'சிறந்த சோம்பேறி', 'மந்திரியான ஜோவி' உங்களுக்கான கதைகள்..! (2 in 1)
Story Tamil For Kids-கதை குழந்தைகளுக்கு அறிவை வளர்க்கும் ஒரு கருவி. தாத்தா பாட்டி கதை கேட்டவர்களுக்கும் அம்புலிமாமா புத்தகம் படித்தவர்களுக்கும் இது தெரியும்.
Story Tamil For Kids-கதை என்றால் குழந்தைகள் குதூகலமாகிவிடுவார்கள். முன்பெல்லாம் தாத்தா பாட்டியுடன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தவர்களுக்கு தாத்தா பாட்டி கதைகள் சொல்லி தூங்க வைப்பார்கள். குழந்தைகளும் கதை சொல்லாமல் தாத்தா பாட்டியை விட மாட்டார்கள். அப்படி கதை கேட்டு வாழ்ந்த சமூகத்தில் பழக்க வழக்கம், பெரியோரை மதித்தல், பண்பாடு, மரியாதை போன்ற உயர் குணங்கள் நிறைந்து இருந்தன. இந்த சமூகச் சீரழிவுக்கு வழிகாட்டல்கள் இல்லாமல் போனதும் காரணமாகும். இங்கு குழந்தைகளுக்கான இரண்டு கதைகள் தரப்பட்டுள்ளன. படித்து மகிழுங்கள்.
சிறந்த சோம்பேறி..! (கதை -1)
முன்னொரு காலத்தில் ஒரு நாட்டை வேடிக்கையான அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். மற்றவர்கள் என்ன செய்கிறார்களோ அதற்கு எதிராக செய்வதே அந்த அரசனின் வழக்கமாக இருந்தது.
மற்றவர்கள் தாடையில் தாடி வைத்திருப்பதைப் பார்த்தான். நாம் ஏன் தாடையில் தாடி வளர்க்கணும்? என்று சிந்தித்த அந்த அரசன் உடனே தன் புருவத்தில் தாடி வளர்க்கத் தொடங்கினான். அதுவும் நீண்டு வளர்ந்து கழுத்து வரை தொங்கியது. குளிர்காலத்தில் சட்டையே இல்லாமல் உலாவுவான். கோடை காலத்தில் ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பல சட்டைகளை அணிந்து கொள்வான். காலில் அணிய வேண்டிய உடைகளை உடம்புக்கு அணிந்து கொள்வான். உடம்புக்கு அணியும் உடைகளைக் காலுக்கு அணிந்து கொள்வான். முன்புறம் அணிய வேண்டியதைப் பின்புறமாக அணிந்து கொள்வான். பின்புறம் அணிய வேண்டியதை முன்புறம் அணிந்து கொள்வான். எப்பொழுதும் பின்பக்கமாக நடப்பானே தவிர முன்பக்கமாக நடக்க மாட்டான். இரவு முழுவதும் விழித்து இருப்பான். பகல் முழுவதும் தூங்குவான்.
அவனுக்கு ஒரே ஒரு மகள் இருந்தாள். தன் மகளுக்குத் திருமணம் செய்ய நினைத்தான் அவன். அமைச்சர்கள் ஐந்து பேரையும் அரசவைக்கு வரவழைத்தான்.
இளவரசிக்குத் திருமணம் செய்ய எண்ணி உள்ளேன். மற்ற அரசர்கள் விரும்புவதைப் போல எனக்கு மருமகனாக வீரன் வேண்டாம். அறிவுள்ளவன் வேண்டாம். நல்ல பண்புள்ளவன் வேண்டாம். அழகானவனும் வேண்டாம், என்றான் அரசன். இதைக் கேட்ட அமைச்சர்கள் திகைத்து நின்றனர்.
இளவரசியார் கணவனாக எப்படிப்பட்டவர் வர வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? என்று கேட்டார் ஓர் அமைச்சர்.
சோம்பேறியான ஒருவன் தான் எனக்கு மருமகனாக வர வேண்டும். மிகப் பெரிய சோம்பேறியைத் தேடும் வேலையை உங்களிடம் ஒப்படைக்கப் போகிறேன். அதற்காகத்தான் உங்களை வரவழைத்தேன்' என்றான் அரசன்.
'நாங்கள் என்ன செய்ய வேண்டும்? அரசே..' என்று கேட்டார் இன்னொரு அமைச்சர்.
