மதுரையில் 4வது சர்வதேச கிராண்ட் மாஸ்டர் சதுரங்கப் போட்டி
கார், பைக்குகள் உட்பட ரூ. 44 லட்சம் மதிப்புள்ள பரிசுகள் அறிவிப்பு
மதுரையில் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டிகள் டிசம்பரில் நடக்கவுள்ளன. இதற்கு தமிழ்நாட்டில் முதன்முறையாக 44 லட்சம் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
உலக மற்றும் இந்திய செஸ் கூட்டமைப்பு, தமிழ்நாடு செஸ் அசோசியேசன், மதுரை மாவட்ட செஸ் சர்க்கிள் இணைந்து 4வது சர்வதேச ஈஸ்ட் ஏதென்ஸ் கிராண்ட் மாஸ்டர் ஓப்பன் செஸ் போட்டிகளை நடத்துகின்றன. டிசம்பர் 24 - 31 வரை மதுரை வல்லப வித்யாலயா பள்ளி மற்றும் அமிக்கா அரங்குகளில் இப்போட்டிகள் நடக்க விருக்கின்றன.
20 சுற்றுக்களாக நடக்கவுள்ள போட்டிகளில், இந்தியா மட்டுமின்றி 25 நாடுகளில் இருந்து 600க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள், கிராண்ட் மாஸ்டர்கள் மற்றும் இன்டர்நேஷனல் மாஸ்டர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு சதுரங்க கூட்டமைப்பு இணைச்செயலாளர் மற்றும் இயக்குனர் பிரகதீஷ் கூறியதாவது; “சவுத் ஏதென்ஸ் சதுரங்க போட்டிகள் 2019 முதல் நடைபெற்று வருகிறது. கொரோனா சமயத்தில் 4 ஆண்டுகளாக போட்டிகள் நடைபெறாத நிலையில், தற்போது 44 லட்சம் பரிசுத்தொகையோடு இந்தப் போட்டிகள் நடக்கவுள்ளன. மேலும், 2 கார்கள், 6 பைக்குகள், 100 சைக்கிள்களும் பரிசாக வழங்கப்பட உள்ளன.
மேலும், முதல் பரிசாக ரூ.3 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.2 லட்சம் மற்றும் ஒவ்வொரு பிரிவு வெற்றியாளருக்கும் ரூ.1 லட்சம் பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.
உலகிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் ஒரே ஆண்டில், சென்னை மற்றும் மதுரையில் இரண்டு கிராண்ட் மாஸ்டர் சதுரங்க போட்டிகள் நடக்கின்றன. இந்திய இளம் வீரர்களை உலகத்தர சாம்பியன்களாக உருவாக்கும் நோக்கில் இந்தப் போட்டிகள் உலகத்தரத்தோடு நடத்தப்பட உள்ளன” என்றார்.
இதில் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு செயலாளர் தேவ் படேல், தமிழக செஸ் கூட்டமைப்பு செயலாளர் ஸ்டீபன் பாலசாமி, மாநில பொருளாளர் சீனிவாசன், மதுரை வல்லபா வித்யாலயா பள்ளி செயலாளர் அருண், மதுரை செஸ் கூட்டமைப்பு செயலர் உமா மகேஸ்வரன், கிராண்ட் மாஸ்டர் போட்டிக்கான இயக்குநர் பிரகதீஷ், செயலாளர் லோகேஷ் ஆகியோர் போட்டிக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.