உண்மைக் காதல்..! (சிறுகதை) (Tamil romantic stories)
காதல் என்பது அழகு பார்த்தோ அலலது அந்தஸ்து பார்த்தோ .வருவதில்லை. பின் எப்படி வரும்? இந்த சிறுகதையை படிங்க தெரிஞ்சுக்கங்க.;
உண்மைக் காதல்..! (சிறுகதை)
எழுதியவர் : க.சு.பூங்குன்றன்
Tamil romantic stories
ராஜாங்கம், தமிழகத்தில் மிகப்பெரிய தொழில் அதிபர். அவரது மனைவி ஹேமா. ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் என அழகான குடும்பம். அவரது மகன் வெங்கடேஷ் அமெரிக்காவில் படிப்பை முடித்துவிட்டு வந்து தந்தையின் தொழிலை கவனித்து வருகிறான்.
மகன் வெங்கடேஷ் அமைதியானவன். தந்தை எது சொன்னாலும் அதற்கு மறுபேச்சு கிடையாது. தலையாட்டிவிட்டு போய்விடுவான். அவனுக்கும் ராஜாங்கத்தின் தகுதிக்கு ஏற்ப விருதுநகரில் தொழில் அதிபராக இருக்கும் சத்யமூர்த்தி என்பவரது ஒரே மகளான வர்ஷிணியை திருமணம் செய்து வைத்தார்.
ராஜாங்கம் -ஹேமா தம்பதியரின் இரண்டாவது குழந்தைதான் (மகள்) சுலோச்சனா. அவள் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறாள். சுலோச்சனா அண்ணன் வெங்கடேஷுக்கு நேர் எதிரானவள்.
மறைத்து பேசும் பழக்கம் கிடையாது. தனக்கு சரி என்பதை செய்வதற்கு தயங்க மாட்டாள். அதேபோல தவறாக ஒன்றைச் சொன்னால், அது தந்தை ஆனாலும் குறுக்கிட்டு கூறி விடுவாள். அதுதான் அவளது சுபாவம்.
படிப்பில் கெட்டிக்காரி. தனது தந்தையை அடையாளம் காட்டாமல் கல்லூரியில் 3 ஆண்டு காலம் படித்து வருகிறாள். தனக்கென ஒரு அடையாளம் வேண்டும் என்ற கொள்கை உடையவள், சுலோச்சனா.
சுலோச்சனா படித்துவரும் அதே கல்லூரியில் அவளது வகுப்பில் கார்த்திக் என்ற மாணவனும் படித்து வருகிறான். கார்த்திக் அழகான தோற்றமும், அமைதியான முகமும் கொண்டவன். மிக சாதாரண குடும்பத்தில் பிறந்து தனது கல்வி மட்டுமே தனக்கான வளர்ச்சி என்ற கொள்கையோடு படித்து வருபவன். பெண்கள் மீது அதீத மரியாதை வைத்திருப்பவன்.
தன்னோடு படிக்கும் மாணவிகள் மத்தியில் கார்த்திக் என்றால் தனி நல்ல பெயர் உண்டு. மற்ற மாணவர்கள் போல தேவை இல்லாமல் பெண்களிடம் பேசமாட்டான். அது எல்லா மாணவிகளுக்கும் தெரியும். அவனும் படிப்பில் கில்லாடி. இப்போதுவரை அவன்தான் கல்லூரி அளவில் டாப் ரேங்கில் உள்ளான்.
Tamil romantic stories
இறுதி ஆண்டில் பல்கலைக்கழக அளவில் நிச்சயம் கோல்ட் மெடல் வாங்குவான் என்பது கல்லூரி முதல்வர், அவனது துறைத்தலைவர் மற்றும் பேராசிரியர்களின் நம்பிக்கை. இத்தனைக்கும் அவன் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வந்தவன். அவனது பெற்றோருக்கு ஒரு சிறிய ஓட்டு வீடு, 5 ஏக்கர் நிலம், 2 பசுக்கள் மட்டுமே அவர்களுக்கான சொத்து.
