மகனுக்கு மனைவி குறித்து அம்மாவின் அட்வைஸ்..! தவிர்க்க முடியாதது..! படீங்க..!
ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு கணவனும் மனைவியும் ஒருவருக்கு ஒருவர் புரிந்துகொள்வதும் அதேபோல விட்டுக்கொடுத்தலும் இருந்துவிட்டால் அங்கு மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
பொதுவாக புதிதாக கல்யாணம் ஆன மகன்கள் அம்மாவிடம் எதையாவது பேசிக்கொண்டு இருப்பார்கள். அதேபோல திருமணம் ஆன மகளும் அவரது அம்மாவோடு பேசிக்கொண்டு இருப்பார். இது சரியா? ஒரு தாயே தனது மகனுக்கு சில அறிவுரைகளை கூறுகிறார். இது மகனுக்கு மட்டுமல்ல மகளுக்கும் பொருந்தும்.
இதை பின்பற்றினால் குடும்பங்கள் சிதையாமல் உறவுகள் காப்பாற்றப்படும். இன்று உறவுகள் வெறும் பெயர்களில் மட்டுமே உள்ளன. அங்கு உரிமை இல்லை. அண்ணா, அண்ணி, மாமா, அத்தை, சித்தப்பா, சித்தி, என உறவுகள் இருந்தாலும் அவர்கள் மீதான உரிமைகள் செத்துவிட்டன என்பது வேதனைக்குரியது.
இப்போ அதைத் தொட்டால் கணவன் மனைவி உறவுக்கு நாம் வரமுடியாது. அதனால் நம்ம விஷயத்துக்கு வருவோம்.
ஒரு தாயின் அட்வைஸ் இது. நீங்களும் படித்து பின்பற்றுங்கள்.
அட்வைஸ் 1
எந்த சமயத்திலும் மனைவியை அம்மாவுடன் ஒப்பிட்டுப் பேசக்கூடாது. ஏன் ஒப்பிடவேக் கூடாது.
மகனே, மறந்தும் என்னை உன் மனைவியோட ஒப்பிட்டுப் பார்க்காதே.உன் அம்மாவுக்கு குடும்ப வாழ்க்கையில் 20 ஆண்டு கால அனுபவம் இருக்கிறது. ஆனா, உன் மனைவி உன்னை மாதிரி தான். அவளும் இந்த வாழ்க்கைக்குப் புதுசு.
உன்னை நான் வளர்த்த மாதிரி தான் அவங்க அம்மாவும் அவளை பார்த்துப் பார்த்து வளர்த்து அனுப்பியிருக்காங்க. நீ நம்ம வீட்டிலேயே இருக்கிற. ஆனா அவள் பிறந்த இடத்தைவிட்டு விட்டு புது இடத்துக்கு வந்திருக்கா. அவளுக்கும் கொஞ்சம் ஆண்டுகள் தேவைப்படும் இல்லையா..?
அதுக்கப்புறம், உனக்கு சிறந்த மனைவியாகவும், உன் குழந்தைக்கு அருமையான அம்மாவாகவும் அவள் இருப்பாள்.
அட்வைஸ் 2.
மனைவி உனக்கு அம்மா இல்லை, தோழி
மகனே, உன் மனைவி உன்னுடன் வாழ்க்கையை பகிர்ந்துகொள்ள வந்துள்ள தோழி. அம்மா இல்லை.
உன் அம்மாவுக்கு உன்னை கவனிக்கறது மட்டும் தான் வேலை. ஆனா உனக்கு, உன் மனைவிய நீ நன்றாக கவனிக்கிறது முக்கியம். நீங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் கவனிச்சு அன்பு செலுத்தறது மிக மிக முக்கியம்டா.
அவ மேல அன்பு செலுத்து. விட்டுக்கொடுத்து வாழ்ந்து பார். அதில உனக்கு ஒரு சுகம் தெரியும்.
அட்வைஸ் 3.
மனைவியை மதிக்கக் கத்துக்கணும் - மதிக்கப்படவேண்டிய உறவு மனைவிடா..
மகனே , உன் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் அதாவது ஏற்றத்தாழ்வுகள், நல்லது, கெட்டது என்று அனைத்திலும் உன் மனைவி உன்னோடு இருந்து பங்கு கொள்ளப்போகிறவள். அது இனிமேல் உங்களின் வயதான காலம்வரை தொடரும்.
