ஜல்லிக்கட்டை காண மதுரை வந்த ராகுல்காந்தி

ராகுல் காந்தி - உதயநிதி ஸ்டாலின் இருவரும் ஒரே மேடையில் அமர்ந்து ஜல்லிக்கட்டை கண்டுகளித்தனர்;

Update: 2021-01-14 09:50 GMT

மதுரை அவனியாபுரத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு இவ்விழாவினை காண காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ராகுல்காந்தி வருகை தந்தார்.


தமிழர்களின் பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள,  ராகுல்காந்தி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு  இன்று பகல் 11.30 மணிக்கு வந்து சேர்ந்தார், ராகுல் காந்தி மதுரை வருகையை யொட்டி போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர். பாதுகாப்பு பலப்படுத்தப்பட்திருந்தது. ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடம், மேடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தினர். விழா மேடை முழுவதும் போலீஸ் கண்காணிப்பு வளையத்தின் கீழ் இருந்தது.

மதுரை தெற்கு வெளிவீதி, பழங்காநத்தம் ஆகியவற்றில் ராகுல்காந்திக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழர் பண்பாடு கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளோடு வரவேற்பு அளிக்கப்பட்டது. 

கார் மூலம் அவர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் அவனியாபுரம் பகுதிக்கு வந்தார். அவருக்காக ஏற்பாடு செய்திருந்த மேடையில் அமர்ந்தார். ராகுல் காந்தி உடன் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் ஒரே மேடையில் அமர்ந்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டை கண்டுகளித்தனர். அவருடன், தமிழ்நாடு காங்கிரஸ் மேற்பார்வையாளர் தினேஷ்குண்டுராவ், புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர். 

தனது மெய்காப்பாளர்களை சற்று தள்ளி நிற்க சொல்லி ஜல்லிக்கட்டை ஆர்வத்தோடு பார்த்தார். ராகுல்காந்தி கிளம்புவதற்கு முன்னர் சிறிது நேரம் பேசினார், அவரது உரையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மொழி பெயர்த்து பேசினார். தமிழகத்தின் பாரம்பரியம், மரபு பண்பாடு பெருமையளிக்கிறது, இந்தியாவின் பாரம்பரியத்தில் தமிழகத்தின் பங்கு சிறப்பானது, ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்த்தது தனக்கு ஒரு அழகான அனுபவமாக இருந்தது என்றும், அதில் ஆர்வமுடன் பங்கெடுத்த வீரர்களை பார்ப்பதற்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் கூறினார். மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு சிறப்பான வசதிகள் செய்யப்பட்டிருந்ததாகவும், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தி வருவதற்கு பாராட்டும் தெரிவித்து பேசினார். அதன்பின்னர் ராகுல்காந்தி பிற்பகல் 2 மணிக்கு மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி சென்றார்.

Similar News