'லிவிங் டு கெதர்' வாழ்க்கை பெண்களுக்கு பாதுகாப்பானதா? படீங்க..!
Living Together Relationship Meaning in Tamil-'லிவிங் டு கெதர்' பாதுகாப்பான குடும்ப வாழ்க்கை முறையா? இதை சட்டம் என்ன சொல்கிறது? பார்க்கலாம் வாங்க.
Living Together Relationship Meaning in Tamil
திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்பவர்களுக்கு எந்த வகையிலும் சட்டப்பாதுகாப்பு கிடையாது. குறிப்பாக 'லிவிங் டு கெதரில்' பாதிக்கப்படுவர் பெரும்பாலும் பெண்கள்தான் என்பதை பெண்கள் உணர வேண்டும். ஆண்கள் சட்ட சிக்கல் இல்லை என்பதால் இன்னொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளத் தயங்குவதில்லை.
பெண்கள் மட்டுமே ஒருவருடன் வாழ்ந்தபின்னர் இன்னொருவருடன் வாழ்வதைப்பற்றி சிந்திப்பதில்லை. இந்த அவலம் சமூகத்தில் இன்று மட்டுமல்ல காலம் காலமாகவே உள்ளது.பெண்களை ஒரு போகப்பொருளாக எண்ணும் இந்த ஆணாதிக்க சமூகத்தில் அவர்கள் வெறும் சுகம் கொடுக்கும் இயந்திரம்,அவ்வளவே. அவர்கள் குடும்பத்திற்காக உழைக்கவேண்டிய ஒரு வேலைக்காரி என்பது மட்டுமே ஆண்களின் அடிமனதில் பதிந்துபோயுள்ளது.
இது ஒருவகையான சுரண்டல். பெண்களுக்கு எதிரான குற்றம் என்பதை உணர்தல் வேண்டும். காலம்காலமாக பெண்களுக்கு எதிராக செயல்படுத்தப்பட்டு வரும் அடக்குமுறை அவர்களை அடிமைகளாகவே ஆக்கிவந்துள்ளது. ஆனால், கல்வி அறிவு பெற்ற சமூகமாக உருவெடுத்த பின்னர் பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளத் தொடங்கிவிட்டனர். பெண்களுக்கு சாதகமான சில சட்ட நெறிமுறைகளும் வகுக்கப்பட்டுவிட்டதால் அவர்களுக்கான உரிமைகளைப் பெற்றுள்ளனர்.
ஆனால், இவ்வாறு கிடைத்த சுதந்திரத்தை தவறான வழிகளில் பயன்படுத்துவதால் சில பெண்கள் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு நிற்கின்றனர்.வாழ்க்கையில் படித்து சம்பாதிக்கத் தொடங்கும் பெண்கள் பணியாற்றும் இடங்களில் ஆண்களோடு பழகும் நிலை வருகிறது. அவர்களுக்கிடையே நெருக்கம் அதிகமாகும்போது, சேர்ந்து வாழும் நிலைக்கு உடன்படுகிறார்கள். இருவரின் சம்மதத்தில் அவர்கள் கணவன் மனைவி போலவே வாழ்க்கையைத் தொடங்குகின்றனர்.
ஆனால், அது எந்த வகையிலும் சட்டப்பூர்வமான வாழ்க்கை இல்லை. ஏற்கனவே கூறியதுபோல இந்த வாழ்க்கையால் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டுமே. அதற்கு பல உதாரணங்கள் தமிழ்நாட்டிலேயே உள்ளன.
மேஜரான ஆண், பெண் இரண்டு பேர் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்வதைத் தான் 'லிவிங் டு கெதர்' என்று சொல்கிறோம். இப்படி வாழ்பவர்கள் பிடித்தால் தொடரலாம். இல்லையென்றால் வெளியேறிவிடலாம். இப்படி திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவர்கள், தங்களுக்குள் ஏற்படும் எந்தப் பிரச்சினைகளுக்கும் குடும்ப நல நீதிமன்றத்தை நாட சட்டப்பூர்வமான உரிமை கிடையாது. இது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது.
