எம்.ஜி.ஆர் கொண்டாடிய பொங்கல் திருநாள்

நடிகராக இருந்த போதும், முதல்வரான பிறகும் எம்.ஜி.ஆர் விரும்பிக் கொண்டாடிய பண்டிகை பொங்கல் திருநாளாகும்.;

Update: 2021-01-14 08:39 GMT

புத்தாண்டு, தீபாவளியை மற்றும் தன்னுடைய பிறந்த நாளைக்கூட பெரிதாக நினைத்து எம்.ஜி.ஆர் கொண்டாடியதில்லை. எம்ஜிஆர் கொண்டாடிய ஒரே பண்டிகை பொங்கல் தான்.

பொங்கல் அன்று, தன்னைப் பார்க்க எத்தனை பேர் வந்தாலும், அத்தனை பேரையும் முகமலர்ச்சியுடன் சந்தித்து, பரிசுப்பணம் அளித்து மகிழ்ச்சியடைய வைப்பவர் எம்.ஜி.ஆர். அன்று, தன்னிடம் வேலை பார்ப்பவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்கி, விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கி மகிழ்வார்.

அவருக்கு தீபாவளி அன்று வாழ்த்து சொன்னால், புன்சிரிப்போடு ஏற்றுக் கொள்வார். கடவுள் மறுப்பு கொள்கை கூட்டத்தில் இருந்தாலும், யார் மனதையும் புண்படுத்தி பேசியதில்லை. ஜனவரி 17 அன்று எம்ஜிஆர் பிறந்தநாள், அவரது பிறந்த நாளை, அவர் இருந்தவரை கொண்டாடியது இல்லை. முதல்வரான பிறகு, புத்தாண்டில் அதிகாரிகளை சந்திப்பது மரபு என்பதால். சந்தித்து வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வார்.

பொங்கல் பண்டிகையை எப்போதுமே உற்சாகமாக கொண்டாடுவார். நடிகராக இருந்த போது ராமாவரம் தோட்டம், சத்யா ஸ்டூடியோ போன்ற இடங்களில் பொங்கல் பண்டிகையை கொண்டாடியவர், தலைவரான போது அ.தி.மு.க., தலைமை அலுவலகமாக உள்ள சத்தியபாமா திருமண மண்டபம், திருநகர் கட்சி அலுவலகம் என, எல்லா இடத்திலும், அனைத்து தரப்பினரையும் பொங்கல் அன்று சந்திப்பார்.

பொங்கல் அன்று முதல் வேலையாக தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவரையும் காலையிலேயே சந்திப்பார். இதற்காக, ராமாவரம் தோட்டத்திற்கு குடும்பத்தோடு பணியாளர்கள் அனைவரையும் வர வைப்பார். அன்போடு வரவேற்று உணவு கொடுத்து உபசரிப்பார். எல்லாருக்கும் நல்ல துணிமணிகளுடன், நிறைய பணமும் கொடுத்து அன்போடு அனுப்புவார்.

அடுத்து சத்தியபாமா திருமண மண்டபத்தில், இன்னும் உற்சாகமாக இருப்பார். ஊழியர்களுக்கு, சாக்கு போட்டி, ஸ்பூன் ரேஸ் போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடத்தி மகிழ்விப்பார். இதே போல ஸ்டூடியோ, தி.நகர் கட்சி அலுவலகம் சென்று, அங்குள்ளவர்களையும் மகிழ்ச்சிக்குள்ளாக்குவார். எங்கே போனாலும், எம்.ஜி.ஆரை காண மக்கள் கூட்டம் கூடிவிடும். வந்தவர்களை அருகில் அழைத்துப் பேசுவார்.

கையில் இருக்கும் பணத்தை பிரித்து நிறைய கவர்களில் போட்டு வைத்துக் கொள்வார், அன்று சந்திப்பவர்களுக்கெல்லாம் பரிசாக வழங்குவார். அதை பரிசளித்து செலவிடும் வரை துாங்கமாட்டார். இன்றும் எம்.ஜி ஆரின் நினைவுகளோடு பொங்கலை பலர் கொண்டாடுகின்றனர்.

Similar News