போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள் பற்றி தெரியுமா? உங்களுக்கு?

Best Post Office Scheme in Tamil-போஸ்டல் துறையில் பொதுமக்களுக்காக உன்னதமான சேமிப்பு திட்டங்கள் உள்ளது. இன்றைய சேமிப்பு நாளைய பாதுகாப்பு என்ற நோக்கில் இந்த சேமிப்பு திட்டங்களில் உங்கள் பணத்தினை முதலீடு செய்து நிலையான வட்டியினை பெறலாம். ஒரு சில திட்டங்களில் பெறப்படும்வட்டிக்கும் வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

Update: 2022-07-18 08:51 GMT

Best Post Office Scheme in Tamil

Best Post Office Scheme in Tamil-பொருளில்லாருக்கு இவ்வுலகு இல்லை என்ற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப நம் அனைவருடைய வாழ்க்கைச்சக்கரம் சுழல அச்சாணி பணம். வருமானம் என்பது சொந்தமாக தொழில் செய்து சம்பாதிக்கலாம் அல்லது தனியார் அல்லது அரசு சார்ந்த நிறுவனங்கள், அரசு வேலை மூலமாக நாம் மாதாந்திர சம்பளம் பெறுபவராகவும் இருக்கலாம்.

வரவறியாமல் செலவு செய்தால் நிலவரமெல்லாம் கலவரமாகி விடும் என்ற சொல்லுக்கு ஏற்ப நாம் அனைவருமே நம்முடைய வருமானத்திற்கு தகுந்தாற்போல் செலவுகளை செய்யவேண்டும். அப்படி சம்பாதிக்கும் பணத்தில் 10 சதவீதத்தினை நாம் மாதந்தோறும் சேமிப்பிற்கு ஒதுக்க வே ண்டும். இன்றைய சேமிப்பு நாளைய பாதுகாப்பு என்பதற்கேற்ப அது நிகழ்கால மற்றும் எதிர்கால தேவைகளுக்கு தக்க நேரத்தில் பயனளிக்கும்.

அந்த வகையில் மத்திய அரசின் போஸ்ட் ஆபீசில் பணத்தினை எவ்வாறு சேமிப்பது? எந்த கணக்கினை துவங்குவது? பற்றி விரிவாக பார்ப்போம். போஸ்ட் ஆபீஸ் துறையானது பேங்குகளைப் போல் பொதுமக்களுக்கான சேவையில் பல வகையான பயனளிக்ககூடிய சேமிப்பு திட்டங்களை தன்னகத்தே வழங்கி வருகிறது.

சேமிப்பு கணக்கு (எஸ்பி )

போஸ்ட் ஆபீஸ்களில் பேங்குகளைப் போலவே சேமிப்பு கணக்கினை துவங்கலாம். இந்த கணக்கினை தனி நபராகவோ அல்லது கூட்டாகவோ துவக்கலாம். இதற்கு 4 சதவீத வட்டியினை வழங்குகிறது. முன்பெல்லாம் குறைந்த பட்ச இருப்பு தொகை ரூ. 100 என இருந்தது. தற்போது இதில் புதியதாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறைந்த பட்ச இருப்பு தொகையானது ரூ. 500 கணக்கில் நிரந்தரமாக இருக்க வேண்டும். பேங்குகளைப் போலவே போஸ்டல் துறையும் இக்கணக்கிற்கு செக்புக், மற்றும் ஏடிஎம் கார்டுகளை வழங்குவது இதன் சிறப்பு.

கோர்பேங்கிங் சிஸ்டம் செய்யப்பட்டுள்ளதால் எந்த ஆபீசிலும் பணத்தினை செலுத்தலாம். ஆனால் பணம் எடுப்பதற்கு மட்டும் ஒரு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த கணக்கிற்கு நெட்பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங்கையும் துவக்கி கொள்ளலாம். போஸ்ட் ஆபீசில் புதியதாக சேமிப்பு கணக்கு துவங்கவேண்டும் எனில் ஆதார் அட்டை, பான்கார்டு, இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உள்ளிட்ட ஆவணங்கள்இருந்தால் போதுமானது. ஒருமுறை சேமிப்பு கணக்கு துவங்கிவிட்டால் பின்னர் எந்த திட்டத்திலும் சேரவேண்டுமாயின் அவர்கள் அளிக்கும் சிப்ஐடி யை வைத்து மீண்டும் மற்ற கணக்குகளை துவங்கி கொள்ளலாம்.

5 வருட ஆர்டி அக்கவுண்ட்

போஸ்டல் துறையானது ஆர்டி கணக்கிற்கு தற்போது 5.8 சதவீத வட்டியினை வழங்குகிறது. மாதந்தோறும் ஒரு குறிப்பிட்டதொகை கொண்டு கணக்கினை துவங்கிவிட்டால் பின்னர் மாதா மாதம் அத்தொகையினை 60 மாதங்களுக்கு தொடர்ந்து செலுத்தி வரவேண்டும். பின்னர் முடிவு தேதியன்று வட்டியுடன் அசல் தொகை சேர்த்து கணக்கினை முடித்து எஸ்பி கணக்கிற்கு மாற்றிக்கொள்ளலாம் அல்லது செக்காகவும் வாங்கிகொள்ளலாம். 15 ந்தேதிக்கு முன்னர் துவக்கும் கணக்குகளுக்கு அந்த தேதிக்குள்ளாகவே பணத்தினை கட்ட வேண்டும். இல்லாவிடில் அபராததொகையாக ரூ.100 க்கு ரூ. 1 வசூலிக்கப்படுகிறது.