உங்கள் ஒவ்வொருவருக்கும் ஓராண்டு காலம் தருகிறேன். நீங்கள் பல நாடுகளுக்குச் சென்று சிறந்த சோம்பேறியைக் கண்டுபிடிக்க வேண்டும். தேவையான பணத்தை கருவூலத்தில் பெற்றுக் கொள்ளுங்கள்' என்றான் அரசன். ஐந்து அமைச்சர்களும் அரசனிடம் விடைபெற்றுப் புறப்பட்டார்கள். ஐவரும் வெவ்வேறு திசைகளில் பிரிந்து சென்றார்கள்.
ஓராண்டு கழிந்தது. ஐந்து அமைச்சர்களும் நாடு திரும்பினார்கள். அவர்களை மகிழ்ச்சியோடு வரவேற்றான் அரசன்.
முதலாம் அமைச்சனைப் பார்த்து, 'உம் அனுபவங்களைச் சொல்லும். எனக்கு மருமகனாகும் சோம்பேறியை எங்கே கண்டுபிடித்தீர்? சொல்லும்' என்று ஆர்வத்துடன் கேட்டான் அரசன்.
அரசே, நான் பல நாடுகளுக்குச் சென்றேன். எத்தனையோ விந்தையான அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டன. இருந்தும் சோம்பேறிகளைத் தேடி அலைந்தேன். எத்தனையோ சோம்பேறிகளைச் சந்தித்தேன். யாருமே நம் இளவரசிக்குப் பொருத்தமானவராகத் தெரியவில்லை. பெரிய சோம்பேறியைச் சந்திக்கும் பேறு பெற்றேன்' என்றான் அமைச்சன். அவன் என்ன செய்தான்? என்று கேட்டான் அரசன்.
அந்தச் சோம்பேறியை வழியில் சந்தித்தேன், அரசே. அவனுடைய ஒரு கால் சேற்றிலும் மற்றொரு கால் சாலையிலும் இருந்தது. அப்படியே நின்று கொண்டிருந்தான். நான் அவனைப் பார்த்து, ஏன் இப்படி நிற்கிறாய்? என்று கேட்டேன். இரண்டு மாதமாக நான் இப்படித்தான் நின்று கொண்டிருக்கிறேன். சேற்றில் உள்ள காலை எடுக்க எனக்குச் சோம்பலாக உள்ளது' என்று பதில் தந்தான் அவன், என்றான் அமைச்சன்.
இளவரசிக்குப் பொருத்தமான பெரிய சோம்பேறி தான் அவன், என்று மகிழ்ச்சியாகச் சொன்னான் அரசன்.
குறுக்கிட்ட இரண்டாம் அமைச்சன், அரசே.. அவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு வந்துவிடாதீர்கள். நானும் ஒரு சோம்பேறியைப் பார்த்துவிட்டு வந்திருக்கிறேன் என்றான்.
'உன் அனுபவங்களைச் சொல்' என்றான் அரசன்.
அரசே, உங்கள் கட்டளையை நிறைவேற்றுவதற்காகப் பல மலைகளையும் ஆறுகளையும் கடந்து சென்றேன். ஒரு ஊரில் மிகப் பெரிய சோம்பேறியைக் கண்டேன். அவனுக்கு மிக நீண்ட தாடி இருந்தது. அந்தத் தாடி ஊர் முழுவதும் பரவிக் கிடந்தது. பார்ப்பதற்கு மேகக் கூட்டம் போல இருந்தது. இரண்டு மீசைகளும் நீண்டு இருந்தன. ஒரு மீசையில் குருவி ஒன்று கூடு கட்டி இருந்தது. இன்னொரு மீசையில் எறும்புப் புற்று வளர்ந்து இருந்தது. நான் அவனைப் பார்த்து, எதற்காக இவ்வளவு நீண்ட தாடியும் மீசையும் வளர்த்து இருக்கிறாய்? என்று கேட்டேன்.