கார்த்திக் மிகப்பெரிய சொத்தாக நினைப்பது அவனது படிப்பை மட்டுமே. பெற்றோருக்கு ஒரே மகன் என்பதால், தந்தை விவசாயத்தில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு படிக்க வைக்கிறார். தந்தை பழனிவேலுக்கு உதவியாக தாய் பூரணமும் வயலில் வேலை செய்து வருகிறார்.
சுலோச்சனா, தமிழ்நாட்டின் மிகப்பெரிய தொழில் அதிபர் ராஜாங்கத்தின் மகள். ஆனால், தன்னை யார் என்று அடையாளம் காட்டிக்கொள்ளாமலேயே இந்த கல்லூரியில் படித்து வருகிறாள். அதனால் கல்லூரியைப் பொறுத்தவரை யாருக்குமே அவள் மிகப்பெரிய தொழில் அதிபரின் மகள் என்பது தெரியாது.
சுலோச்சனாவுக்கு கார்த்திக்கின் அறிவுத்தெளிவு, பண்பு மற்றும் பணிவு, மற்றவர்களோடு பழகும் விதம், ஆசிரியர்களுக்கு அவன் கொடுக்கும் மரியாதை, அவனிடம் இருக்கும் ஆளுமைத்திறன் போன்ற குணங்கள் பிடித்துப்போயின.
அவளையும் அறியாமல் காதல் வலைக்குள் வீழ்ந்தாள். எதையும் மறைக்கத்தெரியாத குணம் உடையவள் என்பதால்,
'கார்த்திக், உன்னோடு தனியாக பேசணும். ஈவினிங் கேண்டீனில் மீட் பண்ணுவோமா?' என்றாள் சாதாரணமாக. சற்றே வியப்பில் ஆழ்ந்த கார்த்திக், சுதாகரித்துக்கொண்டு,'ஓ யெஸ்.. அஃப்கோர்ஸ்.' என்றான்.
என்னதான் பெரிய பணக்கார வீட்டு பெண் என்றாலும், முற்போக்கு சிந்தனையுடன் கலகலப்பாக இருந்தாலும் காதல் என்று வந்துவிட்டால் எல்லோருக்கும் ஒரே அளவுகோல் தான். ஆமாம், தவிப்பு. மாலை ஆவதற்குள் சுலோச்சனாவால் அமைதியாக இருக்க முடியவில்லை.
அதுக்குள்ள 4 மணி ஆகிவிட்டதா என்று ஆச்சரியப்படும் சுலோச்சனாவுக்கு இன்று 4 மணியாக இவ்ளோ நேரம் ஆகுமா? என்று பரபரப்பாக இருந்தது. அப்பா.. ஒருவழியாக 4 மணி ஆகிவிட்டது.
தனது தோழிகளிடம் ஒரு வேலை இருப்பதாக கூறிவிட்டு நேராக கேண்டீன் சென்றாள். மனம் ஏனோ சாதாரண நாட்களைவிட படபடப்பாக இருந்தது. இதுதான் காதல் உணர்வோ? என்று அந்த புதிய அனுபவத்தை ரசித்தாள்.
கேண்டீனுக்குள் சென்று யாரும் இல்லாத தனி மேசையில் அமர்ந்தாள்.
Tamil romantic stories
இன்னும் கார்த்திக் வரவில்லை. அவனோ..அங்கே குழப்பத்தில் ஆழ்ந்திருந்தான். என்ன விஷயமாக இருக்கும்? ஒருவேளை ஏதாவது டவுட் கேட்பாளோ? டவுட் கேட்டால், உனக்கு ஏண்டா படபடப்பு? எதுவாக இருந்தாலும் நேரில் போய் பாரு. அப்புறம் முடிவு பண்ணலாம்' என்று உள்மனம் பேச, மெதுவாக கேண்டீனை நோக்கி நடந்தான்.
