ஆரோக்கிய விஷயத்தில் அலைபாயலாமா? டாக்டர் ஷாப்பிங் பரிதாபங்கள்
‘டாக்டர் ஷாப்பிங்‘ என்பது நமக்குப் பழக்கமான வார்த்தைகள் அல்ல. கேட்பதற்கே கொஞ்சம் புதிதாகத்தான் இருக்கிறது.
டாக்டர் ஷாப்பிங்!பெயர் தான் புதிதே தவிர அந்த ஷாப்பிங் வேலையைப் பல நோயாளிகளும் செய்து கொண்டு தானிருக்கிறோம். அதன் பக்க விளைவுகளையும் அனுபவித்துக் கொண்டுதானிருக்கிறோம். இதுவரை பொதுத்தளத்தில் அதிகம் பேசப்படாத, இந்த நவீன சுகாதாரப் பிரச்னை குறித்து விளக்கமளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் அருணாசலம்.
டாக்டர் ஷாப்பிங் என்பது என்ன? ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்று பல்வேறு பொருட்களை வாங்குகிறோம். அதுபோல, ஆரோக்கிய விஷயத்திலும் மருத்துவத்தைக் கையாள்வது தான் டாக்டர் ஷாப்பிங். அதாவது ஒரே பிரச்னைக்காக ஒன்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்களைப் பார்ப்பது தான் டாக்டர் ஷாப்பிங்.
சர்க்கரை நோய்க்காக ஒரு மருத்துவரைப் பார்க்கிறோம். சரும நலனுக்காக ஒரு மருத்துவரிடம் சிகிச்சை பெறுகிறோம். பார்வை தொடர்பான பிரச்னைக்காக கண் சிகிச்சை மருத்துவரிடம் செல்கிறோம். இது டாக்டர் ஷாப்பிங் அல்ல. அந்தந்த பிரச்னைகளுக்காக அந்தந்த துறை நிபுணர்களிடம் சிகிச்சை பெறுவதே இயல்பானது. சரியானதும் கூட. ஆனால், டாக்டர் ஷாப்பிங் என்பது இதிலிருந்து வேறுபட்டது.
இவர்கள் ஒரே ஒரு நோய்க்குறைப்பாட்டுக்காக ஒன்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்களை சந்திப்பார்கள். இதுதான் டாக்டர் ஷாப்பிங். ஒருவரிடமும் முழுமையாக சிகிச்சை பெறாமல் தாவிக்கொண்டும் இருப்பார்கள். இதனால் டாக்டர் ஷாப்பிங் என்றும் இதைச் சொல்கிறோம்.
இதுபோல் மருத்துவர்களைத் தேடி அலைபாய்வதால் என்னென்ன பிரச்னைகள் உண்டாகும்? டாக்டர் ஷாப்பிங் செய்வதால் நோய் கண்டறிதல் தாமதமாகும். ஒரே மருத்துவரிடம் தொடர்ந்து சிகிச்சை பெறும் போது தான் பிரச்னையின் ஆணிவேர் என்னவென்று மருத்துவரால் கண்டுபிடிக்க இயலும். அதற்கேற்ற சிகிச்சையையும் நோயாளியால் பெற்றுக் கொள்ள முடியும். இல்லாவிட்டால் தேவையற்ற கால விரயம், பொருள் விரயம் ஏற்படும். அவசியமற்ற பரிசோதனைகளையும் செய்ய வேண்டி வரலாம். அதிக கதிர்வீச்சு கொண்ட பரிசோதனைகளை அடிக்கடி செய்வது பக்கவிளைவுகளையும் நோயாளிக்கு உண்டாக்கும்.
இதன் பின்னணியில் உளவியல்ரீதியான காரணமும் உள்ளது. Hypochondria என்கிற மனரீதியான பிரச்னைகொண்டவர்கள் இதுபோல் அடிக்கடி மருத்துவர்களை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். இந்த உடல்நலக் கவலை கொண்டவர்களுக்கு எந்த நோயும் இருக்காது. ஆனால், ஏதோ ஒரு நோய் தனக்கு இருக்கிறது என்று நம்புவார்கள். அதாவது தாங்கள் விரும்புவதை மருத்துவர் கூற வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். ‘உங்களுக்கு ஒன்றுமில்லை‘ என்று இவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக மருத்துவர் கூறும் போது வேறு மருத்துவரைத் தேடிச் செல்வார்கள்.
