குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ 10 வழிகள் என்ன?

குடும்பம் என்பது ஒரு வரம். மகிழ்ச்சியான, நிம்மதியான குடும்ப வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை. குடும்பத்துடன் வாழ சில வழிமுறைகளை பின்பற்றினால் ஜெயித்து விடலாம்.

Update: 2024-10-11 03:43 GMT

மகிழ்ச்சியான குடும்பம் ( கோப்பு படம்)

குடும்பம் என்பது ஒரு வரம். மகிழ்ச்சியான, நிம்மதியான குடும்ப வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை.அமைந்து விடுவதில்லை என்று சொல்வதை காட்டிலும் அமைத்துக் கொள்வதில்லை என்று கூறலாம். நம் பெற்றோர், பிள்ளை, சகோதரிகள் நம் குடும்பம் தான் நம் முதல் சொத்து. அவர்களுக்கு ஏதாவது என்றால், அழுகிறோம், மனம் உடைந்து போகிறோம்.

அவர்களுக்காக உழைக்கிறோம். தியாகங்கள் செய்கிறோம். சிலர் தன் குடும்பத்தை எப்படியாவது வறுமையிலிருந்து மீட்டு கரை சேர்த்து விட வேண்டும் என பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு, போராடி உழைத்து சொந்தமாக வீடு கட்டி தான் திருமணம் செய்யாமல் தன் சகோதர, சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைத்து அழகு பார்க்கின்றனர்.

இன்றைய காலத்தில் அதிகமான விவாகரத்து வழக்குகள் நீதிமன்றங்களில் குவிந்து கிடக்கின்றன. பல காரணங்கள் இருந்தாலும், மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை இல்லாமையே பிரதான காரணமாகும்.

1.வேலை வேறு, குடும்பம் வேறு: வேலை முடித்துவிட்டு வீடு திரும்புகையில் பாதணிகளைக் கழட்டுவீர்கள் தானே ? அக்கணமே உங்கள் வேலையினையும் சேர்த்து வீட்டிற்கு வெளியே வைத்து விட்டு செல்லுங்கள். அதாவது, நீங்கள் வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்ட மனக்கசப்பு, கோபம், பிரச்சினைகளை வீட்டிற்குள் கொண்டு செல்லாதீர்கள்.

2.நேரம் ஒதுக்குங்கள்: நீங்கள் நண்பர்களுடன் செலவிடும் நேரத்தைக் காட்டிலும் குடும்பத்துடன் நேரம் செலவிடுங்கள். அவர்களுடன் இறுக்கமான பிணைப்பினை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.

3. கலந்துரையாடுங்கள்: உறங்கச் செல்லுமுன் அன்றைய நாளை பற்றி பேசுங்கள். கலந்துரையாடுங்கள். குடும்ப உறுப்பினர்களின் கதைகளைக் கேட்டு பரிமாறிக் கொள்ளுங்கள்.

4. நகைச்சுவை உணர்வு: இடைக்கிடையான நகைச்சுவையும் குடும்பத்திற்குள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். ஆனால், முகம் சுளிக்காதவாறு இருத்தல் வேண்டும்.

5. பாராட்டுக்கள்: பெயர், முகம் தெரியாத பலரை பேஸ்புக்கிளும் வாட்ஸ்அப்பிலும் புகழ்கிறோம். பாராட்டுகிறோம். ஆனால், ஒரே வீட்டில் உண்டு வாழும் குடும்பத்தினரை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.

” குழம்புக் கறி நல்லா இருந்தது “

” இந்த சாரியில் நீ நல்லா இருக்க “

” இந்த முறை உங்கள் புள்ளிகள் நல்லா இருக்கின்றன ” என ஒருவருக்கொருவர் பாராட்டிக் கொள்ளுங்கள்.

6. குறைகளை ஏற்று வாழுங்கள்: கணவன், மனைவி, பிள்ளைகள் எல்லோரும் மனிதர்களே. மனிதர்கள் என்றாலே எல்லோரிடத்திலும் ஏதாவது ஒரு குறை இருக்கத்தானே செய்யும். “குறைகளை ஏற்று வாழுங்கள். இங்கு எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து விடுவதில்லை”. ஆனால், குறைகளை விட நல்ல விடயங்கள் அதிகமாகவே இருக்கும். அதனை புகழுங்கள்.

7. சுற்றுப்பயணங்கள்: எந்நேரமும் வேலை என சுற்றிக் கொண்டிருப்பவர்கள் குடும்பத்தினருடன் நிம்மதியாக, மகிழ்ச்சியாக சுற்றுப் பயணங்களை மேற்கொள்ளலாம். அல்லது வீட்டிற்கு அருகிலுள்ள தளங்களை பார்வையிடலாம். மற்றும் குடும்பத்தினரை உறவினர் வீடுகளுக்கு அழைத்துச் செல்லலாம்.

8. சேர்ந்து உணவருந்துங்கள்: இப்போதெல்லாம் தாய் நாடகம் பார்த்துக்கொண்டு உணவருந்த, பிள்ளைகளோ மொபைல்போன் பாவித்துக்கொண்டு உணவு அருந்துவது வழமையாகி விட்டது. இது ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல. எல்லோரும் ஒரே மேசையில், பாயில் சேர்ந்து உணவருந்தலாம். ஒருவருக்கொருவர் உணவுகளை பரிமாறி கொள்ளலாம்.

9. செவிமடுங்கள்: குடும்பத்தினருக்கு மத்தியில் பிரச்சினைகள் வருவதற்கான காரணங்களில் ஒழுங்காக செவிமடுக்காமையும் ஒரு காரணமே. கணவன் செல்வதை மனைவியும், மனைவி சொல்வதை கணவனும், பெற்றோர், பிள்ளைகள் பிள்ளைகள், பெற்றோர் என ஒருவர் சொல்வதை மற்றவர் அமைதியாக செவிமடுத்தாலே போதும் பாத்திரங்கள் காற்றில் பறக்காது.

10. பரிசளித்துக் கொள்ளல்: அடிக்கடி குடும்பத்தினர் மத்தியில் போட்டிகளை நடத்தலாம். பரிசளித்துக் கொள்ளலாம். மனைவியின் சுவையான உணவிற்கு ஓர் பரிசு, பிள்ளைகளின் நன்னடத்தைகளை பாராட்டி பரிசு என ஒருவரை ஒருவர் பரிசளித்துக் கொள்வதன் மூலம் மகிழ்ச்சி நீடிக்கும்.

Similar News