சசிகலா விடுதலையில் மாற்றம் இருக்காது: வழக்கறிஞர்
என்ன உடல்நிலையில் இருந்தாலும் அவரை விடுதலை செய்ய வேண்டியது சட்டம், எனவே சசிகலா விடுதலையில் மாற்றம் இருக்காது -சசிகலா தரப்பு வழக்கறிஞர்;
சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 14 தேதி உச்சநீதிமன்றம் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவருக்கும் நான்கு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதமும் விதித்தது. சுதாகரன் தரப்பில் கடந்த மாதம் அபராதத் தொகையான ரூ.10கோடியே 10 ஆயிரத்தை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.
பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா 2021ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி விடுதலையாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது, இதனைத் தொடர்ந்து, சசிகலாவுடன் இருந்த இளவரசி மற்றும் 2 பெண் கைதிகள், அதிகாரிகள் உள்பட 8 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட உள்ளது. பரிசோதனை முடிவு வரும் வரை 8 பேரை தனிமைப்படுத்தவும் சிறைத்துறை திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி சசிகலா வரும் 27ம் தேதி விடுதலை செய்யப்படுவார், என்ன உடல்நிலையில் இருந்தாலும் அவரை விடுதலை செய்ய வேண்டியது சட்டம், எனவே சசிகலா விடுதலையில் மாற்றம் இருக்காது என சசிகலா தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளனர்.