தில்லையாடி வள்ளியம்மை நினைவு நாளின்று
''பலன் ஏதும் கருதாமல் தென்னாப்பிரிக்காவில் உயிரை தியாகம் செய்து வெற்றி கண்ட தில்லையாடி வள்ளியம்மை எனக்கு முதன் முதலில் விடுதலை உணர்வை ஊட்டிய பெருமைக்குரியவர்'' -மகாத்மா காந்தி.;
நாகை டிஸ்ட்ரிக் மயிலாடுதுறையை அடுத்த தில்லையாடி என்ற ஊரைச் சேர்ந்த முனுசாமி, மங்களத்தம்மாள் ஆகியோரது மகள்தான் தில்லையாடி வள்ளியம்மை. இவருடைய பெற்றோர்கள் தென்னாப்பிரிக்காவுக்கு கூலி ஒப்பந்த தொழிலாளர்களாக சென்று ஜோகன்ஸ்பர்க் நகரில் வேலை பார்த்தபோது அங்கு தில்லையாடி வள்ளியம்மை பிறந்தார்.
இதுக்கிடையிலே தென்னாப்பிரிக்காவில் வசித்து வந்த இந்தியர்களுக்கு ஆங்கிலேயர்களால் விதிக்கப்பட்ட வரியை எதிர்த்து காந்தியடிகள் நடத்திய அறப்போராட்டத்தில் தில்லையாடி வள்ளியம்மையும் கலந்து கொண்டு போராடினார். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்போ அவருக்கு வயசு 16.
போராட்டத்தில் ஈடுபட்ட அவரிடம் சிறை அதிகாரிகள் கடுமையாக வேலை வாங்கினர். அதனால் மெலிந்த தேகம் கொண்ட வள்ளியம்மை விரைவிலேயே நோய்தாக்குதலுக்கு ஆளானார். அவரது உடல் நிலையைக் கண்ட ஆங்கில அதிகாரிகள், அபராதம் செலுத்திவிட்டு வெளியே போகுமாறு கூறினார்கள்.
அதை ஏற்க வள்ளியம்மை மறுத்துவிட்டார். 'அபராதம் செலுத்துவது போராட்டக்காரர்களின் குணமல்ல. போராட்டம் வெற்றி பெறாமல் இங்கிருந்து செல்ல மாட்டேன்' என்று உறுதியாக கூறிவிட்டார். நாட்கள் செல்ல செல்ல அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இறுதியில் 3 மாத சிறை வாசத்துக்கு பிறகு பலகீனமான நிலையில் விடுவிக்கப்பட்ட வள்ளியம்மை வீட்டுக்கு வந்த பத்தே நாளில் மரணம் அடைந்தார்.
தன்னலம் கருதாமல் போராடிய இளம் மங்கை வள்ளியம்மையின் மறைவு காந்தியை வெகுவாக பாதித்தது. ''பலன் ஏதும் கருதாமல் தென்னாப்பிரிக்காவில் உயிரை தியாகம் செய்து வெற்றி கண்ட தில்லையாடி வள்ளியம்மை எனக்கு முதன் முதலில் விடுதலை உணர்வை ஊட்டிய பெருமைக்குரியவர்'' என காந்தி பாராட்டினார்.
-மைக்கேல்ராஜ்.