கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக ஆட்டோ சேவை - பாராட்டிய முதல்வர்
மதுரை மனிதநேயம்
கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக ஆட்டோ சேவை: போன் செய்தால் உடனே வருகை; மதுரை வாலிபரின் மனிதநேயத்தை பாராட்டி தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
கொரோனா நோயாளிகள் மட்டுமின்றி அனைத்து நோயாளிகளையும் அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு தனது ஆட்டோவில் ஏற்றிச் செல்லும் இலவச சேவையை இந்த கொரோனா ஊரடங்கு கால கட்டத்தில் சாமானியரான மதுரை ஆட்டோ டிரைவர் செய்து வருகிறார்.
மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்தவர் குருராஜ் (35) கடந்த பத்தாண்டுகளாக ஆட்டோ ஓட்டி வரும் இவர் கொரோனா காலத்தில் களமிறங்கி பல்வேறு சேவைகளை செய்து வருகின்றார். ஏற்கனவே, கொரோனா முதல் அலை காலத்தில், மாவட்ட நிர்வாகத்திடம் தன்னை தன்னார்வலராக இணைத்துக் கொண்டு, ஆட்டோ சேவையுடன், இலவசமாக மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குவது துவங்கி, தொற்று பாதித்த இடங்களுக்கு சென்று அங்குள்ள தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கு பொருட்கள் வாங்கித் தருவது வரை பலதரப்பட்ட சேவைகளை செய்தாராம்.
தற்போதைய இரண்டாம் அலை காலத்தில், முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையிலும் ஆட்டோக்களுக்கு அனுமதியற்ற சூழலில், கொரோனா நோயாளிகள் மட்டுமல்லாது அனைத்து நோயாளிகளையும் மருத்துவமனைகளுக்கு ஏற்றிச் செல்லும் இலவச வாகனமாக தனது ஆட்டோவை மாற்றி சேவையாற்றி வருகிறார். மதுரையில் உள்ளவர்கள் என்னை செல்போனில் அழைத்தால் (செல்போன் எண்: 97891 00840) இலவச உதவி வழங்குவேன்'' என்றார்.
இவரது சேவையை பாராட்டி இன்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இவருக்கு ஒரு வாழ்த்துக் கடிதம் அனுப்பி உள்ளார்.கடிதத்தில் அன்பு அன்புள்ள குருராஜ் அவர்களுக்கு வணக்கம் மதுரை அனுப்பானடியில் ஆட்டோ ஓட்டுனராக உள்ள தங்களின் தொடர்ச்சியான மக்கள் சேவை பாராட்டுக்குரியது.
முதல் அலையின் போதும் தற்பொழுது மிகக் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் இரண்டாவது அலையிலும் தங்களின் ஆட்டோ மூலம் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நோயாளிகளையும் மருத்துவமனைக்குக் கட்டணம் ஏதுமின்றி அழைத்துச் சென்று உயிர்காக்கும் உன்னதமான பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருவதை அறிந்து மகிழ்ந்தேன்.
ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று நோயாளிகளையும் ரயில் பயணிகளையும் இலவசமாக அழைத்துச் செல்லும் தன்னார்வலராக தாங்கள் மேற்கொண்டுள்ள பணி போற்றுதலுக்குரியது.
தங்கள் பணியில் ஈடுபட்டுள்ள தங்கள் நண்பர் அன்புநாதன் அவர்களும் பாராட்டுக்குரியவர் தான். போர்க்களத்தில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள போர்க்கால நடவடிக்கைகளுக்கு துணை நிற்கும் வகையில் தாங்கள் மேற்கொண்டுள்ள சேவையை அரசின் சார்பில் பாராட்டுகிறேன்.
தாங்களும் குடும்பத்தாரும் நோய் தொற்றுக்கான பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடித்து நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.