பேச்சின் முன்னுரைதான் ரசிக்கவைக்கும்..! பேச்சை ருசிக்கவைக்கும்..!

Introduction For Speech in Tamil-தமிழில் பேசும்போது பேச்சை சுவாரஸ்யமாக்குவது பேச்சின் முன்னுரையே. அதை எப்படி வடிவமைக்கலாம்? தெரிஞ்சுக்கங்க.

Update: 2023-03-30 10:11 GMT

Introduction For Speech in Tamil-ஒரு பேச்சு என்றால் அதை ஆர்வமாக கேட்க வைப்பதற்கு முன்னுரை அவசியம். ஒரு முன்னுரையே அந்த பேச்சு ஆர்வமானதா..இல்லை போரடிக்குமா என்பதை தீர்மானித்துவிடும். அந்த வகையில், ஆர்வத்தை தூண்டும் முன்னுரை செய்யவேண்டும் என்பதை இங்கு பார்ப்போம்.


என்ன செய்ய வேண்டும்?

கேட்போரின் கவனத்தைக் கவருகிற வகையில் எந்த கருத்தை வலியுறுத்தி கூறவேண்டும் என்கிற குறிக்கோளை அடைய நேரடியாக உதவுகிற பொருத்தமான வார்த்தைகளில் முதல் வரியிலேயே பதிவு செய்துவிட வேண்டும்.

ஏன் முக்கியம்?

நாம் பேசுவதை சிலர் செவிகொடுத்துக் கேட்பார்களா என்பதையும், எந்தளவுக்கு கூர்ந்து கவனிப்பார்கள் என்பதையும் முடிவு செய்வதற்கு நாம் தரும் முன்னுரையே தீர்மானித்துவிடும்.


 எந்தவொரு பேச்சிலும் முன்னுரை என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. கேட்போரின் ஆர்வத்தைத் தூண்டினால், அடுத்து சொல்வதை கூர்ந்து கவனிப்பதற்கு தயாராவார்கள். பேச்சில் உங்களுடைய முன்னுரை ஆர்வத்தைத் தூண்டத் தவறினால், நீங்கள் ஒருவேளை தொடர்ந்து பேச முடியாமல் கூட போகலாம்.

ஒரு முக்கிய கூட்டத்தில் ஒரு முக்கிய தலைப்பில் பேசும்போது அவையில் அமர்ந்து இருப்போரின் ஆர்வத்தை ஈர்க்கவில்லையென்றால், அந்த பேச்சால் எந்த நன்மையையும் இருந்துவிடப்போவதில்லை. கேட்கப்பாடாத பேச்சு காதுகேளாதோரின் முன் பொழிந்த பேச்சாகும்.

முன்னுரையை தயாரிக்கும்போது பின்வரும் குறிக்கோள்களை மனதில் கொள்ளுங்கள்:

(அ) கேட்போரின் கவனத்தைக் கவருதல்

(ஆ ) பொருளைத் தெளிவாக குறிப்பிடுதல்

(இ ) கேட்போருக்கு இந்தப் பொருள் ஏன் முக்கியம் வாய்ந்தது என்பதைக் காட்டுதல்.

சில பேச்சுகளை தேர்வுசெய்யும்போது இந்த மூன்று குறிக்கோள்களையும் ஒரே சமயத்தில் வலியுறுத்திவிட முடியும். இருந்தாலும், சில சமயங்களில் இந்தக் குறிக்கோள்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியே கவனம் செலுத்தவேண்டும். வரிசைக் கிரமமும் மாறுபடலாம்.


கேட்போரின் கவனத்தைக் கவருவது எப்படி?

பேச்சைக் கேட்பதற்கு மக்கள் கூடியிருப்பதால் ஒவ்வொருவருமே பேசப்படும் விஷயத்தை கவனம் சிதறாமல் கூர்ந்து கவனிப்பார்கள் என சொல்லிவிட முடியாது. ஏன்? பல சூழல்கள் அவர்களுடைய கவனத்தைச் சிதறடிக்கலாம். அவர்கள் வீட்டுப் பிரச்னையைப் பற்றியோ வேறெதாவது ஒன்றைப்பற்றியோ நினைத்துக் கொண்டிருக்கலாம். அவ்வாறு இருப்போரையும் திசைமாற்றி கவனத்தைக் கவர்ந்து கேட்க வைப்பதே பேச்சாளரின் தனித்திறன். மேலும் அதை கடைசி வரை தக்க வைப்பதே ஒரு பேச்சாளராக நிலை நிற்கமுடியும். அது ஒரு சவாலான மற்றும் இனிமையான பணி. இதை சமாளிப்பதற்கு பல வழிகள் இருக்கின்றன.