ஆனால், இந்த உறவு முறையை இரண்டு வகையாக பிரித்து ஏற்கனவே உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2010ம் ஆண்டு லிவிங் டு கெதர் தொடர்பான இரண்டு வழக்குகள் உச்ச நீதிமன்றத்திற்கு வந்த போது குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் 'லிவிங் டு கெதர்' வாழ்க்கை முறைக்கு சட்ட அங்கீகாரம் கொடுக்கப்பட்டது.
அப்போது நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள வாழ்வதற்கான உரிமையின் வரம்பிற்குள் 'லிவிங் டு கெதர்' வருகிறது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், திருமணமாகாத மேஜர் இருவர் 'லிவிங் டு கெதர்' முறையில் வாழ சட்ட அங்கீகாரம் உள்ளதென்றும், மேஜராகவே இருந்தாலும் திருமணமானவருடன் திருமணமாகாதவர் சேர்ந்து வாழ்வதற்கு சட்ட அங்கீகாரம் இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக கோவையில் ஒரு சம்பவம் நடந்தது. கோவையைச் சேர்ந்த ஒரு பெண் ரஞ்சன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை 2013ல் திருமணம் செய்ததாகவும், 2016 முதல் தன்னைப் பிரிந்து ரஞ்சன் தனியாக வசித்து வருகிறார். ஆகவே தங்களை சேர்த்து வைக்க வேண்டும் என்று கோரி அந்தப்பெண் கோவை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஆனால், தனக்கும் அந்த பெண்ணுக்கும் திருமணம் நடக்கவில்லை என்று கூறிய ரஞ்சன், அந்தப்பெண்ணின் வழக்கை நிராகரிக்க கோரி மனுத்தாக்கல் செய்தார்.
அந்த இரு மனுக்களையும் விசாரித்த கோவை நீதிமன்றம், அந்தப்பெண்ணின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து அந்தப்பெண் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் மற்றும் நீதிபதி விஜயகுமார் அடங்கிய அமர்வு, பண பரிவர்த்தனை தொடர்பான முன் விரோதத்தால் அந்தப்பெண் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார் என்பது ஆதாரங்களில் இருந்து தெளிவாக தெரிவதாக கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்கள்.
இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தியுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதி, திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தவர்கள்,தங்களுக்குள் எழும் பிரச்னைகளுக்கு குடும்ப நல நீதிமன்றத்தை நாட எந்த சட்டப்பூர்வ உரிமையும் கிடையாது என்றும் தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளனர்.
2014ம் ஆண்டில் இதைப் போலவே ஒரு வழக்கு திருச்சி கோர்ட்டில் நடந்தது. அப்போது நீதிபதிகள், "திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வது சமூக நெறிமுறைகளுக்கு எதிரானது என ஐகோர்ட் கூறியுள்ளது. வெளிநாடுகளில் நடந்த சம்பவத்துக்கு, இந்தியாவில் வழக்குப் பதிவு செய்ய முடியாது என்றும் நீதிமன்றம் திருமணம் செய்யாமல் ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வது சமூகநெறிகளுக்கு எதிரானது" என்று கருத்து தெரிவித்திருந்தது.
இந்நிலையில், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவர்கள், குடும்ப நல நீதிமன்றங்களில் வழக்கு தொடர சட்டப்பூர்வ உரிமையில்லை என்று சென்னை ஐகோர்ட் தற்போது தெரிவித்துள்ளது..
இந்த இரண்டு உதாரணங்கள் 'லிவிங் டு கெதரில்' உள்ள பிரச்னைகளை தெளிவுபடுத்தும். குறிப்பாக இதில் படித்த பெண்களே இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாமல் சேர்ந்து வாழ முற்படுகின்றனர். திருமணம் செய்யாமல், பெற்றோருக்குத் தெரியாமல் இப்படி வாழ்வது எதிர்கால நலனுக்கு உகந்தது அல்ல என்பதை பெண்கள் உணர்தல் அவசியம்.
இப்போது உள்ள சமூக கட்டமைப்பில் யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என்பதை அறிவது சவாலான விஷயமாக உள்ளது. பணம் ஒன்றே குறிக்கோளாக வாழும் இந்த சமூகத்தில் நாம் மிக கவனமாகவே ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கவேண்டும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2