சில மாதங்களுக்கு முன்பு ரஜினி குடியிருக்கும் போயஸ் கார்டனிலேயே புதிய இடமொன்றை வாங்கினார் தனுஷ். அந்த இடத்தைச் சுத்தப்படுத்தி புதிதாக வீடு ஒன்றைக் கட்டத் திட்டமிட்டுள்ளார். அதற்கான பூமி பூஜை இன்று (பிப்ரவரி 10) காலை நடைபெற்றது.
அந்த பூமி பூஜையில் தனுஷ் தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டார். இதில் ரஜினியும் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார். உடல்நிலை சரியில்லாமல் வீட்டிலேயே ஓய்விலிருந்த ரஜினி, தற்போதுதான் வெளியே வந்துள்ளார். ரஜினி முகக்கவசத்துடன் இருக்கும் புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வெளியாகியுள்ளன. இந்தப் புகைப்படங்களைக் கண்ட ரஜினி ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். ஏனென்றால் ஹைதராபாத்திலிருந்து சென்னை திரும்பிய ரஜினி இப்போதுதான் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ரஜினியின் உடல்நிலை சீராகியுள்ளதால், இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாதம் தொடக்கத்தில் 'அண்ணாத்த' படப்பிடிப்பில் கலந்துகொள்வார் எனத் தெரிகிறது. மேலும், இந்த பூமி பூஜை முடிந்துவிட்டதால், 'அவெஞ்சர்ஸ்' இயக்குநர்களான ரூஸோ சகோதரர்கள் இயக்கும் 'தி க்ரே மேன்' படத்தில் நடிப்பதற்காக அமெரிக்காவுக்குப் பறக்கப் போறார் தனுஷ்.