டிடி கணக்கு (டைம் டெபாசிட்)

போஸ்ட் ஆபீசில் டைம் டெபாசிட் கணக்கில் வருடம், இரண்டு வருடம், 3 வருடம், 5 வருடம் என முழுத்தொகையினை நாம் டெபாசிட் செய்யலாம். இதில் 5 வருட கணக்கிற்கு மட்டும் 80 c ன் கீழ் வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

ஒரு வருட கணக்கிற்கு 5.5 சதவீத வட்டியும், 2 வருடகணக்கிற்கு 5.5%,

3 வருட கணக்கிற்கு 5.5% மற்றும் 5 வருட கணக்கிற்கு 6.7% வட்டியும் வழங்கப்படுகிறது. இந்த கணக்கிற்கும் மொபைல் பேங்க் மற்றும்நெட்பேங்க் வசதி உள்ளது.

மாதாந்திர வருமான திட்ட கணக்கு(எம்ஐஎஸ்)

மாதந்தோறும் வட்டி வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கான அரியதொரு திட்டம் இது. பெரும்பாலும் அரசு வேலைகளில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் விரும்பி சேரும் திட்டம். முதலீடு செய்யப்படும் தொகைக்கு மாதந்தோறும் 6.6% வட்டி விகித லாபம் அளிக்கப்படுகிறது.

துவங்கப்படும் தனி நபர் அவருடைய கணக்கில் ரூ.4.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். ஜாயிண்ட் கணக்கு எனில் ரூ. 9 லட்சம் வரை டெபாசிட் செய்யும் வசதி உள்ளது. ஜாயின்ட் கணக்கு துவங்கும் போது இருவரும் சம நிலையான முதலீட்டினை செய்ய வேண்டும். இத்திட்டத்தின் கால அளவு 5 வருடங்கள். மாதந்திர வட்டியினை தங்களுடைய எஸ்பி அக்கவுண்டில் வரவு வைத்து அதிலிருந்து எடுத்துக்கொள்ளலாம்.

சீனியர் சிட்டிசன் சேவிங் ஸ்கீம் (எஸ்சிஎஸ்எஸ்)

இத்திட்டத்தில் சேர்வதற்கான வயது வரம்பு 55 முதல் 60 வயது நிரம்பிய அனைவரும் இத்திட்டத்தில் சேர்ந்து கணக்கினை துவக்கலாம். இத்திட்டத்தில் டெபாசிட் செய்வோர் குறைந்த பட்ச தொகையான ரூ.1000 முதல் அதிகபட்சமாக ரூ. 15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இத்திட்டத்திலும் இருவர் சேர்ந்து ஜாயின்டாக துவங்கலாம். ஆனால் இருவரும் அந்த வயதினை எட்டியிருக்கவேண்டியது அவசியம்.80 cன்கீழ் வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது.முதிர்வு காலம் 5 வருடங்கள்.ஆண்டுக்கு 7.4% வட்டி அளிக்கப்படுகிறது.

பொதுவருங்கால வைப்பு நிதி (பிபிஎப்)

பிபிஎப் என்பது பப்ளிக் பிராவிடன்ட் பண்ட் என்பதன் சுருக்கம். இதனை பொதுவருங்கால வைப்பு நிதி எனசொல்வர். ஆண்டுக்கு 7.1 சதவீத வட்டி அளிக்கப்படுகிறது. குறைந்த பட்ச தொகை முதலீடு ஆண்டுக்கு ரூ. 500 முதல் ரூபாய் 1,50,000 வரை இத்திட்டத்தில் ஆண்டொன்றிற்கு முதலீடு செய்யலாம். ஒரே தவணையாகவோ அல்லது 12 மாதங்களில் மாதாந்திர தவணையாகவோ அந்த லி்மிட்டிற்குள் கட்டிக்கொள்ளலாம். டெபாசிட் தொகைக்கு வருமான வரி உண்டு. ஆனால் வட்டிக்கு வரி பிடித்தம் இல்லை. இதன் கால அளவு 15 வருடங்கள் ஆகும். மேலும் கணக்கை தொடர விரும்பினால் மேலும் 5ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் வசதி உண்டு.

தேசிய சேமிப்பு பத்திரம்(என்எஸ்சி)

தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு தற்போது 6.8 % வட்டி அளிக்கப்படுகிறது. குறைந்த பட்ச முதலீடு ரூ. 100 அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம். வருமான வரி 80cன் கீழ் வரி விலக்கும் அளிக்கப்படுகிறது.

எஸ்எஸ்ஏ -சுகன்யா சம்ரிதி அக்கவுண்ட்

பெண்குழந்தைகளுக்காக மத்திய அரசின் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் இது. செல்வ மகள் சேமிப்பு திட்டம் என அழைக்கப்படுகிறது. 10 வயதுக்குட்பட்ட பெண்குழந்தைகளின் பெயரில் பெற்றோர்கள் இந்த கணக்கினை துவங்கலாம். பெற்றோர்கள் கார்டியன். 15 வருடங்கள் தொடர்ந்து முதலீடு செய்யவேண்டும். ஆண்டொன்றிற்கு 7.5 சதவீத வட்டி அளிக்கப்படுகிறது. முதலீட்டாளர்கள் வரி விலக்கு பெறலாம். ஆண்டுக்கு அதிக பட்சமாக ரூ. 1.50 லட்சம் வரை மட்டுமே முதலீடு செய்ய முடியும். இந்த கணக்கை துவங்கும்போது பெற்றோர்களின் ஆதார், பான்,மற்றும் போட்டோ வுடன் குழந்தையின் ஆதார் இருந்தால் ஆதார் ,பிறப்பு சர்டிபிகேட் நகல் இணைக்கவேண்டியது அவசியமாகும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News