சோம்பேறியான அவன் எனக்கு எந்தப் பதிலும் தரவில்லை. அவன் அருகில் முக சவரம் செய்யும் கத்தி துருப்பிடித்துக் கிடந்தது. அங்கிருந்தவர்கள் அவன் முக சவரம் செய்து முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது என்றார்கள். நல்ல சோம்பேறிதான், என்ற அரசன், அவன் தாடி மீசையைச் சொரிந்து கொள்கிறானா அல்லது அதற்கும் சோம்பலா? என்று கேட்டான். அவன் சில சமயங்களில் தாடி மீசையைச் சொரிந்து கொள்கிறான். அது மட்டும் அல்ல. தன் மீசையில் அமர வரும் காக்கைகளை விரட்டுவதற்காக கூழாங்கற்களை அவற்றின் மேல் எறிகிறான், என்றான்.
மூன்றாம் அமைச்சனைப் பார்த்து, நீ பார்த்து வந்த சோம்பேறியைப் பற்றிச் சொல், என்று கேட்டான், அரசன்.
அரசே, நானும் பல நாடுகளுக்குச் சென்றேன், ஒரு ஊரில் சோம்பேறி ஒருவனைக் கண்டேன். உங்களுக்கு மருமகனாக மிகவும் பொருத்தம் உடையவன். சோம்பல் காரணமாக கடந்த இருபது ஆண்டுகளாக அவன் வீட்டை விட்டு வெளியே சென்றது இல்லை. நாற்காலியில் அமர்ந்து இருந்தபடியே எல்லோருக்கும் அவன் அறிவுரை வழங்குவான். நான் சென்றிருந்த சமயம் அவன் வீட்டில் தீப்பிடித்துக் கொண்டது. அவன் உடையிலும் தீப்பிடித்துக் கொண்டது. இருந்த இடத்தைவிட்டு அசையவில்லை அவன். வெளியே இருந்தவர்கள் எல்லோரும் கத்தினார்கள். எந்தப் பயனும் இல்லை. வீட்டிற்குள் நுழைந்த சிலர் அவனை அப்படியே வெளியே தூக்கி வந்து காப்பாற்றினார்கள், என்றான்.
உண்மையிலேயே இவன் பெரிய சோம்பேறிதான், என்ற அரசன் நான்காம் அமைச்சனைப் பார்த்தான்.
அரசே, நான் காடு மலைகளில் அலைந்தேன். முட்புதர்களில் சிக்கி என் உடைகள் கிழிந்து விட்டன. அதுவும் நல்லதற்குத்தான். அதனால்தான் அந்தச் சோம்பேறியைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது, என்றான் அவன். அவன் என்ன செய்தான்? என்று பரபரப்புடன் கேட்டான் அரசன். அரசே, அவன் தன் வீட்டுத் தோட்டத்தில் ஒரு மரத்தடியில் பதினைந்து ஆண்டுகளாகப் படுத்திருக்கிறான். தன் வாயிற்கு அருகே காரட் முள்ளங்கி ஏதேனும் முளைக்காதா என்று காத்துக் கொண்டிருக்கிறான். அவன் நெற்றியில் உள்ள சுருக்கத்தில் இரண்டு முள்ளங்கிச் செடிகள் முளைத்துள்ளன. அதைப் பிடுங்கிப் போடக்கூட அவன் தன் கை விரல்களைப் பயன்படுத்தவில்லை. மரத்திலிருந்து அவன் வாயிற்கு நேராக ஏதேனும் பழங்கள் விழுந்தால் உண்பான். பக்கத்தில் விழுந்தால் அதை எடுத்து உண்ண மாட்டான், என்றான் அவன். அந்த வாழ்க்கை அவனுக்குப் பிடித்து இருக்கிறதா? என்று கேட்டான் அரசன்.
அவனிடம் நீண்ட நேரம் பேசினேன். அவன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறினான். தன் மூக்கிலோ அல்லது வாயிலோ பழ மரம் முளைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். பழத்திற்காக நான் வாயைத் திறந்து கொண்டு படுத்திருக்க வேண்டாமே என்றான் அவன், என்று விளக்கமாகச் சொன்னான், அமைச்சன். நான் கேட்டதிலேயே அற்புதமான சோம்பேறி இவன். என் மகளுக்கு ஏற்றவன், என்ற அரசன் ஐந்தாம் அமைச்சனைப் பார்த்தான்.
உடனே அந்த அமைச்சன், அரசே, நான் பார்த்த சோம்பேறியைப் பற்றிச் சொன்னால் உங்கள் கருத்தை மாற்றிக் கொள்வீர்கள். இவனுடைய சோம்பேறித்தனத்திற்கு மற்ற நால்வரும் கால் தூசி பெற மாட்டார்கள், என்றான். நீ பார்த்த சோம்பேறியைப் பற்றிச் சொல், என்றான் அரசன்.
