பென்னிகுக் - சூரரைப் போற்று

நான் இந்த பூமிக்கு வருவது ஒரு முறை மட்டுமே. ஆகையால் நான் வந்து சென்றதன் அடையாளமாக மக்களுக்கு ஏதேனும் செய்ய நினைக்கிறேன். அந்த அணை கட்டப்பட்டால், அதனால் பல லட்சக்கணக்கான நிலங்கள் பாசன வசதி பெறும். லட்சக்கணக்கான மக்களின் குடிநீர் தேவை பூர்த்தியாகும். எனவே நான் என் சொந்தத் பணத்தில் அணையைக் கட்டப் போகிறேன் -ஜான் பென்னிகுக் .;

Update: 2021-01-15 12:52 GMT

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இராணுவப்பணிப் பொறியாளராக இந்தியாவிற்கு வந்தவர் கர்னல் பென்னி குக். அவருடைய 179 வது பிறந்ததினத்தை கொண்டாடும் வேளையில், அவரின் தன்னலமற்ற தியாகத்தையும், அவர் செய்த மகத்தான பணியையும் நன்றியுடன் நினைவு கூறுவோம். மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் பெரியாறு என்ற ஆறாக ஓடி வீணாகக் கடலில் சென்று கலந்தது.  இதன் குறுக்காக ஒரு அணையைக் கட்டி மலையின் வடக்குப் பகுதிக்குத் திருப்பி விட்டால் வறண்டுள்ள நிலங்கள் பயனுள்ள விளைநிலங்களாக மாறிவிடும் என்று திட்டமிட்டார்.

இதற்கான திட்டத்தை ஆங்கிலேய அரசின் பார்வைக்கு வைத்து அனுமதி பெற்றார். எழுபத்தைந்து இலட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 1895 ஆம் ஆண்டில் அக்டோபர் 11 ஆம் தேதியில் அப்போதைய சென்னை மாகாண அரசின் கவர்னர் வென்லாக் முன்னிலையில் அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. இந்த பணிகள் தொடங்கப்பட்டு நிறைவடைவதற்குள் அவர் சந்தித்த சவால்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல , ஏராளம்.


வீணாக கடலில் கலந்த தண்ணீரை மேற்கே தமிழகத்தை நோக்கி திருப்பினால், வறட்சியின் கோரப்பிடியில் சிக்கிக் கொண்டிருந்த ஐந்து மாவட்டங்கள் வளம் பெறும் என்பதை தீர்க்கமாக சிந்தித்தார். 300 ஆண்டுகளுக்கு முன்னர் அன்றைய சேதுபதி மன்னர்கள் காலத்திலும், அதற்கு அடுத்து வந்த பிரிட்டிஷ் அரசாலும்,கிழக்கு நோக்கி செல்லும் முல்லை ஆற்றின் போக்கை தடுத்து அதை மேற்கு நோக்கி, தமிழ்நாட்டை நோக்கித் திருப்ப ஒரு திட்டம் போடப்பட்டது. அருமையான அந்தத் திட்டம் ,திட்டம்  காகிதத்தில் எழுதப்பட்டதோடு  நின்றுவிட்டது. காரணம், அந்தத் திட்டத்தில் இருந்த மிகக் கடினமான சவால்கள்.

இப்படியான ஒரு சூழ்நிலையில் சவால்களை உடைத்து அணையை சாத்தியமாக்கும் ஒரு செயல் வீரனை  பிரிட்டீஷ் அரசு  தேடிக் கொண்டிருந்தது.

1885 களில் சென்னை மாகாணத்தில் இருந்த பென்னி குவிக்கிடம் ஆங்கிலேய அரசு இந்த பொறுப்பை ஒப்படைத்தது. அவருக்கு கடிதம் அனுப்பியது. "மிஸ்ட்டர்.ஜான் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில்,ஒரு அணையைக் கட்ட பிரிட்டிஷ் அரசு முடிவு செய்துள்ளது.அதை நீங்கள் தான் செய்ய வேண்டும். உடனடியாக மதுரைக்கு வரவும்." என குறிப்பிட்டிருந்தது.

உடனே மதுரைக்கு கிளம்பினார் பென்னி குவிக். அவரிடம் அணை கட்டும் திட்டத்திற்கான வரைவு உட்பட பல விவரங்கள் தரப்பட்டது. 1887 ல் அணை கட்டும் பணி தொடங்கியது. அந்தப் பணிக்கு எந்தவொரு பொருள் தேவைப்பட்டாலும், அந்த பொருள் சிறியதோ, பெரிதோ அது மதுரையில் இருந்து தான் வர வேண்டும் என்ற நிலை அன்று இருந்தது.  கடுமையான காட்டுப் பகுதியின் வழியாக, வர பல நாட்களாகும். இப்படிப்பட்ட  சூழ்நிலையில் அணை கட்டும் பணி தொடங்கியது.

எக்காரணம் கொண்டும் அணை கட்டும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களைத் துன்புறுத்தக் கூடாது. அவர்களுக்கு நியாயமான சம்பளம் வழங்க வேண்டும். நமக்கு இருக்கிறதோ இல்லையோ, தொழிலாளர்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருந்தார் பென்னி குவிக்.

