இயற்கையை போற்றினால் இயற்கை நம்மை வாழவைக்கும்..! இயற்கை கவிதைகள்..!

Quotes About Nature in Tamil-இயற்கை என்னும் இளையக் கன்னி, முதிர்ச்சி அடைந்து கிழவி ஆகிறாள், இந்த மனித செயல்பாடுகளால்.

Update: 2022-10-31 08:48 GMT

Quotes About Nature in Tamil

Quotes About Nature in Tamil

இயற்கை, இந்த பூமியின் வரப்பிரசாதம். விரிந்து கிடக்கும் வானம், கால்களில் மிதிபடும் பூமி, பூமியில் வான்தொடும் மலைகள்..மலைகளில் வளர்ந்திருக்கும் விதவிதமான மரங்கள், செடிகள்,கொடிகள்..! அந்த மரக்கூட்டங்களுக்குள் வளரும் விலங்குகள், பறவைகள், வகைவகையான பூச்சியினங்கள் அத்தனையும் இந்த பூமியின் பொக்கிஷங்கள்..! சூரியன்,சந்திரன் இந்த புவிக்கு கிடைத்துள்ள நிஜ அமிழ்தங்கள்..! இந்த இயற்கை இல்லாமல் உயிரினங்கள் இல்லை. மனித செயல்பாடுகள் இந்த பூமியின் இயற்கைத்தன்மையை அழிப்பதாகவே இருக்கிறது.

ஓ..மனிதா..நீ இந்த புவியை காப்பாற்றாவிட்டால்..உன்னை இந்த இயற்கையே கொன்றுவிடும். ஆதலால் இயற்கையைக் காப்பாற்ற மரங்கள் வளர்ப்போம். கரியமில வாயுக்கள் உமிழ்வை குறைப்போம். இந்த பூமி இல்லையேல் நாம் இல்லை என்பதை உணர்வோம். எதிர்கால சந்ததிக்கு ஒரு நல்ல பூமியை விட்டுச் செல்வது நமது கடமை. அவர்களுக்கும் இந்த பூமியில் வாழும் உரிமை உண்டல்லவா..?  இதோ இயற்கை பற்றிய கவிதைகள்..எங்கள் வாசகர்களுக்காக..

  • யாரிடம் பெற்ற உன் மேனி நிறங்கள்..? வண்ணத்துப்பூச்சிஇடம் இரவல் பெற்றீர்களா சின்ன மலர்களே..! உங்கள் நிறங்களில் மனம் மயங்கியே வண்டினங்கள் தேன் குடிக்க உங்களைத்தேடுகின்றனவோ..?!!
  • கூடிச் செல்லும் மேக சாளரத்தின் வழியே எட்டிப்பார்க்கும் நிலாப்பெண்ணே, உன் சூரியக்கதலனை எதிர்பார்த்து காத்திருக்கிறாயா..? அவன் நள்ளிரவில் வரமாட்டான் என்பதறிந்தும் ஏனிந்த மதிமயக்கம்..?!!
  • மரத்தை அழிக்காதீர்கள்.. அது உயிரோடு இருக்கும்போது நாம் சுவாசிக்க காற்றைத்தரும்..அது இறந்தபின்னும் நம் இறப்புக்கு விறகாகும் நம்மை எரிப்பதற்கு..!
  • கல்லும் மலையும் கடந்து மலை உச்சியிலிருந்து நீ குதித்தாலும் உனக்கு மட்டும் ஏனோ மரணம் நிகழ்வதில்லை..ஓ..நீர்வீழ்ச்சியே எங்களுக்கும் அந்த வரம் தருவாயா..?