அதனால் அவளை மதிக்கவேண்டும். உன் ஒவ்வொரு முன்னேற்றப்படியிலும் அவளின் பங்கு இருக்கும். அவளது கருத்துகளைக் கேட்டுப்பார். அவள் எவ்வளவு மகிழ்ச்சி அடைவாள் என்று பார். அவளது வார்த்தைகளுக்கும் முன்னுரிமை கொடுத்து வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருடா. அப்படி இருந்தால் உன்னை எந்த சூழலிலும் அவள் விட்டுக்கொடுக்கமாட்டாள்.
அட்வைஸ் 4.
புகுந்த வீட்டு மனைவி
புகுந்த வீடு வந்த மனைவிக்கு புதிய சூழலில் நீ மட்டுமே ஆதரவு. அந்த புதிய சூழலை அவளுக்கான சூழலாக மாற்றுவது உன்னால் மட்டுமே முடியும். அவளோடு இயல்பாக, அன்பாக பேசி நமது சூழலுக்கு கொண்டுவர உதவி செய்யணும்.
பிறந்து, வளர்ந்து மகிழ்ச்சியாக வாழ்ந்திருந்த பிறந்த வீட்டை விட்டு, நம் பொருட்டு புகுந்த வீட்டுக்கு வந்திருக்கா உன் மனைவி. அவளை இயல்பா இருக்க வைக்க நீதான் உதவணும். சின்னச் சின்ன விஷயங்கள் கூட அவளுக்கு சங்கடத்தைத் தரலாம். அதனால் அந்த சின்னச் சின்ன சங்கடங்கள் கூட வராமல் பார்த்துக்கொள்ளவேண்டியது உன் பொறுப்பு. அதை நீதான் கவனிச்சு அவள் பிறந்த வீட்டில் இருப்பதைப் போல உணர வைக்கணும்டா, மகனே..!
அட்வைஸ் 5.
எப்பவுமே மனைவிய காதலிக்கணும்
காதலிக்க வயசு ஒரு விஷயமே இல்லடா. இளமையில் மட்டுமல்ல உங்களின் முதுமையான காலத்திலும் கணவன் மனைவியையும் மனைவி கணவனையும் காதலிக்கணும். அப்பத்தான் அங்கே அளவில்லாத மகிழ்ச்சி இருக்கும். அதனால எப்பவும் உன் மனைவியை..சந்தோஷமா வச்சுக்கோ..
சின்னச்சின்ன சர்ப்ரைஸிங்கான பரிசுகள், வெளிய அழைச்சுட்டுப் போறது, அவள் டிரஸ்ஸிங்கை சிலாகிச்சுப் பேசறது, அவள் சமைச்சதை ரசிச்சு சாப்பிடறது, அவளது சமையலை புகழறது என்று சந்தோஷமா வாய்விட்டு சிரிக்கறது மாதிரியான விஷயங்கள் உங்க ரெண்டுபேரையும்...எப்பவும் இளமையா உணர வைக்கும். அதனால் அந்த மகிழ்ச்சியை மிஸ் பண்ணிடாதீங்க. ஏன்னா, வாழ்க்கை ஒரு முறைதாண்டா மகனே. அதை அனுபவிச்சு வாழுங்க.
நீ எப்படி உன் மனைவி மேல அன்பா இருப்பியோ அதே அன்புதான் உன் பிள்ளைங்களுக்கும் வரும். உன்னை நான் நல்ல மகனா வளர்த்த மாதிரி நீங்களும் உங்கள் பிள்ளைகளை நல்ல பிள்ளைகளா வளர்க்கமுடியும்.
மொத்தத்துல ஒரே வார்த்தையிலே சொல்லனும்னா
உங்க அப்பா (நல்ல அப்பா) என்னை எப்படி நடத்தினாரோ..அது போல நீயும் உன் மனைவியை கௌரவமா மதிச்சுக் குடும்பம் நடத்துடா மகனே.
உனக்கும், எனக்கு மருமகளா வந்திருக்கும் மகளுக்கும் என் அன்பும் வாழ்த்துகளும்... ஆசீர்வாதங்களும் எப்போதும் இருக்கும்.