அக்னி நட்சத்திர நாட்கள் பற்றி புராணங்கள் கூறுவது என்ன?
அக்னிதேவன் காண்டவ வனத்தை எரித்த நாட்களே அக்னி நட்சத்திர நாட்கள் என்று புராணம் கூறுகிறது.
அக்னி நட்சத்திர நாட்களில் ஆலயங்களுக்குச் சென்று இறைவனுக்கும் இறைவிக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்வது நல்ல பலனைத் தரும். தான-தர்மங்கள் செய்யலாம். தண்ணீர்ப் பந்தல் அமைத்து நீர் மோர் வழங்கலாம், நோயாளிகளுக்கு இளநீர் தரலாம். உடல் ஊனமுற்றவர்களுக்கு காலணி, குடைகளை வழங்கலாம், ஏழை, எளியவர்களுக்கு தயிர் சாதம் அளிக்கலாம்.
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் அசுவினி தொடங்கி ரேவதி வரை 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் எந்த நட்சத்திரமுமே அக்னி நட்சத்திரம் இல்லை. ஆனால் அக்னிக்கு நிகரான சூரியனின் நட்சத்திரங்கள், கார்த்திகை, உத்திரம், உத்திராடம் உள்ளது.
இதில் மேஷ ராசியில் கார்த்திகை நட்சத்திரத்தில் சூரியன் பயணிக்கும் காலத்தில் அக்னியின் ஆட்டம் ஆரம்பமாகிறது.
காண்டவ வனத்தை அக்னி தேவன் கபளீகரம் செய்த காலமே அக்னி நட்சத்திர காலம் என்கிறது புராண கதை. சூரியன் வெப்பம் தகிக்கும் இந்த கால கட்டத்தை, கத்திரி வெயில் காலம் என்றும் கூறுகின்றனர். இது தோஷகாலமாக கருதப்படுகிறது. எனவேதான் இந்த கால கட்டத்தில் சுப நிகழ்ச்சிகள் செய்வதை தவிர்த்தனர். இப்போதும் கூட வீடு கிரகப்பிரவேசம் செய்வதை தவிர்த்து விடுகின்றனர்.
இந்த ஆண்டு மே 4ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை மொத்தம் 27 நாட்கள் அக்னி நட்சத்திரம் காலமாகும். அக்னி நட்சத்திரம் தொடங்கும் போது முதல் 7 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகி கொண்டே போகும்.
21வது நாளில் வெயில் உச்சத்தை தொடும். அதன்பிறகு படிப்படியாக வெயில் தாக்கம் குறையத் தொடங்கும். அக்னி நட்சத்திர தோஷ காலம் முடிந்த பிறகு, எல்லா கோயில்களிலும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும்.