அரசே, சோம்பேறியைத் தேடும் முயற்சியில் நான் பலமுறை உயிர் பிழைத்தேன். ஒரு நாட்டை அடைந்தேன். உலக மகா சோம்பேறி ஒருவனைக் கண்டேன், என்றான் அவன்.
ஆர்வத்தை அடக்க முடியாத அரசன், அவன் என்ன செய்தான்? என்று பரபரப்புடன் கேட்டான்.
சிலர் அவன் உயிரோடு இருப்பதாகச் சொன்னார்கள். சிலர் அவன் இறந்து விட்டதாகச் சொன்னார்கள். சிலர் அவனைத் துறவி என்றார்கள். சிலர் அவனைப் பற்றிக் கருத்து சொல்ல மறுத்தார்கள். நானே சென்று அவனை நேரில் பார்த்தேன். அவனைச் சுற்றிலும் புற்று வளர்ந்து இருந்தது. எழுபது ஆண்டுகளாக அவன் சிறிதுகூட அசையவில்லை. யார் பேச்சையும் கேட்க விரும்பாத அவன் காதுகளில் மெழுகை அடைத்துக் கொண்டான். பேச வேண்டி வரும் என்பதால் தன் நாக்கை ஒரு பாறாங்கல்லில் கட்டி இருந்தான். எதையும் அவன் சாப்பிடுவது இல்லை. காற்றை மட்டும் சுவாசித்துக் கொண்டு உயிர் வாழ்கிறான். யாராவது உணவைக் கொண்டு வந்தால்கூட அதைக் கையில் வாங்க அவனுக்குச் சோம்பல். பத்தாண்டுகளுக்கு முன் அவன் தன் உதடுகளைச் சிறிது அசைத்தானாம் அதனால்தான் அவன் உயிரோடு இருப்பது மற்றவர்க்குத் தெரிந்ததாம், என்று நடந்ததைச் சொன்னான் அந்த அமைச்சன்.
வியப்பு அடைந்த அரசன், இப்படி ஒரு சோம்பேறியா? அவனே என் மருமகன். அவனுக்கும் இளவரசிக்கும் விரைவில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள், என்று மகிழ்ச்சியுடன் சொன்னான். ஒரு நல்ல நாளில் அந்தச் சோம்பேறிக்கும் இளவரசிக்கும் திருமணம் நடந்தது.
.............................................................................
மந்திரியான காக்கையார் ஜோவி (கதை -2)
மங்களதேவி கோட்டத்தின் கீழ்ப்பகுதியில் குமுளி மலைத் தொடரும். மேற்பகுதியில் தேக்கடி மலைத் தொடரும் காடுகளால் சூழப்பட்டு இருந்தன. நல்ல அடர்ந்த வனப்பகுதி அது. மிகப்பெரிய வன ராஜ்ஜியம் என்பதால் வன ராஜ்ஜியத்தில் எப்போதும் தேர்தல் நடப்பது வழக்கம்.
அப்படித்தான் அன்றும் குமுளி மலைப்பகுதி காடு பரபரப்பாயிருந்தது. காரணம் காட்டுக்குள்ளே அன்று தேர்தல் நாள். அதனால் காடே பரபரப்பாக காணப்பட்டது.
மிருகங்கள், பறவைகள் உட்பட புழு பூச்சிகளும் கூட தேர்தலில் கலந்து கொண்டன என்பதுதான் அதன் தனிச் சிறப்பே.
வேங்கைப்பள்ளம் எப்போதுமே தேர்தலுக்கான தலைநகரம். அதனால் இந்தத் தேர்தலும் வேங்கைப்பள்ளத்தில்தான் நடந்தது. தோதகத்தி மரங்கள் நிறைந்த இந்தப் பகுதியில் செந்நாய்கள் அதிகம் இருந்தன.
ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தத் தேர்தலை இந்த முறை செந்நாய்கள் ஏற்பாடு செய்ய பணிக்கப்பட்டிருந்தன. அதனால் செந்நாய்கள் தேர்தலுக்கான பணிகளை செய்திருந்தன.