அணை கட்டும் பணியும் வேகமாக வளர்ந்தது. பாதி அணைகட்டி முடிவடைந்த நிலையில் காட்டில் கடுமையான மழை பெய்தது. அந்த மழையில் பாதி கட்டப்பட்ட அணை உடைந்து, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. எல்லாம் தரைமட்டமானதால்  மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும் என்ற நிலை வந்தது. மனம் தளராத பென்னி குவிக் மீண்டும் தொடங்கினார்.

ஓரளவு பணிகள் நடை பெற்று வந்த சமயத்தில் அணைக்கான அடுத்த பிரச்னை ஆரம்பமானது. மிகப் பெரும் யானைக் கூட்டம் வந்து அணையில் முட்டி மோதி உடைத்துப் போட்டன. இரண்டாவது முறையும் துவங்கிய இடத்திலேயே பூஜ்ஜியத்தில் வந்து நின்றார் பென்னிகுவிக். மூன்றாம் முறை பணியைத் தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பித்த போது, பென்னிகுவிக்கின் படைகளை மலேரியா தாக்கியது.

எந்த விதமான வசதிகளும் இல்லாத, முறையான பாதை கூட இல்லாத அடர்த்தியான வனப்பகுதி, வன விலங்குகள், மலேரியா போன்ற கொள்ளை நோய்களைப் பரப்பும் கொசுக்கள், அட்டைப் பூச்சிகள்.. இப்படி தொடர்ச்சியான துன்பங்களைப் பார்த்த பிரிட்டீஷ் அரசு,  அணை கட்டும் பணியை நிறுத்தி விடலாம் என்று முடிவு செய்து பென்னிகுவிக்கை திரும்ப அழைத்தது.

சென்னையில் வைத்து நடந்த பிரிட்டீஷ் அதிகாரிகள் கூட்டத்தில் பென்னிகுவிக்கிடம் அணை கட்டும் பணியை அப்படியே நிறுத்திவிட்டு, நீங்கள் வடஇந்தியாவில் பணிக்குச் செல்லுங்கள் என்று உத்தரவிட்டனர். ஆனால் அந்த உத்தரவை பென்னிகுவிக் உறுதியாக மறுத்துவிட்டார்.

"நான் இந்த பூமிக்கு வருவது ஒரு முறை மட்டுமே.ஆகையால் நான் வந்து சென்றதன் அடையாளமாக மக்களுக்கு ஏதேனும் செய்ய நினைக்கிறேன். அந்த அணை கட்டப்பட்டால், அதனால் பல லட்சக்கணக்கான நிலங்கள் பாசன வசதி பெறும். லட்சக்கணக்கான மக்களின் குடிநீர் தேவை பூர்த்தியாகும். எனவே நான் என் சொந்தப்  பணத்தில் அணையைக் கட்டப் போகிறேன்"  என்று கூறிவிட்டு வெளியேறினார்.

வெளியே வந்தவர், உடனடியாக தன் சொந்த நாடான இங்கிலாந்துக்கு விரைந்தார். அங்கு சென்று தனக்கு சொந்தமானது என்றிருந்த அனைத்தையும் விற்றார். தன் பாட்டனார் தனக்குத் தந்த வீட்டையும் விற்றார். ஓரளவிற்குப் பணம் கிடைத்தது. எடுத்துக் கொண்டு மதுரைக்கு மீண்டும் வந்தார்.

மீண்டும் அணையைக் கட்டும் பணியைத் தொடங்கினார். இம்முறை இயற்கை ஒத்துழைத்தது. அணை வேகமாக கட்டி முடிக்கப்பட்டது. கடல் மட்டத்தில் இருந்து 2980 அடிகள் உயரத்தில், அடர்ந்த காட்டின் நடுவே, முல்லை என்ற ஒரு காட்டாற்றின் போக்கை மாற்றிக் கட்டப்பட்டது.  146 அடிகள் கொள்ளளவுடன்,  1895 ல் முல்லைப் பெரியாறு அணை கம்பீரமாக எழுந்து நின்றது. இன்றளவும் தேனி, திண்டுக்கல், மதுரை , சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் பலன் பெறுகின்றன. விவசாயத்திற்கும், குடிநீருக்கும் மக்களின் வாழ்வாதாரத்திறக்கும் பயனுள்ளதாக விளங்குகிறது.  

தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் இருக்கும் பல விவசாயக் குடும்பங்களின் வீடுகளில் பென்னிகுக் படம் வைக்கப்பட்டுள்ளது.  தேனி மாவட்டத்தில் பாலார்பட்டி, கூழையனூர் போன்ற ஊர்களில் பென்னிகுக் நினைவைப் போற்றிட ஆண்டு தோறும் கிராமத்துத் தெய்வங்களை வணங்குவது போல் பொங்கல் வைத்து வழிபடும் வழக்கம் இன்றும் உள்ளது. தமிழ்நாட்டில் தேனி மற்றும் மதுரை மாவட்டத்தில் சில விவசாயக் குடும்பத்தினர் வீடுகளில் குழந்தைகளுக்கு பென்னிகுக் என்று பெயர் வைக்கும் வழக்கம் இன்னும் இருக்கிறது.

தமிழ்நாடு அரசால் முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பென்னிகுக்கின் நினைவைப் போற்றும் வகையில் அவருக்கு சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

Similar News