கரிசல் குயில் பறந்தது - கி.இரா. மறைவு - வைகோ இரங்கல்.

கோபல்ல கிராமம், கரிசல் காட்டுக் கடுதாசி...;

Update: 2021-05-18 05:16 GMT

புதுமையாளர், புரட்சியாளர் மறைவுக்கு கி. இராஜநாராயணன் மறுமலர்ச்சி தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

செந்தமிழை, செழுந்தமிழாய் செழிக்கச் செய்யும் கரிசல் காட்டு மண்ணில், இடைசெவலில் மலர்ந்த,

ஒப்புவமை சொல்ல முடியாத புதுமையாளர், புரட்சியாளர்

கி. இராஜநாராயணன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து

அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

கோபல்ல கிராமம், கரிசல் காட்டுக் கடுதாசி, கோபல்லபுரத்து மக்கள் என, தமிழில் அதுவரை இல்லாத புதிய எழுத்து நடையை அறிமுகம் செய்து, வரலாற்றுச் செய்திகளை,

சொல் புதிதாய், சுவை புதிதாய் எல்லோரும் படிக்கின்ற எளிய நடையில், கரிசல் மண்ணின் மக்களுடைய பேச்சு வழக்கில் நமக்குத் தந்த கி.இரா. அவர்கள்

இலக்கியத் துறையில் பேராட்சி புரிந்தார். கரிசல் வட்டார வழக்குச் சொல் அகராதி ஆக்கித் தந்தார்.

உலகெங்கும் வாழும் இளம் இலக்கியவாதிகள், நாட்டுப்புறக் கலை ஆர்வம் கொண்டவர்கள் அத்தனைப் பேருக்கும் ஊக்கம் அளித்து ஆதரித்து வளர்த்து வந்தார்.

எழுத்தாளர்களுக்கு ஒரு செவிலித்தாயாகத் திகழ்ந்த அன்புப் பாசறை அவரது புதுவை இல்லம் ஆகும்.

சிந்தனையாளர்களை ஊக்கப்படுத்தி, ஆற்றுப்படுத்தி வாழ்ந்த கி.இரா போன்ற ஒரு மாமனிதரை,

எங்கு தேடினாலும் கிடைக்காது.

இன்று, எண்ணற்ற இளைஞர்கள், அவரது எழுத்து நடையைப் பின்பற்றி எழுதுகின்றனர். திரைப்படங்களை இயக்குகின்றனர்.

புதுவை பல்கலைக்கழகம்,

அவரை மதிப்புறு பேராசிரியர் ஆக ஏற்று, முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவரைப் பேணிப் பாதுகாத்து, அவருடைய வழிகாட்டுதலில், தமிழ் இலக்கியக் கருத்து அரங்குகளையும், பின் நவீனத்துவச் சிந்தனைகளையும், மாணவர்கள், தமிழ் ஆர்வலர்களிடம், அடுத்த நூற்றாண்டை நோக்கி அவர்களை இட்டுச் செல்லவும் ஆற்றியுள்ள பணி மகத்தானது.

ரசிகமணியின் தாக்கத்தோடும், பொக்கைவாய்ச் சிரிப்போடும்,

குழி விழுந்த கண்களில்

பகலவனைப் போல ஒளிவீசும் பார்வையோடும் அவர் வாழ்ந்த நாள்கள் ஒவ்வொன்றும், தமிழுக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கு உரம் ஊட்டியது. வரமாக வாய்த்தது.

முன்னோர் மரபையும்,

பின்வரும் உலகையும், இணைத்த மையப்புள்ளி கி.இரா. அவர்கள்,

நம் நெஞ்சங்களில் என்றென்றும், நிலைத்த புகழுடன் இருப்பார்.

தமிழ் என்று சொன்னாலே நமக்கு எப்படி உள்ளம் பூரிக்கின்றதோ, அதைப்போல, கி.இரா. என்கின்ற இரண்டு எழுத்துகள், தமிழ் உள்ளவரை, தமிழர்கள் உள்ளவரை, இலக்கியங்கள் உள்ளவரை, புன்னகை பூத்துக் குலுங்கும்.

கி.இராவுடன் எனது தொடர்பு,

50 ஆண்டுகளைக் கடந்தது. அவ்வப்போது அவரது நலம் விசாரித்துக் கொள்வேன்.

கி.இரா. அவர்களை ஆசிரியராகக் கொண்டு, கதைசொல்லி என்ற இலக்கிய இதழைத் தொடர்ந்து நடத்தி வருகின்ற கே.எஸ். இராதாகிருஷ்ணன், அவருக்கு நெருக்கமாகவும், தொடர்ந்து தொடர்பிலும் இருந்து வந்தார்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்,

கி.இரா. அவர்களுடைய 85 ஆவது பிறந்த நாளை, தலைநகர் சென்னையில் நடத்தி, அவரைச் சிறப்பித்தோம்.

நூற்றாண்டை வெகு சிறப்பாகக் கொண்டாட, தமிழ் இலக்கிய உலகம் ஆர்வத்துடன் காத்திருந்த வேளையில், அந்தக் கரிசல் குயில் பறந்து விட்டது.

கி.இரா.வை இழந்து வாடும் இலக்கிய ஆர்வலர்கள்,

அவரது கரிசல் இலக்கியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அத்தனைப் பேருக்கும்,

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

வைகோ

பொதுச் செயலாளர்,

மறுமலர்ச்சி தி.மு.க

'தாயகம்'

சென்னை - 8

18.05.2021

Tags:    

Similar News