எழுத்தாளர் இளவேனில் மறைவுக்கு தமுஎகச அஞ்சலி

எழுத்தாளர் இளவேனில் மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச), திரையுலகினர், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர், அஞ்சலிக்கு பிறகு இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.;

Update: 2021-01-03 17:01 GMT

கவிஞர், விமர்சகர், எழுத்தாளர், நாவலாசிரியர், பத்திரிகையாசிரியர், திரைப்பட இயக்குநர் எனப் பன்முகம் கொண்ட தோழர் இளவேனில் முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் முன்னத்தி ஏர்களில் ஒருவர். அவர் நடத்திய 'கார்க்கி' சிற்றிதழ், முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் கொடிக்கப்பலாகவே திகழ்ந்தது. அவரது மறைவுக்கு தமுஎகச அஞ்சலி செலுத்தியது.

தொழிலாளர் இயக்கத்தின் மகத்தான தலைவர்களில் ஒருவரான தோழர் வி.பி.சிந்தன் அவர்களின் அடியொற்றி இடதுசாரி இயக்கத்திற்குள் வந்தவர். தமுஎகசவின் முன்னோடி இயக்கமான 'மக்கள் எழுத்தாளர் சங்கத்தில்' தோழர் ச.செந்தில்நாதனோடு இணைந்து களமாடியவர். மக்கள் எழுத்தாளர் சங்கக்கூட்டங்களில், அதைத்தொடர்ந்து எழுதப்பட்ட பல கட்டுரைகளில் எழுத்தாளர் ஜெயகாந்தன் மீதாக அவர் முன்வைத்த கூரிய விமர்சனங்கள் முற்போக்கு இலக்கியத் திறனாய்வின் பிரிக்கமுடியாத ஒரு முக்கியமான பகுதியாகும்.

ஆழமான தர்க்கமும், மூர்க்கமான முன்வைப்புகளும், உணர்வாவேசமும், வசீகரமும் கொண்ட எழுத்துநடை அவருடையது. 1960,70களில் ஒரு பெரும் இளைஞர் பட்டாளத்தை தனது எழுத்தின் வாயிலாக இடதுசாரி சிந்தனைக்குத் திருப்பியவர் அவர். கவிஞர் இன்குலாப்பின் முதல் கவிதைத் தொகுப்பிற்காக அவர் எழுதிய முன்னுரையான "மகரந்தங்களிலிருந்தும் துப்பாக்கி ரவைகள்" முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் போர்ப்பிரகடனமாகவே அன்றைக்கு வரித்துக்கொள்ளப்பட்டது.

மிகச்சிறந்த ஓவியர் அவர்; அவரது ஒயிலான எழுத்துருக்களும் ஓவியங்களும் பலரது நூல்களுக்கு முகப்பாய் விளங்கின. மாமன்னன் அசோகரது கலிங்கப்போரின் வரலாற்றுப்பின்னணியில் அண்மையில் அவர் எழுதிய "காருவகி" நாவல், தமிழின் வரலாற்றுப் புதினங்களின் வரிசையில் ஒரு முக்கியமான வரவு.

எழுத்து என்பதைத்தவிர வேறு எவ்வித பணிகளையும் மேற்கொள்ளாதவர், தனது வாழ்வில் பல இன்னலான நாட்களை கடந்துவந்தவர். தொடர்ந்து முற்போக்கு இயக்கத்தோடு தனது தொடர்புகளை அவர் கொண்டிருக்காவிடினும் தமது கலை இலக்கியக்குறிக்கோள்களில் என்றுமே பிறழ்ந்திராத தோழர் இளவேனில் இன்றைக்கு இல்லாது போயிருக்கிறார். புத்தாண்டு தோழர் இளவேனிலின் மரணச்செய்தியோடு தொடங்கியுள்ளது. அவருக்கு நமது அஞ்சலிகள். அவரது பிரிவால் வாடும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் நண்பர்கள் தோழர்கள் அனைவரது துயரிலும் தமுஎகச பங்கேற்கிறது என தமுஎகச மாநிலத்தலைவர் மதுக்கூர் இராமலிங்கம் மற்றும் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆழ்ந்த இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்கள்.

Similar News