இன்னொரு மருத்துவர் என்ன சொல்கிறார் என்பதைத் தெரிந்துகொள்வதில் என்ன தவறு? ஒரு மருத்துவர் உங்கள் எதிர்பார்ப்புக்கு மாறாக ஒன்றைச் சொல்கிறார் அல்லது ஒரு மருத்துவரின் கருத்தில் உங்களுக்கு உடன்பாடில்லை என்கிற நிலையில் இரண்டாவது கருத்தை கேட்கலாம் தான். ஆனால், அந்த செகண்ட் ஒப்பீனியன் பெறுவதிலும் புத்திசாலித்தனம் வேண்டும்.
குறிப்பாக மிகப்பெரிய விஷயங்களை முடிவெடுக்கும் போது செகண்ட் ஒப்பீனியன் பெற்றுக் கொள்வதில் தவறில்லை. உதாரணத்துக்கு, ‘அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும்‘ என்று ஒரு மருத்துவர் உங்களுக்குப் பரிந்துரைக்கிறார். இது பெரிய விஷயம். இப்போது நீங்கள் உடனே அதற்கு ஒப்புக் கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை. செகண்ட் ஒப்பீனியன் இன்னொரு மருத்துவரிடம் பெறலாம். இதேபோல் ஒரு மருத்துவரிடம் கட்டணம் அதிகமாக இருக்கிறது என்கிற பட்சத்தில், இன்னொரு மருத்துவரைத் தேடலாம். நீண்ட காலமாக ஒரு நோய்க்கு மருத்துவரிடம் சிகிச்சை பெற்றும் பலன் இல்லை என்கிற பட்சத்திலும் வேறு மருத்துவரைத் தேடலாம்.
ஆனால், இதுபோன்ற நியாயமான காரணங்கள் இல்லாத நிலையில், அவசியமில்லாமல் மருத்துவரை மாற்றுவது தவறு.
சில மருத்துவர்கள் நோயாளியிடம் சரியாகப் பேசுவதில்லை. அவர்கள் கூறுவதைக் காது கொடுத்துக் கேட்பதுமில்லை. சிகிச்சை விபரங்கள், மாத்திரைகள் சாப்பிடுவது குறித்த சந்தேகங்களுக்குக் கூட விளக்கமளிக்காத மருத்துவர்கள் இருக்கிறார்கள். பல நேரங்களில் நோயாளிக்குத் தேவை மருத்துவரின் கனிவான பேச்சு மட்டுமே.
இந்த எதிர்பார்ப்பு நிறைவேறாதபட்சத்திலும் மருத்துவரை மாற்ற வேண்டிய சிந்தனை மக்களுக்கு ஏற்படுகிறது. சில மருத்துவர்கள் அதிக கட்டணங்களைப் பெறுவதும் பொதுமக்களின் மனதை சோர்வாக்குகிறது. வேறு மருத்துவரைத் தேட வைக்கிறது.
இதுபோன்ற நவீன பிரச்னைகளுக்கு குடும்ப மருத்துவர் இல்லாமல் போனதும் முக்கிய காரணம். குடும்ப நல மருத்துவர் என ஒருவர் உங்களுக்கு இருக்கும் போது உங்களைப் பற்றி அவர் நன்கு அறிந்திருப்பார். உங்களது குடும்ப வரலாறு மருத்துவருக்குத் தெரிந்திருக்கும். இதனால் பரஸ்பரம் நம்பிக்கை இருக்கும். சிகிச்சையும் எளிதாக இருக்கும்.
எந்த ஒரு ஸ்பெஷலிஸ்ட்டைப் பார்க்க வேண்டுமென்றாலும், பரிசோதனைகள் செய்ய வேண்டுமென்றாலும் குடும்ப நல மருத்துவரின் ஆலோசனை பெற்றே செய்யலாம். குடும்ப நல மருத்துவர் என்ற ஒரு சிஸ்டம் இல்லாமல் போன பிறகே, மருத்துவம் தொடர்பான பிரச்னைகள் நீதிமன்றம் வரையிலும் செல்கிறது. குடும்ப நல மருத்துவர் என ஒருவர் இருக்கும்போது இந்த சந்தேகமோ, சண்டையோ இருதரப்புக்குள்ளும் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு.
பொதுமக்களும் ஓரளவு விவரம் அறிந்தவர்கள் தான். அதனால் ஒரு மருத்துவரை எடை போடுவதும் மக்களுக்கும் அத்தனை சிரமமான செயல் அல்ல. மருத்துவர்-நோயாளி என்கிற உறவைத் தாண்டி அந்த மருத்துவர் உங்களிடம் அக்கறையாக நடந்துகொள்கிறார் என்றால் அவரை குடும்ப நல மருத்துவராகப் பிடித்துக் கொள்ளலாம்.
