கொரோனா பாதிப்பு - விசிக மாநில பொருளாளர் உயிரிழந்தார்.
ஜெய்பீம் அவரது முழக்கம்.;
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொருளாளர் முஹம்மது யூசுப் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விசிக மாநில பொருளாளர் முஹம்மது யூசுப்பிற்கு கடந்த மே 8ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் அவருடைய உடல்நிலை மோசமடைந்ததாக சமீபத்தில் தகவல் வெளியானது.
இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், "விசிக பொருளாளர் முகமது யூசுப் அவர்கள் கொரோனா கொடுந் தொற்றுக்கு ஆளாகியிருப்பது பெருங்கவலை அளிக்கிறது.அந்தக் கொடிய கிருமியின் கோரப்பிடியிலிருந்து அவர் விரைந்து மீண்டு வரவேண்டும்.ஜெய்பீம் என்னும் அவரது முழக்கம் நம் மேடைகளில் வழக்கம்போல ஓங்கி ஒலிக்க வேண்டும்." என கூறினார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி முஹம்மது யூசுப் காலமானார். அவருடைய உடல் கே.கே.நகரில் உள்ள இல்லத்திற்கு கொண்டு வந்து அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
முஹம்மது யூசுப்பின் மறைவு விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில்,
"விசிக மாநில பொருளாளர் முகமது யூசுப் அவர்கள் காலமானார் என்பதை மனம் ஏற்க மறுக்கிறது. என்னைக் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக் கொண்டவர். என்மீது மாசிலா அன்பை பொழிந்தவர். மீண்டு வருவார் என நம்பியிருந்தேன். மனம் பதைக்கிறது. ஈடு செய்ய இயலாத பேரிழப்பு. அவருக்கு செம்மாந்த வீரவணக்கம்." என பதிவிட்டுள்ளார்.