புரோ நோட்டில் கையெழுத்திட மக்கள் நீதி மய்யம் தயாராக உள்ளது, கையெழுத்து பெற பொதுமக்கள் தயாரா என சிவகாசியில் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் கேள்வியெழுப்பினார்.
தமிழகத்தை சீரமைப்போம் என்ற தலைப்பில் விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்க்கொண்டு வரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் சிவகாசியில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது தனியார் திருமண மண்டபத்தில் பட்டாசு தொழிலாளர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு மக்கள் நீதி மையம் ஏற்பாடு செய்திருந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் பட்டாசு தொழிலாளர் களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது,
தமிழகத்தில் மக்கள் தான் தலைவர்களை நல்லவர்களாக வைத்திருக்க வேண்டும். மக்கள் நீதி மையம் சுத்தமான அரசை கொடுக்க வேண்டும் என்ற திட்டத்தோடு வந்திருக்கிறோம்.பட்டாசு வெடிப்பதால் மாசு ஏற்படுகிறது என்பதை உணர்கிறோம் ,ஆனால் பட்டாசு வெடிப்பதால் ஒரு சதவீதம் மட்டுமே காற்றில் மாசு ஏற்படுகிறது. அதை விட காற்றில் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை ஊழல் பணம் பெற்றுக்கொண்டு செயல்பட அனுமதிக்கின்றனர் என குற்றம் சாட்டினார் .தொடர்ந்து பேசிய கமலஹாசன், பட்டாசு தொழிலுக்கு மாற்றுத் திட்டத்தை கொண்டுவரவேண்டும் எனவும் அந்த திட்டத்தை அரசு தான் கொண்டுவர முடியும் என்றார்.
தற்போது அதிமுகவில் எஜமான் இறந்த பிறகு சாவிக்கு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள் . மக்கள் திலகம் எம்ஜிஆர் எனக்கு அறிவுரை மட்டும் வழங்கவில்லை நீச்சலும் கற்றுக் கொடுத்திருக்கிறார். ஒரு சின்ன அங்குசம் தான் பெரிய யானையை கட்டுப்படுத்துகிறது அது போல தான் ஒரு அரசை மக்கள் போடும் ஓட்டு தான் கட்டுப்படுத்த முடியும். ஜாதி மதத்தால் தமிழகத்தை பிரிக்க நினைப்பவர்கள் தான் எங்கள் அரசியல் எதிரி . மேலும் நீங்கள் கும்பிடும் கோவில் நேர்மையாக இருக்க வேண்டும் . தமிழக மக்களுக்கு குடிநீர் என்பது அவர்களது உரிமை. குடிநீர் பஞ்சத்தை தீர்க்க மக்கள் நீதி மையத்தால் தான் முடியும் என்றார்.
நீங்கள் தேர்ந்தெடுக்கும் மக்கள் நீதி மையம் கட்சியின் எம்எல்ஏ விடம் புரோ நோட்டில் கையெழுத்து வாங்கி கொள்ளுங்கள். அதில் நானும் சாட்சியாக கையெழுத்து இடுகிறேன் . மக்கள் நீதி மையத்தின் சட்டமன்ற உறுப்பினர் சரியாக வேலை செய்யவில்லை என்றால் ராஜினாமா செய்து விடுவோம் என பேசிய கமல், புரோ நோட்டில் கையெழுத்திட மக்கள் நீதி மையம் தயார். கையெழுத்து வாங்க மக்கள் தயாரா ?. இவ்வாறு அவர் பேசினார் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பட்டாசு தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.