  • மலையே உன்றன் மலையெனும் மேனியில் பனியினை வெண்மையாய் போர்த்திக்கொள்கிறாய்..! சூர்யப் பெண்ணவள் உன் மேனி தொட்டால் நாணம் வரும் என்றா அப்படிச் செய்கிறாய்..?
  • மழைக்குழந்தை, இடித் தாயின் தாலாட்டை கேட்டவுடன் அழுகையை நிறுத்தி விடுகிறதோ…அதனால்தான் இடி இடித்ததும் மழை நிற்கிறதோ..??
  • வீரமாக காலையில் எழும் சூரியனே..மாலையில் உன் சந்திரக்காதலியைக் காணவோ இருளடையச் செய்கிறாய்..? எங்களை இருட்டுக்குள் தள்ளிவிட்டு உன் காதலியுடன் மறுபுறத்தே ஊசுற்றுகிறாயா..?
  • எத்தனை யுகங்கள் கடந்தாய் என்பதை நீயே அறியாமல் களைப்பின்றி, சலிப்பின்றி இன்னும் தொடர்ந்து கடக்கும் விண்பயணி,நீ..! வெள்ளைப் பேரழகி…! தேய்ந்து வளரும் அபூர்வ வெண்ணிறத்தாள்..நிலா..!
  • காதலர்களின் கனவுப்பெண் நிலா..! கவிஞர்களின் உள்ளத்தில் குடிகொண்டிருக்கும் நிரந்தரக்காதலி..!
  • ஆர்ப்பரிக்கும் கடலுக்கும்..பூமாதேவியாக பொறுத்திருக்கும் பூமிக்கும் குடை பிடிக்கிறாயா வானமே..?! உன் நீலவண்ணக் குடைக்குள்தானே இந்த புவியின் அசைவுகள் அத்தனையும் நிகழ்கின்றன..!
  • ஆர்ப்பரிக்கும் கடல் அலை, துள்ளியோடி வந்து என் கால்களைத் தொடும்போது..சின்னக்குழந்தை ஒன்று என் மேனி தொட்டு செல்வதுபோல மகிழ்ந்து போகிறேன் நானும் ஒரு சிறு குழந்தைபோல..!
  • செடி மேடைகள்தோறும் வண்டுகள் உரையாற்றுவதற்காக மலர் மைக்குகள் பொருத்தப்பட்டுள்ளன..! தேன் எனும் ரசிகர் கூட்டம் நிரம்பி இருப்பதால் ஆவலோடு வண்டினங்கள் உரைநிகழ்த்துகின்றன..தினம்..தினம்..!
  • காற்றுக் காதலன் மேகக்காதலியை கட்டியணைத்ததால், குளிர்ந்து ஆனந்தக் கண்ணீர்தான் மழையோ..?
  • வானப்பெண்ணின் மேகக்கூந்தல் கருத்திருப்பதால்..தலைக்குளிக்க காத்திருக்கிறாள் பூமிப்பெண்..!
  • வான வீதியில் சிதறவிடப்பட்ட கோடிக்கணக்கான வெள்ளி நாணயங்கள்..! அவைகளின் மத்தியில் ஒற்றை தங்க நாணயம்.. நிலா..!
  • நட்சத்திரப் பட்டாளங்கள் புடைசூழ பாதுகாப்பாக, வானத்து அரண்மனையில் நிலா இளவரசி..! மேக மாதங்களின் வழியே அவ்வப்போது எட்டிப்பார்க்கிறாள், என் மனதை ஏதோ செய்கிறதே..!
  • குழாய் வழியே தண்ணீர் அனுப்பும் அரசுகளோ வரி வசூல் செய்கின்றன..தண்ணீருக்கு..! ஆனால் வரி வசூலின்றி இலவசமாய் வீட்டு வாசலில் தண்ணீர் விநியோகம் செய்கிறது,மழை..!
  • ஓ..நிலாப்பெண்ணே..! வான வீதிகளில் நீ தனித்து நடமாடும்போது, உன் மேக நண்பர்கள் மீது எனக்கு கோபம் வருகிறது..உன்னைத் தனிமையில் விட்டு விட்டு எங்கு சென்றார்கள் என்று..?
  • காலை நேரத்து சூரியக் கோவிலின் கதவுகளை திறப்பது யார்..? பகல் முழுவதும் பக்தர்களுக்கு தரிசனம் தந்த பின்னே மீண்டும் மாலையில் நடையை சாத்துவது யார்..?
  • ஏழைகள் என்ன தண்ணீர் இல்லாத வறண்ட பிரதேசத்துக்குச் சொந்தக்காரர்களா..என்ன..? ஏழையின் குடிசைக்குள் மட்டும் அழைக்காத விருந்தாளியாக வந்து சேர்கிறாயே மழை நீரே..!?