இருந்தாலும் நார்மலாக இருக்கமுடியவில்லை என்பதையும் அவனால் உணரமுடிந்தது. ஒருவேளை அவனுக்குள்ளும் காதல் இருந்ததோ என்னவோ? அவனே கேட்டுக்கொண்டான். நீ சுலோச்சனாவை காதலிக்கிறாயா? இப்படி ஒருவள் மனைவியாக வந்தால் நன்றாக இருக்கும்' என்று மட்டும்தானே நினைத்து இருக்கிறேன்' என்ற பதிலுக்கு அவனது மனசாட்சி மீண்டும் பதில் சொன்னது. 'இது போதாதா..உன்னையும் அறியாமல் அவளை காதலித்து இருக்கிறாய். படிப்பு படிப்பு என்று இருந்ததால் அது உள்ளுக்குள் பூட்டிக்கிடந்துள்ளது.' என்ற பதிலில் 'ஒருவேளை இருக்கலாமோ..?' என்றது பதிலுக்கு.
அதற்குள் கேண்டீன் வந்துவிட்டது. கேண்டீனில் பார்வைவையை வீசினான். தனியாக ஒரு மேசையில் சுலோ உட்கார்ந்து இருப்பது தெரிந்தது. நாக்கு ஏனோ வறண்டது போலானது. இருப்பினும் அமைதியாக ஒருவித படபடப்புடன் போய் சுலோச்சனா எதிரில் அமர்ந்தான்.
அவளும் பேசாது இருந்தாள். அந்த அமைதி நிலையே ஒருவித புதுமையான உணர்வுகளை இருவருக்குள்ளும் கொண்டுவந்தது. இருவருமே முகத்தை பார்த்துக்கொள்ளவில்லை. கேண்டீன் பையன் வந்து,
'சார் என்ன சொல்லட்டும்?' என்றான்.
சட்டென நிலைக்கு வந்த சுலோச்சனா, ' கார்த்திக் காஃபி தானே?' என்றாள். அவனும் தலையாட்டி வைத்தான்.
'ரெண்டு காஃபி' என்றதும் கேண்டீன் பையன் நகர்ந்தான்.
சிறிது நேரம் அமைதி. காலத்தை நீட்டிக்க வேண்டாம் என்று முடிவெடுத்த சுலோச்சனா, ' கார்த்தி, எனக்கு உன்னைய ரொம்ப புடிச்சிருக்கு. நம்ம ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணிக்குவோமா?' என்று சட்டென போட்டுடைத்தாள்.
சற்று அதிர்ந்தாலும் மனதுக்குள் கார்த்திக்கு மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. அவளே தொடர்ந்தாள்.
'கார்த்தி, முதலில் படிப்பை முடிப்போம். முடிச்சிட்டு கல்யாணம் பத்தி முடிவெடுப்போம். அதுவரை படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவோம். நாம் சாதிச்சிக் காட்டணும். நீ யூனிவர்சிட்டி லெவலில் கோல்ட் மெடல் எடுப்பேன்னு, நம்ம பிரின்சிபால், எச்ஓடி எல்லோரும் நம்பிக்கையோடு இருக்காங்க. அந்த பேரை நீ வாங்கணும். உங்க அப்பா அம்மாவையும் பெருமை படுத்தனும்' என்றாள், மெல்லிய குரலில்.
Tamil romantic stories
'அது வந்து சுலோ..' என்று தயங்கினான் கார்த்திக்.
'என்ன கார்த்திக்? எதுவா இருந்தாலும் சொல்லு. ஐ ஆம் ரெடி டு அக்செப்ட்' என்றாள்.
'நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். எங்க அப்பா, அம்மாவுக்கு ஒரே பிள்ளை. எனக்கு இருப்பது ஒரு ஓட்டு வீடு, ஒரு 5 ஏக்கர் நிலம் இதுமட்டும்தான். நான் எனது படிப்பில் தான் முன்னேறணும்.' என்றான் தயங்கித்தயங்கி.
'கார்த்திக், எனக்கு பிடிச்சதே உன்னிடம் உள்ள பண்பு, பணிவு, திறமை, உன்னோட நம்பிக்கைதான். வேறென்ன எனக்கு வேணும்? பணம் காசெல்லாம் எனக்கு வேணாம். நீ மட்டுமே வேணும்' என்றாள், உறுதியான மனதோடு.
அவனிடம் மட்டும் தான் யார் என்ற உண்மையை, மெதுவாகக் கூறினாள், சுலோச்சனா.
