தமிழில் பதவிப்பிரமாணம் எடுக்க வேண்டும் என்பது தனது நீண்ட கால கனவு என புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்ட தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
புதுச்சேரி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநராக பதவி வகித்த கிரண்பேடி, அந்தப் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டாா். இதையடுத்து, தெலங்கானா மாநில ஆளுநராக உள்ள தமிழிசை சௌந்தரராஜன், புதுவை துணைநிலை ஆளுநா் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பாா் என ஜனாதிபதி மாளிகை அறிவித்தது. இந்நிலையில், தமிழிசை சௌந்தரராஜன் இன்று காலை புதுச்சேரி யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராக பதவியேற்றுக்கொண்டார்.
அவருக்கு சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்பு மற்றும் ரகசிய பாதுகாப்பு உறுதிமொழியை தமிழில் எடுத்துக்கொண்டார். பின்னர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: தமிழில் பதிவிப்பிரமாணம் எடுக்க வேண்டும் என்பது எனது நீண்ட கால கனவு என்றார்.