ஒலிம்பிக் வரலாற்றில் இப்படியும் ஒரு நிகழ்வு: தங்கத்தை 'தாண்டிய' நட்பு
ஒலிம்பிக் போட்டியில் இத்தாலி,கத்தார் நாட்டு வீரர்கள் தங்கப்பதக்கத்தை பகிர்ந்து கொண்டது உலகையே வியப்பாக்கியுள்ளது.;
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் நடந்த மறக்கமுடியாத அரிய சம்பவம் இது. உயரம் தாண்டுதலில் சமமாக இருந்த கத்தார் மற்றும் இத்தாலி வீரர்கள் தங்கத்தைப் பகிர்ந்த கொண்டனர்.
தற்போது நடைபெற்றுவரும் ஒலிம்பிக் ஆண்கள் உயரம்தாண்டும் போட்டியில் இத்தாலி நாட்டின் ஜியன்மார்கோ தம்பேரி-க்கும், கத்தார் நாட்டைச்சேர்ந்த முதாஸ் ஈஸா பார்ஷிம் - க்கும் இடையே நடந்த இறுதி சுற்றில் இரண்டு பெரும் 2.37மீ தாண்டி சம நிலையில் இருந்தனர். மீண்டும் மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டும் 2.37மீ க்கு மேல் இருவரும் தாண்டவில்லை. ஒலிம்பிக் போட்டி ஏற்பாட்டாளர்கள் மீண்டும் இருவருக்கும் ஒரு வாய்ப்பை வழங்கியது.
ஆனால், கால்முடியாமல் இத்தாலி நாட்டவர் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். முறையே தங்கப்பதக்கம் கத்தார் நாட்டவருக்கு கிடைத்துவிடும். ஆனால், கத்தார் நாட்டவரோ ஒலிம்பிக் நடுவரிடம், 'நானும் விலகுவதாக அறிவித்தால், பதக்கம் இருவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படுமா என்று கேட்கிறார்.
நடுவர் குழுவும் ஆலோசித்து தங்கப்பதக்கத்தை பகிர்ந்து அளிக்க சம்மதம் தெரிவித்ததும் யோசிக்காமல் நானும் போட்டியில் இருந்து விலகுவதாக கத்தார் வீரர் அறிவித்தார். இதனால், தங்கம் இருவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது.
விளையாட்டில் ஆரோக்கியமான போட்டியை தவிர ஜாதி, மதம், இனம், நாடு எதுவும் இங்கு தடையில்லை என்று நிரூபித்த தருணம். இருவரும் கட்டித்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டனர். ஆனந்தக்கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.