''அதிர்ஷ்டத்தை நம்பாதீர்கள்..''
‘'அதிர்ஷ்டம்'’ என்பதற்கு என்ன பொருள் தெரியுமா..?
அதிர்ஷ்டம் என்பதற்கு குருட்டுத்தனம் என்று பொருள். அதாவது அதிர்ஷ்டம் என்ற வடமொழிச் சொல்லுக்கு பார்வை என்பது பொருள். 'அதிர்ஷ்டம் என்றால் பார்வையின்மை, குருட்டுத்தனம் என்று பொருள். அதிர்ஷ்டம் என்ற சொல்லின் பொருள் இப்படி இருக்க, பலரும் அதனைப் பயன்படுத்தி மனிதர்களைச் சோம்பேறிகளாக்கி வருகிறார்கள்… அறிவினாலும், அறிவியலாலும் ஏற்றுக் கொள்ள முடியாததே மூடநம்பிக்கை ஆகும். மனிதர்கள் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒருவகையில் ஒன்றின் மீது நம்பிக்கை கொண்டு உள்ளனர்.
ஆனால் அதுவே அறிவுக்கு ஒவ்வாத செயல்கள் மீது நம்பிக்கை கொண்டு இருந்தால் அது மூடநம்பிக்கையே.‘’அதிர்ஷ்டம்’’ என்னும் பெயரில் மக்களிடையே பரவியுள்ள மூடநம்பிக்கைகள் பெருமளவு. காரணம் காட்டியே உழைக்காமல் சோம்பேறிகளாக நிறையப் பேர் உள்ளனர். அதிர்ஷ்டத்தைத் தேடிக் கொண்டு இருக்கும் ஒருவனிடம் துளையிட்ட ஓரு காசு கிடைக்க அதிர்ஷ்டம் மிகுந்தது என நம்பி அதைத் தன் சட்டைப் பையில் வைத்துக் கொண்டான். அந்த நாணயத்தால் தன் வெற்றி நிச்சயம் என நம்பினான். எல்லோரும் பாராட்டும்படி வேலை செய்தான். எல்லாப் பிரச்சனைகளுக்கும் சுலபமாகத் தீர்வு கண்டான்.
தினமும் பணிக்குப் போகும் போது அந்த நாணயம் தன் சட்டைபையில் மனைவி வைத்து விட்டாளா, இருக்கின்றதா எனத் தடவிப் பார்த்து உறுதி செய்து நம்பிக்கையுடன் மகிழ்ச்சியாக சென்றான். வாழ்வில் பல படிகள் முன்னேறினான்.
ஒருநாள் தன் சட்டைப்பையில் உள்ள நாணயத்தை தனக்கு வாழ்வில் முன்னேற உதவிய அதிர்ஷ்டத்தை எடுத்துப் பார்க்க விரும்பினான். அவன் மனைவி தடுத்தும் கேளாமல் எடுத்துப் பார்த்தான்.
அப்போது அந்த நாணயத்தில் துளையில்லை. அதிர்ந்துப் போனான். அதைப் பற்றி மனைவியிடம் கேட்ட போது, பல நாட்களுக்கு முன்னால் அந்த சட்டையை எடுத்து உதறிய போது அந்த நாணயம் உருண்டோடி காணாமல் போனது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
அவன் வருத்தப்படுவான் என நினைத்து ஓர் துளை இல்லா நாணயத்தை சட்டைப் பையில் மாற்றி வைத்து உள்ளாள் எனத் தெரிய வந்தது. துளையிட்ட நணயம்- அதிர்ஷ்டமானது.. அது தன்னிடம் இருக்கின்றது என்ற நம்பிக்கை கொடுத்தப் பலம் தான் அவன் வெற்றிக்குக் காரணம். நாணயத்தில் ஏதுமில்லை.
அவனின் கடுமையான உழைப்பும், விடாமுயற்சியும் தான் வேலை செய்து இருக்கின்றது. ஆம்.,தோழர்களே.., அதிர்ஷ்டத்தை நம்பி நாட்களை வீணடிக்க வேண்டாம். எக்காரணம் கொண்டும் அதிர்ஷ்டத்தை நம்பி ஏமாறாதீர்கள். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால், உழைப்பை மட்டுமே நம்புங்கள்.