உங்கள் பணத்தின்மீது அவருக்கு ஆசையில்லை என்று உணர்கிறபோதும் அவரை குடும்பநல மருத்துவராக தீர்மானித்துக் கொள்ளலாம். ஒரு மருத்துவர் கைராசி மருத்துவர் என்று உங்களுக்குத் தோன்றினாலும் அவரை குடும்ப நல மருத்துவராக்கிக் கொள்ளலாம்.
இது கண்டிப்பாக சொல்லியாக வேண்டிய விஷயம். ஒரு சில மாற்று மருத்துவர்கள் தவறான தகவல்களை மக்களிடம் பரப்புவதால் மருத்துவரை மாற்றுவதையும் தாண்டி, மருத்துவ முறையையே மக்கள் மாற்றுகிறார்கள். ‘சர்க்கரை என்பது என்ற ஒரு நோயே இல்லை‘ என்று ஒரு மாற்று மருத்துவர் கவர்ச்சிகரமாகப் பேசும்போது நோயாளிகளில் சிலர் ஏமாறக் கூடிய வாய்ப்பு உண்டு.
‘அலோபதி மருந்து, மாத்திரைகள் பக்கவிளைவை உண்டாக்கும். சிறுநீரகம் செயலிழக்கும், கல்லீரலுக்கு பாதிப்பு‘ என்பதுபோன்ற பிரசாரங்களாலும் மக்கள் குழப்படைகிறார்கள். இதனால் உரிய சிகிச்சையை அலோபதியில் எடுத்துக் கொள்வதைத் தவிர்த்து மாற்று மருத்துவத்தைப் பயன்படுத்தி, பெரும் சிக்கலானவுடன் மீண்டும் அலோபதி மருத்துவரிடமே ஓடி வருகிறார்கள்.
ஆங்கில மருத்துவத்தை சான்று அடிப்படையிலான மருத்துவம் என்று கூறுகிறோம். பல கட்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகே ஒரு மருந்தோ, சிகிச்சையோ, பரிசோதனையோ பயன்பாட்டுக்கு வருகிறது. எனவே, ஆங்கில மருத்துவத்தை சந்தேகப்படுவது தங்களுக்குத் தாங்களே கெடுதல் செய்துகொள்வதைப் போன்ற செயல் தான்.
இது அரிதாக நடக்கிற ஒரு மோசடி. ஒரு மருத்துவரிடம் இந்த அளவுதான் மருந்தை வாங்க முடியும் என்று எல்லை இருக்கிறபோது, மருந்தை முறைகேடாகப் பயன்படுத்துகிறவர் டாக்டர் ஷாப்பிங் செய்யலாம். ஆனால், இது பெரிய பிரச்னையாக நம் ஊரில் இப்போது இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்.
இன்ஸ்யூரன்ஸ் மோசடிக்காகவும் வெளிநாடுகளில் டாக்டர் ஷாப்பிங் நடப்பதாக செய்திகள் இருக்கிறதே. இதுவும் மிக மிக அரிதாக நடக்கிற ஒரு விஷயம்தான். இதுபோன்ற திட்டமிட்ட குற்றம் நம் நாட்டில் இல்லை. இன்னும் சொல்லப்போனால் பெரும்பாலானோருக்கு இந்தியாவில் இன்ஸ்யூரன்ஸே இல்லை. எனவே, இன்ஸ்யூரன்ஸ் மோசடிக்காகவெல்லாம் டாக்டர் ஷாப்பிங் நம் நாட்டில் நடப்பதில்லை. எதிர்காலத்தில் எப்படியென்று தெரியாது.
இந்தியாவைப் பொறுத்தவரை டாக்டர் ஷாப்பிங்குக்கான காரணமாக நோயாளிகளின் அறியாமை, சீக்கிரம் குணமடைய வேண்டும் என்கிற அவசரம், தவறான பிரசாரங்களை நம்புவது, மருத்துவத்துறையில் இருக்கும் சில குறைபாடுகள் போன்றவற்றையே சொல்ல வேண்டும்.
சில வித்தியாசமான நடவடிக்கைகள் அவர்களிடம் இருக்கும். நிறைய ப்ரிஸ்க்ரிப்ஷன் வைத்திருப்பார்கள். நிறைய ஃபைல் வைத்திருப்பார்கள். நோயைப் பற்றி நிறைய பேசுவார்கள். விவரங்கள் தெரிந்ததுபோல் உரையாடுவார்கள். ‘அடுத்த முறை நான் வர மாட்டேன்‘ என்பதுபோன்ற பாவனைகள் அவர்களிடம் இருக்கும். ஒரு தேர்ந்த மருத்துவரால் ஷாப்பிங் செய்யும் நோயாளியை எளிதாகக் கண்டுபிடிக்க முடியும்.