ஆர்வத்தைத் தூண்டுவதற்குக் கேள்விகளைத் திறம்பட பயன்படுத்தலாம். ஆனால் அவை பொருத்தமானவையாக இருக்க வேண்டும். அவையினர் இதற்கு முன்பு கேட்ட விஷயங்களையே பேசப் போகிறீர்கள் என்பதை உங்களுடைய கேள்விகள் சுட்டிக்காட்டினால், கேட்போருடைய ஆர்வம் குன்றிப்போய்விடும். அது கேட்போருக்கு தர்மசங்கடத்தை உண்டாக்கலாம். சிறப்பான பேச்சாக இருக்கும் என்று வந்தால் மீண்டும் அதேவா என்று சலிப்பு ஏற்படலாம்.


கேள்விகள் எழுப்புதல் 

மேலும், பேச்சை சுவாரஸ்யமாக்குறேன் என்று யாருடைய மனதும் புண்படாதபடி கேள்விகளை எழுப்பவேண்டும். அவர்களுடைய சிந்தனையைத் தூண்டும் விதமான கேள்விகளைக் கேளுங்கள். ஒவ்வொரு கேள்வியின் முடிவிலும் சற்று நிதானித்து பொறுத்திருங்கள். அப்போதுதான் அதற்குரிய பதிலை மனதில் சொல்லிக்கொள்ள அவர்களுக்கு நேரம் இருக்கும். உங்களோடு மனதில் உரையாடுவது போல் அவர்கள் உணர்ந்தால், அவர்களுடைய கவனத்தை நீங்கள் ஈர்த்துப் பிடித்திருக்கிறீர்கள் என்பாது உறுதியாகிவிடும்.

அனுபவ பகிர்வு 

கவனத்தை ஈர்ப்பதற்கு மற்றொரு சிறந்த வழி நிஜ வாழ்க்கை அனுபவத்தை பயன்படுத்துவதாகும். ஆனால் அந்த அனுபவம் அவையில் யாரையும் சங்கடப்பட வைப்பதாக இருக்கக் கூடாது. அது உங்களுடைய பேச்சின் நோக்கத்தைக் சீர்குலைக்கலாம். அனுபவங்கள் தற்பெருமை பேசுவதாகவும் இருக்கக் கூடாது. அது அனுபவப்பகிர்வாக மட்டுமே இருக்கவேண்டும்.


அந்த அனுபவங்களில் இனிமையான தருணங்கள், நீங்கள் எதிர்கொண்ட சவால்கள், அவைகளை முறியடித்த விதங்கள் போன்றவைகளை சுவையுடன் சொல்லலாம். முன்னுரையில் ஓர் அனுபவத்தைக் குறிப்பிடும்போது, பேச்சின் பொருளுரையில் நீங்கள் சொல்லும் சில முக்கிய அம்சங்களுக்கு அது அஸ்திவாரமாக அமைய வேண்டும். அனுபவத்தை தத்ரூபமாக விளக்குவதற்கு சில முன்னுதாரணங்கள் தேவைப்படும் இடங்களில் பயன்படுத்தலாம். ஆனால், அனுபவத்தை தேவையில்லாமல் இழுத்துக்கொண்டே போகாமல்

அழகான அனுபவமாக கூறுங்கள்

பேச்சாளர் சிலர் தங்கள் பேச்சை சமீபத்திய செய்தியோடு தொடர்பு படுத்தியும், நகைச்சுவை உணர்வுடனும் பேசுவார்கள். அந்த உத்தி சிறப்பாக இருக்கும். நடைமுறை வாழ்க்கைப் பிரச்னைகளோடு அனுபங்களை பகிரும்போது கேட்பவர்களுக்கு சுவைசேர்க்கும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News