  • பள்ளம் பார்த்து பாய்ந்தாய்..மேட்டிலும் குதித்து தாவினாய்..பாறைகளில் மோதி சிதறினாய்..மலையில் இருந்து நீர்வீழ்ச்சியாய் குதித்தாய்..தரையில் சிறு குழந்தையாய் தவழ்ந்தாய்..இத்தனை ஆர்ப்பாட்டம் எதற்கு? உன் கடல் அன்னையைத் தேடிய ஓட்டமா..?
  • கரைகளில் கால்கள் இல்லாத கனங்களிலும் யாரை விரட்டிப் பிடிக்க ஆக்ரோஷமாக கரைக்கு ஓடி வருகிறீர்கள், அலைகளே..!
  • வானம் என்னும் இயந்திரத்தின் வழியே..மேக மாவிட்டு பூமிக்கு பிழியும் இடியாப்பம், மழை..!
  • பொழியும் மழைத் துளிகளுக்கு தெரிவதில்லை..பல உயிர்களின் தாகத்தை தீர்க்கத்தான் சென்று கொண்டு இருக்கிறோம் என்று..!
  • தங்கள் வீடுகளை இழந்து வீடற்ற அகதிகளாக அலையும்..பறவைகளுக்குத் தான் புரியும் மரங்களின் அருமை..!
  • தினமும் பகல் பெண்ணுக்கு இரவுக்கென்று தனி ஆடை ஒன்றுண்டு..! ஆமாம் இரவு வந்தால் கருப்பு நிற உடையை அணிந்து கொள்கிறாள்..!
  • வாழ்வது சில நொடிப் பொழுதுதான் என்றாலும் வாழும் தருணங்களில் தானும் குதூகலமாக வாழ்ந்து பிறரையும் பரவசப்படுத்துகிறது பனித்துளி..!
  • தன்னை வளர்த்து விட்ட மரத்து வேர்களை பூப்போட்டு வணங்குகிறதோ இந்த மலர்கள்..! மரத்தடியில் உதிர்ந்து கிடக்கும் மலர்கள்..!
  • இரவென்னும் போர்வையை இழுத்துப் போர்த்தியிருந்தேன்..போர்வைக்குள்ளிருந்து பார்த்தபோது அங்கங்கே சின்னஞ்சிறு ஓட்டைகள் தெரிகின்றனவே..! நட்சத்திரங்கள்..!
  • பகல் நேரங்களில் எங்கு சென்று மறைந்தீர்கள்..? பகலில் பூத்தால் பறிக்கலாம் என்றிருந்தால் இரவில் மட்டுமே பூக்குறீர்கள்..! நட்சத்திரங்கள்...!
  • விண்மீன்களை புள்ளியாக வைத்தது போதும்.. ! கோலமிட நிலா மகளை தேடுகிறது வானம்..! ஆனால் நிலாப் பெண்ணவள் இன்று வீட்டுக்குத் தூரம் என்பதை அரியமாட்டாளா வானம்..! ஆமாம் இன்று அமாவாசை..!
  • பசும் புல்லின் தலை நுனிகளிலும் ஒய்யாரமாக உட்கார்ந்து இருக்கிறது விடியும் வரை பனி..! சூரியன் அவனுக்கு பகையோ.. என்னவோ..பயந்து ஓடுகிறாள் பனியவள்..!
  • காதலிபோல உடலை இதமாக தழுவிச் சென்றால் அவள் தென்றல்..! கோர அரக்கியாய் அச்சமூட்டி உறுமிச் சென்றால் அவள் புயல்..!
  • மழையில் குளித்த மரங்களும் செடிகளும் இன்னும் இன்னும் தலை துவட்டிக் கொள்ளவில்லை போலும், மழைவிட்ட பிறகும் நீர் வடித்து நிற்கின்றன..!
  • நிலவவள் சிறகடித்து சிறகடித்து பறந்தால் எப்படி இருக்கும் ..? பூமிக்கு சக்கரம் கட்டி சுத்தவிட்டால் எப்படி இருக்கும் என்று என் மனம் கற்பனை சிறகில் பறக்கிறது..!
  • நிச்சயம் உனக்கும் ஒரு கால் கட்டு போடவேண்டும்..கால்கட்டு போட்டால் மட்டுமே காதலனைத் தேடி கரைக்கு ஓட மாட்டாய் அலை மகளே..!
  • அதிகாலை நேரத்தில் ஆண்டவனை விட ஆதவனே கண்ணுக்கு தெரிகிறான்...! அதனால்தான் அவனும் ஆண்டவன் ஆனானோ..?!

பூமிக்குழந்தையைக் குளிப்பாட்ட மேகத் தாயவள் தயாராகிவிட்டாள்..மழையாக நீரையூற்றி சுகமாக குளிப்பாட்டினாள்..! கொஞ்சிக்குலாவி குளித்து முடித்தது பூமிக்குழந்தை..!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News