அதிர்ந்து எழுந்தான், கார்த்திக்.'என்ன சொல்ற சுலோ? நீ மிஸ்டர்.ராஜாங்கத்தோட பொண்ணா..? எப்பிடி சுலோ நான் செட்டாவேன்.? எனக்கு நினைச்சாலே நடுங்குது.' என்றான் கார்த்திக்
'கார்த்திக் நீ எதுக்கு பயப்படறே? நான் உறுதியா உன்னோட இருப்பேன்.' என்றாள் படபடப்புடன்.
'இல்லை சுலோ, இது பயம் இல்லை. தகுதிக்கு மீறிய இடம் என்கிற அச்சம். என் அப்பா அம்மா ரொம்ப சாதாரணமானவங்க. நான் படிச்சிருக்கேன் என்பது மட்டும்தான் எனக்கான தகுதி.' என்றான் சற்று தயங்கிய குரலில்.
அவள் கோடீஸ்வரியாக் இருக்கிறாளே என்று தொடக்கத்தில் காதலை மறுத்து வந்த கார்த்திக் அவளது உறுதியான மனம் மற்றும் அவளது உண்மையான அன்பால் ஈர்க்கப்பட்டான். கல்லூரி முடியப்போகும் தருணத்தில் ராஜாங்கத்திற்கு சுலோச்சனாவின் காதல் விவகாரம் தெரிய வந்தது.
உடனே ஒரு கோடீஸ்வர மாப்பிள்ளையை அவசர அவசரமாக பேசிமுடித்தார். சிறிதும் பதற்றமின்றி சுலோச்சனா, நேராக மாப்பிள்ளை வீட்டுக்குச் சென்று தனது காதல் கதையை எடுத்துக்கூறி திருமணத்தை நிறுத்தினாள்.
தனது எதிர்கால கணவன் கார்த்திக்கை மாணவர்கள் ஆசியுடன் ஒரு சிறிய கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டாள். இப்போது கார்த்திக் மனைவி ஆனாள், சுலோச்சனா.
கணவன் கார்த்திக்கை அழைத்துக்கொண்டு நேராக அவளது வீட்டிற்கு (சாரி) மாளிகைக்கு வந்தாள்.
'அப்பா, அம்மா' என்று சத்தமிட்டு தனது தாய்,தந்தையை அழைத்தாள். மாலையும் கழுத்துமாக நின்ற மகளைப் பார்த்து அதிர்ந்து .நின்றனர்.
'நான் எனக்கான வாழ்க்கையை தேர்ந்தெடுத்து விட்டேன். உங்கள் பணமோ, நகையோ, இந்த கார்,பங்களா எதுவும் என்னை மகிழ்ச்சியாக வாழவைக்காதுப்பா. எது அவனிடம் இருக்கிறதோ அதைத்தான் நான் விரும்பினேன். அதுதான் எனக்கு மகிழ்ச்சியும் தரும். ஆடம்பரமான இந்த மாளிகையில் அன்பைத் தொலைத்துவிட்டு, மனைவி என்கிற அடிமையாக வாழ எனக்கு இஷ்டம் இல்லைம்மா.
Tamil romantic stories
என் கணவன் வீடு சிறியதுதான். ஆனால் அங்கு அன்பு கொட்டிக்கிடக்கிறது. அந்த வீட்டின் எஜமானி, மகாராணி எல்லாமே நான்தான். ரெண்டுபேரும் என் வீட்டுக்கு வாங்க. இப்போ எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க'. என்று தரையில் இருவரும் விழுந்தார்கள். அதிர்ச்சியில் இருந்து மீளாது சிலையாக நின்றனர் பெற்றோர்.
'எதுக்குப்பா இந்த அதிர்ச்சி? அம்மா உன்மகள் சாகப்போகலை. வாழப்போறா. அதுவும் மகாராணிப்போல. எங்களை வாழ்த்தி அனுப்புங்க. போய்ட்டு வாரேன் அம்மா. போய் வருகிறேன் அப்பா'
கார்த்திக்கின் கைபிடித்து அழைத்துச்சென்றாள் சுலோச்சனா.
(முற்றும்)