ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் வளர்க்க வேண்டிய மூலிகை கற்றாழை - பாப்பான்குளம் மருத்துவர் இராமசாமி

கற்றாழை, கத்தாளை, குமரி, கன்னி என்றெல்லாம் அழைக்கப்படும் கற்றாழையில் பலவகைகள் உண்டு. செங்கற்றாழை, சோற்று கற்றாழை, வெண் கற்றாழை, பேய் கற்றாழை, கருங்கற்றாழை, வரிக்கற்றாழை என்று உண்டு. ஆனால் பெரும்பாலும் நாம் ஆலோவேரா என்று அழைக்கப்படும் சோற்றுக்கற்றாழையைத்தான் பயன்படுத்தி வருகிறோம். ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயமாக இருக்க வேண்டிய மூலிகை கற்றாழை.;

Update: 2020-12-21 12:13 GMT

கற்றாழையில் உள்ள புரதங்கள் தேகத்தில் உண்டாகும் வயோதிக மாற்றத்தைத் தள்ளிப்போடும் எனவே குமரியை தின்றால் குமரனாகலாம் என்ற தமிழ் பழமொழி கற்றாழையை சிறப்பித்து சொல்லப்பட்டது. அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் கற்றாழை பெருமளவு பயன்படுத்தப்படுகின்றது.

கற்றாழையில் வைட்டமின்கள், அமினோ அமிலங்கள், தாது உப்புகள், 70 க்கும் அதிகமான புரதச்சத்துகள் நிறைந்திருக்கின்றன. கற்றாழையின் மடலில் 4 லிருந்து 25 சதவீதம் வரை அலோயின் அலோசோன் என்னும் வேதிபொருள்கள் இருக்கின்றன.

மேலே உள்ள பச்சை தோலை முள்ளை நீக்கி நன்றாக சீவிய பின்பு, உள்ளிருக்கும் நுங்கு போன்ற பகுதியை ஆறேழு முறை சுத்தமான நீரில் கழுவிய பின்னர், மோருடன் கலந்து, உப்பும் சீரகத்தூளும் சேர்த்து மத்தை கொண்டு நன்றாகக் கடைந்தால் குடிப்பதற்கு ஏற்ற கற்றாழைப் பானம் கிடைக்கும். குளிர்ச்சியைத் தரக்கூடிய இந்தப் பானத்தை கோடை காலத்தில் குடித்துவர, உடல் வெப்பத்தைக் குறைக்கும்.வயிற்றுப் புண்களைக் குறைக்கும். கற்றாழையில் இருக்கும் சத்துகள். உடலை பலப்படுத்துவதோடு , அழகையம் அள்ளிதருகிறது. உடலில் இருக்கும் கழிவுகளை சீராக வெளியேற்ற கற்றாழை பயன்படுகிறது. உடல் இளமையாக இருக்கும். எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சருமத்தை பளபளப்பாக வைப்பதிலும் மிருதுவாக்குவதிலும் கற்றாழை நன்கு பயன்தருகிறது.

சிலருக்கு சருமத்தில் அரிப்பு, சரும நோய், அதிக உஷ்ணத்தால் கட்டிகள், கொப்புளங்கள். பருக்களால் பள்ளங்கள். அம்மை வந்த வடுக்கள் போன்றவை அடையாளங்களாக இருக்கும். இவர்கள் தினமும் கற்றாழை ஜெல்லை நேரம் இருக்கும் போதெல்லாம் பயன்படுத்தி வந்தால் சருமத்தில் இருக்கும் பிரச்சனைகள் தீரும்.

ஆண், பெண் இருவருக்குமே கற்றாழையின் பயன்கள் அதிகம். கூந்தல் பராமரிப்பு முதல் பாத வெடிப்பு வரை பல நோய்களை குணப்படுத்துகிறது. உள்புறம் இருக்கும் நுங்கு போன்ற ஜெல் பகுதியை தொடர்ந்து ஒரு மண்டலம் தேங்காயெண்ணெயில் கற்றாழை ஜெல்லை கலந்து தலையில் தடவி வந்தால் கூந்தல் அடர்த்தியாக நீளமாக கருகருவென்று பொலிவாக இருக்கும். குளிர்ச்சி அதிகம் என்பதால் குளிர்காலங்களில் தவிர்த்தல் நல்லது. இந்த ஜெல்லை முகத்தில் தடவினால் முகத்தை பொலிவாக மாற்றலாம். முகத்தில் இருக்கும் பருக்கள், கருந்திட்டுகள்,கருமை நிறம், வறட்சி போன்ற பிரச்சனைகளை இல்லாமல் செய்யும்.

பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை, கருப்பையில் பிரச்சனை, கோளாறுகள் என அதிகரித்துவரும் குறைபாட்டுகளை கற்றாழை சரிசெய்ய உதவுகிறது. கற்றாழையின் உலர்ந்த பாலுக்குக் கரியபோளம், மூசாம்பரம் போன்ற பெயர்கள் உள்ளன. கருப்பையில் உண்டாகும் தொந்தரவுகளுக்கு முக்கிய மருந்தாக கரியபோளம் பயன்படுகிறது.

ஆசனவாய் நோய்களைத் தடுக்க உதவும் குமரி எண்ணெயம், கருப்பையை வலுவாக்கும் குமரி லேகியமும் தயாரிப்பதில் கற்றாழை முக்கிய பங்கு வைக்கின்றது.

இல்லற வாழ்வில் ஈடுபடும் ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைபாட்டை சரி செய்ய கற்றாழை ஏற்றது. இதனால் வரும் குழந்தையின்மை பிரச்சனை தவிர்க்கப்படும். தாம்பத்திய வாழ்க்கைக்கு இயற்கை தந்த பக்கவிளைவுகள் இல்லாத மருந்து கற்றாழை.

கற்றாழையை நன்றாக உலரவைத்து வற்றலாகவோ பொடியாகவோ உணவில் சேர்த்துவந்தால், 'முதுமையிலும் இளமை காணலாம்' எனும் காயகல்ப முறையைப் பற்றி சித்தர் தேரையர் வலியுறுத்துகிறார்.

கற்றாழையோடு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சித் தயாரிக்கப்படும் எண்ணெய்யைத் தேய்த்துத் தலை முழுக, நல்ல உறக்கத்தைக் கொடுக்கும். தலைமுடி வளர்ச்சிக்கும் நல்லது.

அதிவெப்பம் காரணமாகக் கண்களில் உண்டாகும் எரிச்சலைக் குறைக்க, சிறுதுண்டு கற்றாழையைக் கண்களின் மீது வைத்துக் கட்டலாம்.

வாரந்தோறும் கற்றாழை சாறோடு கொஞ்சம் உப்பு சேர்த்து வாய்க் கொப்பளித்து வர பற்கள் பலமாகும். பல் ஈறுகளிலிருந்து வடியும் ரத்தம் நிற்கும். நெருப்பு சுட்ட புண்களுக்கு வாழை இலையோடு சேர்த்து, கற்றாழையைப் பயன்படுத்தலாம். கை, கால் எரிச்சல், சிறுநீர் எரிச்சலைக் குறைக்கும். கற்றாழையின் பலன்களை சொல்லிக்கொண்டே போகலாம். வீட்டிலேயே கற்றாழையை வளர்த்து பயனடைவோம்.

கட்டுரையாளர் :

- பாப்பான்குளம் மருத்துவர் இராமசாமி

Similar News