இந்தத் தேர்தலில் எப்போதும் இல்லாத அளவுக்கு சுகாதாரத்துறை மந்திரிக்கு மட்டும் மும்முனைப் போட்டி வந்துவிட்டது. சுகாதார மந்திரிக்குப் போட்டி இடுபவர் தங்களை தூய்மையானவர்கள் என்று நிரூபிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்களுக்கு ஓட்டு கிடைக்கும்.
சுகாதார மந்திரிப் பதவிக்கு பன்றி, பட்டாம் பூச்சி, காக்கை ஆகியோர் போட்டியிட்டனர்.
போட்டியைத் தவிர்க்க முயற்சி செய்தும் முடியாமல் போனது. எனவே ஓட்டு எடுப்பு நடத்துவது அவசியமாகி விட்டது. சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட குரங்கு தேர்தலை நடத்தியது. பல ஆண்டுகள் பிரதமராக இருந்த சிங்கம் வயதான காரணத்தால் சபாநாயகர் பதவிக்கு நின்று தோற்றுப் போனது.
காட்டரசுத் தலைவராக முயல் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டது. அதேபோல பிரதமர் பதவிக்கு மட்டும் போட்டி கடுமையாக இருந்தது.
ஆரம்பத்தில் காட்டு எருமையை ஆதரித்த குரங்குகள் திடீரென்று செந்நாயை ஆதரித்தன. தவிர செந்நாய்கள் அராஜகத்திற்கு பயந்த மான்கள் முழுமையாக செந்நாயை ஆதரித்தன. செந்நாய் பிரதமராகி விட்டது.
நிதி மந்திரியாக வரிக்குதிரையும், பாதுகாப்பு மந்திரியாக ஓநாயும், உணவு மந்திரியாக கழுதையும், சொற்பமான ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தன.
வெளியுறவு மந்திரியாக எவ்வித போட்டியும் இன்றி நரியார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சபாநாயகர் குரங்கார் முதலில் பன்றியாரை அழைத்து, 'உங்களின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக் கூறுங்கள்' என்று பணித்தார். பன்றியார் வேகமாக மேடையை நோக்கி நடந்தார். வழியில் நின்றிருந்த யானையார் பட்டென்று நகர்ந்து அவருக்கு வழி விட்டார்.
பன்றியார் மேடைக்கு வந்ததும் காட்டரசுத் தலைவர் நாற்றம் தாள முடியாமல் தனது பெரிய காதுகளை தேய்த்துக் கெண்டார். "என்னுடைய வாழ்க்கையே சுகாதாரப் பணிக்கு அர்ப்பணித்துக் கொண்டவன்,நான். அது மட்டுமல்ல.. யானையார் போன்ற பெரியவர்கள் கூட என்னைக் கண்டதும் விலகி நிற்பார்கள். எனவே, என்னை உங்கள் சுகாதார மந்திரியாக தேர்ந்தெடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்…..' என்று சொல்லிவிட்டுப் போய் உட்கார்ந்தார்.
அடுத்து தனது சிவப்பு நிற இறக்கைகளை விரித்துப் பறந்து வந்தது பட்டாம்பூச்சி. முயலார் பட்டாம் பூச்சியின் வண்ணத்தைப் பார்த்து மயங்கினார்.
தனது சிறகுகளை அசைத்தபடி பேசியது பட்டாம்பூச்சி.
'அண்ணாச்சி பன்றியார் வந்து நின்று பேசிய இடத்தை சுத்தம் செய்யவே தனியாக ஒரு சுகாதார மந்திரியைப் போட வேண்டும்' என்றதும் கொல்லென்று எல்லாம் சிரித்தன.
'என்னைப் பாருங்கள்.. என் சிறகுகளைப் பாருங்கள். என்னைப் போல நீங்களும் அழகாக இருக்க உங்கள் வாக்குகளை எனக்கே போடுங்கள்' என்று சொல்லிவிட்டுப் பறந்து சென்று அதன் இடத்தில் அமர்ந்தது.
அடுத்தது காகம் ஜோவி வந்தது. 'பன்றியார் வந்தார், நான் சுகாதாரத்தின் அவதாரம் என்றார்.. நானே சுத்தம் செய்கிறேன் என்றார். வாஸ்தவம் தான். அவர் இருக்கும் இடம் எப்படிப் பட்ட இடம் என்று நமக்குத் தெரியாதா என்ன ? அது கிடக்கட்டும். நமது பட்டாம்பூச்சி அண்ணாச்சி குடிப்பது தேன்தான் இல்லை என்று சொல்லவில்லை. அவர் படுப்பது எங்கு என்று தெரியுமா? பிராணிகளின் மலம்.
