தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி

Update: 2020-12-23 08:42 GMT

தமிழகத்தில் வரும் ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தமிழக அரசு அனுமதித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது,தற்போது காெரோனா பெருந்தொற்று காரணமாக, வரும் 2021-ம் ஆண்டில், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி அளிக்கிறது. ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது.

எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது. மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திறந்த வெளியின் அளவுக்கேற்ப தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில், அதிகபட்சம் 50 சதவிகித அளவுக்கு மிகாமல் பார்வையாளர்கள் கலந்து கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறது. பார்வையாளர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுவார்கள்.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மாடுபிடி வீரர்களாக பங்கேற்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனைக்கூடத்தில் கோவிட் - 19 தொற்று இல்லை என சான்று பெற்றிருக்க வேண்டும்.மேலும், நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக பங்கேற்கும் அனைவரும் முகக்கவசம் அணிவதும் மற்றும் தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பதும் கட்டாயமாக்கப்படுகிறது.இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News