தமிழகத்தில் திட்டமிட்டப்படி இன்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கியது. குறைந்த பேருந்துகளே ஒவ்வொரு மாவட்டத்திலும் இயக்கப்படுவதால் பொதுமக்கள், பணிக்கு செல்வோர், மாணவ,மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
14ஆவது ஊதிய ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு உரிய நிதி வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற பணியாளர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொ.மு.ச , சி.ஐ.டி.யூ உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளன. அதன்படி இன்று பேருந்து வேலைநிறுத்தம் தொடங்கியது.இதில் தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலும் மிக குறைந்த அளவில் பேருந்துகள் இயங்கியதால் பணிக்கு செல்வோர், மாணவ,மாணவிகள் என அனைத்து தரப்பினரும் பாதிப்படைந்துள்ளனர்.
இதற்கிடையே அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக, ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு செல்லுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.