ஆக மலத்தை உண்பவருக்கு உங்கள் ஓட்டா?
மலத்தில் உறங்குபவருக்கு உங்கள் ஓட்டா?' என்ற கேள்வியுடன் பறந்து அமர்ந்தார் காக்கையார் ஜோவி.
அதன் பின்னர் பறவைகளும், மிருகங்களும் இவற்றை ஆதரித்தும், தாக்கியும் பேசி ஓட்டு வேட்டை ஆடின.
கடைசியாக நரியாரை எழுந்து பேசும்படி எல்லாம் வற்புறுத்தின. நரியார் தனது வாலால் முகத்தைத் துடைத்தபடி மேடையில் ஏறினார். எப்போதும் நரியார் பேச்சுக்கு பரவலான மரியாதை இருந்தது.
"காட்டரசர் நாமம் வாழ்க" என்று பேச ஆரம்பித்தார் நரியார்.
"பன்றியார் சொன்னது போல அவர் மலக்கழிவுகளை உண்டு சுகாதாரத்திற்கு வழி செய்கிறார் என்பது வாஸ்தவம்தான். பட்டாம் பூச்சியார் சுத்தமான தேனைக் குடிக்கிறார். பார்க்க அழகாக கவர்ச்சியாக இருக்கிறார் அதுவும் சரிதான் என்ற நரியார் சொன்னதை எல்லா பறவைகளும் மிருகங்களும் உன்னிப்பாய் கவனித்தன.
'காக்கையாரும் பன்றிகளைப் போல அசுத்தங்களை உண்டு சுத்தப்படுத்துகிறார். இது நமக்குத் தெரியும்' என்று சொல்லிவிட்டு நிறுத்தியது. இப்படி முக்கியமான செய்தியைச் சொல்லும் போது நரியார் இப்படி நின்று நிதானித்துப் பேசுவார்.
'சுத்தம் என்பது தானும் சுத்தமாக இருக்க வேண்டும். தனது சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த மூவரில் இதற்குப் பொருத்தமானவர்..'என்ற கேள்வியுடன் மீண்டும் ஒருமுறைத் தனது பேச்சை நிறுத்தினார், நரியார்.
யானையார் கூட தனது காது மடல்களை அசைக்காமல் கேட்டுக் கொண்டிருந்தார்.
'பன்றியாரின் உடம்பையும், உறைவிடத்தையும் சுத்தமானது என்று சொல்ல முடியாது. மலத்திலும் மூத்திரத்திலும் படுத்து உறங்கும் பட்டாம் பூச்சியாரும் சுகாதாரச் சூழலில் வாழ்கிறார் என்று சொல்ல முடியாது. ஆனால்..என்று கொக்கிப் போட்டு நிறுத்தினார் நரியார்.
இம்மியளவு இலை விழுந்தால் கூட இடிச்சத்தம் போல் கேட்கும் அளவுக்கு அமைதி. மீண்டும் நரியார் ஆரம்பித்தார்.
'காக்கையார் உடல் சுத்தம். உள்ளம் சுத்தம். அவர் சுற்றுப் புறமும் சுத்தமானது. நாள் தவறினாலும் அவர் குளியல் தவறாது. இனி ஓட்டுப் போடுவது உங்கள் சுதந்திரம்' என்று சொல்லிவிட்டு நடந்தார் நரியார்.
இப்போது எல்லோருக்கும் ஒரு தெளிவான வழி கிடைத்துவிட்டது போல் தமக்குள் பேசிக் கொண்டனர்.
சற்று நேரத்தில் ஓட்டெடுப்பு நடந்தது. செந்நாய் அமைதிப் படை தில்லுமுல்லுகள் நடக்காமல் பார்த்துக் கொண்டன.
ஓட்டுகள் எண்ணப்பட்டன. காக்கையார் சுத்தம் சோறுபோடும் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், தேர்தலில் ஜெயிக்கவைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? என்று சபாநாயகர் குரங்கார் ஜோக் அடிக்க எல்லோரும் சிரிக்க குமுளி மலைக் காடே அதிர்ந்தது.
மொத்தத்தில் சுகாதாரத்துறை மந்திரியாக ஜோவி காக்கையார் தேர்ந்தேடுக்கப்பட்டார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2