சூர்யாவின் அடுத்த படம்
சூர்யாவின் 2டி நிறுவனத்தின் 14-வது தயாரிப்பின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று ஆரம்பமானது!;
வித்தியாசமான களங்களைத் தேர்வு செய்து, தயாரித்து அதில் வெற்றியும் பெற்று வரும் நிறுவனம் 2டி. '36 வயதினிலே' படம் தொடங்கி சமீபத்திய 'சூரரைப் போற்று' படம் வரை இந்த நிறுவனத்தின் வித்தியாசமான கதைத் தேர்வு அனைவருக்கும் தெரியும். தற்போது தங்களுடைய 14-வது தயாரிப்பை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது சூர்யாவின் 2டி நிறுவனம். இந்தப் படமும் பார்வையாளர்களுக்குப் புதுவிதமான அனுபவத்தைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் இன்று ஆரம்பமானது. இதில் படக்குழுவினருடன் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.வெங்கட்ராமன், தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க செயலாளர் ஆர்.ரவி கிருஷ்ணன், இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், சக்தி பிலிம் பேக்டரி B.சக்திவேலன், கலரிஸ்ட் பாலாஜி கோபால், இயக்குனர் ஜே. ஜே ஃபிரடெரிக் உள்ளிட்ட பலர் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கலந்துக் கொண்டனர். இந்தப் படத்தில் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் இறுதிப் போட்டி வரை வந்து, அனைவரது மனதையும் கொள்ளைக் கொண்ட ரம்யா பாண்டியன் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அவருடன் இணைந்து பல்வேறு படங்களில் தன் நடிப்பால் முத்திரை பதித்து வரும் வாணி போஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், இந்தப் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமாகிறார் நடிகர் மித்துன் மாணிக்கம். இவர்களுடன் இணைந்து 'கோடங்கி' வடிவேல் முருகன், செல்வேந்திரன் ஆவுடையப்பன் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் அரிசில் மூர்த்தி. பல்வேறு படங்களுக்கு தன் கேமரா கோணங்களால் அழகூட்டிய ஒளிப்பதிவாளர் சுகுமார் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரியவுள்ளார். தன் குரலால் கிறங்கடித்த க்ரிஷ், இந்தப் படத்துக்கு இசையமைக்கவுள்ளார். தன் இசையாலும் கிறங்கடிப்பார் என்று எதிர்பார்க்கலாம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் இன்று சென்னையில் தொடங்கியது.
- மைக்கேல்ராஜ்