செய்தியாளர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.
எம்.எம்.ஓ.நெட்வொர்க் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் செய்தி தளமான "இன்ஸ்டாநியூஸ்" மற்றும் வணிக மேம்பாட்டு தளமான "இன்ஸ்டா பிஸ்" ஆகியவற்றை அதன் தலைமை நிர்வாகி செந்தாமரை அறிமுகம் செய்து வெளியிட்டார். மற்றும் நிர்வாக இயக்குனர்கள் ஓம் சரவணன் ஐஸ்வர்யலட்சுமி ஆகியோர் உடனிருந்து வெளியிட்டனர்.
மூத்த பத்திரிக்கையாளரும், சாணக்யா நிறுவனருமான ரங்கராஜ் பாண்டே, திரைப்பட இயக்குநரும் எழுத்தாளருமான சக்ரா விஷன் இந்தியா பவுண்டேசன் ராஜசேகர் மற்றும் சமூக ஊடக செயற்பாட்டாளர் புட் சட்னி ராஜ்மோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, செய்திகளை வெளியிட்டு இன்ஸ்டா நியூஸ் செய்தித்தளத்தை துவக்கி வைத்தனர்.
முன்னதாக இன்ஸ்டாநியூஸ் முதன்மை ஆசிரியர் மாதவன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அதனைத் தொடர்ந்து ரங்கராஜ் பாண்டே சமூக நலனில் ஊடகத்தின் பணி பற்றி சிறப்புரையாற்றினார்.
எழுத்தாளரர் சக்ரா ராஜசேகர் ஊடகத்துறையில் நேரம், காலம் பாராமல் பணியாற்றும் செய்தியாளர்களின் அர்ப்பணிப்பை பாராட்டி பேசினார்.
சமூக ஊடக செயற்பாட்டாளர் ராஜ்மோகன், செய்தியின் தாக்கம் சமூகத்தில் ஏற்படுத்தும் விளைவுகளை பற்றியும் ஊடக தர்மத்தை வலியுறுத்தியும் பேசினார்.
நிறைவாக செய்தி ஆசிரியர் மணிவண்ணன் வருகை தந்த சிறப்பித்த அனைவருக்கும் நன்றி கூறினார்.