ராகுல் காந்தி தமிழகத்தில் 3 நாள் சுற்றுப்பயணம்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களுக்கு மூன்று நாள் சுற்று பயணமாக தமிழகம் நாளை( 23ந் தேதி ) வருகிறார்.;
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழகத்தின் முக்கிய கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசாரத்தை கடந்த மாதமே தொடங்கிவிட்டார்கள். தற்போது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறனர். தங்கள் சின்னத்துக்கு வாக்குகள் திரட்டி வருகிறார்கள். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முதல்கட்டமாக தமிழ்நாட்டில் 3 நாள் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க உள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ள, ராகுல் காந்தி சுற்றுப்பயணத்தின் முழு விவரம் வருமாறு:-
ராகுல்காந்தி 23-ந் தேதி தனி விமானத்தில் டெல்லியில் இருந்து புறப்பட்டு காலை 11 மணிக்கு கோவை விமான நிலையம் வருகிறார். அவருக்கு காங்கிரஸ் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார். பிற்பகல் திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்கிறார். கோவையில் அவருக்கு சென்னியம்பாளையத்தில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பிற்பகல் 3.15 மணிவரை திறந்த வேனில் சென்று மக்களை சந்திக்கிறார்.
மாலை 5.15 மணிக்கு திருப்பூர் செல்லும் ராகுல்காந்திக்கு அவிநாசி புது பஸ் நிலையம் அருகே வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து திருப்பூர் நகரில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்கிறார். பின்னர் திருப்பூர் குமரன் நினைவு சின்னத்துக்கு மாலை அணிவிக்கிறார். 5.45 மணி முதல் 6.45 மணிவரை தொழிலாளர்களை சந்திக்கிறார். அன்று இரவு திருப்பூரில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.
24-ந் தேதி காலை ஈரோடு மாவட்டம் ஊத்துக்குளி செல்கிறார். அங்கு அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. 11.15 மணி முதல் 11.45 மணிவரை பெருந்துறையிலும், 12.30 மணி முதல் 12.45 மணிவரை பி.எஸ்.பார்க் பகுதியிலும் ராகுல் பிரசாரம் செய்கிறார். பிற்பகலில் அவர் நெசவாளர்களை சந்திக்கிறார். மாலை 3.45 மணி முதல் 4.15 மணிவரை காங்கேயத்தில் மக்களை சந்திக்கிறார். மாலை 4.45 முதல் 5.45 மணிவரை தாராபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அன்று இரவு அங்கு தங்குகிறார்.
25-ந் தேதி காலை 10 மணிக்கு தாராபுரத்தில் இருந்து புறப்பட்டு 10.30 மணிக்கு கரூர் செல்கிறார். அங்கு அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதை தொடர்ந்து கரூர் பஸ் நிலையத்தில் உள்ள காமராஜர் சிலை அருகே அவர் தொண்டர்களை சந்திக்கிறார். 12.30 மணியளவில் வாங்கல் பகுதியில் விவசாய பிரதிநிதிகளை சந்திக்கிறார்.
அன்று மாலை 3 மணி முதல் 3.30 மணிவரை பள்ளப்பட்டியிலும், 4.15 முதல் 4.30 மணிவரை திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரிலும் மக்களை சந்திக்கிறார். மாலை 6 மணிக்கு மதுரையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.