பொங்கல் பரிசு திட்டத்தின் வரவேற்பு பிடிக்காமல் குற்றம் சாட்டுகிறார் ஸ்டாலின் : முதல்வர் பழனிச்சாமி
கொரோனா தொற்றை தடுக்க மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும். ஆனால் தற்போது பெரும்பான்மையான மக்கள் மாஸ்க் அணிவது இல்லை என தூத்துக்குடியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
நாகர்கோவிலுக்கு செல்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேசியதாவது, அதிமுக அரசு மீது தமிழக ஆளுனரிடம், ஸ்டாலின் புகார் பட்டியல் அளித்துள்ளார். ஆனால் திமுகவினர் மீதான ஊழல் வழக்குகள் தான் இன்னும் நிலுவையில் உள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இருப்பதை மறைக்க இது மாதிரி பொய்யான குற்றச்சாட்டை எங்கள் மீது சொல்கிறார். 200 தொகுதி மட்டுமல்லாது 300 தொகுதியை கூட இலக்காக திமுக தலைவர் ஸ்டாலின் வைக்கலாம் மக்கள் வாக்களிக்க வேண்டும்.மக்களிடம் பொங்கல் பரிசு திட்டம் வரவேற்பை பெற்றுள்ளதால் அதை கொள்ள முடியாமல் திமுக தலைவர் ஸ்டாலின் எங்கள் மீது பொய்யான குற்றாச்சாட்டை சுமத்தி வருகிறார்.
நாட்டு மக்களுக்காக திமுகவினர் உழைக்கவில்லை அவர்கள் வீட்டு மக்களுக்காக உழைக்கிறார்கள். கருணாநிதி ஸ்டாலினை முதல்வராக்க நினைத்தார். ஸ்டாலின் உதயநிதியை முதல்வராக்க ஆசைப்படுகிறார். திமுக கூட்டணியில் உள்ளவர்களுக்கு சுதந்திரம் இல்லை. அவரை எதிர்த்து கருத்து கூறவே பயப்படுகின்றனர். ஆனால் எங்கள் கூட்டணியில் இருப்பவர்கள் சுயமாக சுதந்திரமாக பேச கூடியவர்கள்.திமுகவினர் அதிமுக அரசு மீது பொய்யான தகவல்களை கூறி மலிவான விளம்பரத்தை தேடுகிறார்கள். அது திமுகவின் கைவந்தகலை. கொரோனா தொற்றை தடுக்க மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் தற்போது பெரும்பான்மையான மக்கள் மாஸ்க் அணிவது இல்லை என்றார்.