இரட்டையர்கள்..! சுவாரஸ்யங்கள்..!

சராசரியாக உலக மக்களில் ஆயிரம் பேருக்கு 8 என்ற விகிதத்தில் இரட்டையர்கள் இருக்கின்றனர்.

Update: 2024-08-08 05:45 GMT

ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்.

இந்தியாவில் ஆயிரம் பேருக்கு நான்கு பேர் தான் இரட்டையர்கள். அச்சு அசலாக ஒரே சாயலில் இருக்கும் இரட்டைப் பிறவிகள் உலகெங்கும் தோராயமாக 1 கோடிக்கும் அதிக எண்ணிக்கையில் இருக்கலாம் என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. மொத்த மக்கள்தொகையில் 10 சதவிகிதம் இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள். ஆனால் இரட்டைப் பிறவிகளில் 22 சதவிகிதம் பேருக்கு அப்பழக்கம் இருக்கிறது.

இம்மாதிரி ஒட்டிப் பிறக்கும் இரட்டையர்களுக்கு மூளை, இதயம் போன்ற மிக முக்கிய உறுப்புகள் பொதுவாக இருந்தால் அறுவை சிகிச்சை மிக சிக்கலானதாக இருக்கும்.

என்ன தான் ஒரே ஜாடையில் இருந்தாலும், இரட்டைப் பிறவிகளின் கைரேகை ஒருவருக்கொருவர் வித்தியாசப்படும். அரிதான சில பிரசவங்களில் இரட்டைப் பிறவிகள் ஒருவருடன் ஒருவர் ஒட்டிப் பிறப்பதுண்டு. இம்மாதிரி பிறப்பவர்களை சயாமிய இரட்டையர்கள் என்பார்கள். சயாமில் (இப்போதைய தாய்லாந்து) 1811ல் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களான ச்சாங் மற்றும் எங்பங்கர் மிகவும் பிரபலம். அதனால் ஒட்டிப் பிறக்கும் இரட்டையர்களை சயாமிய இரட்டையர்கள் என்று கூறுவார்கள்.

இதனைடையே சிலர் இரட்டையராக இருக்க மாட்டார்கள் ஆனால், இணைந்தே தங்கள் துறையில் வெற்றிக்கொடி நாட்டியிருப்பார்கள். அவர்களையும் செல்லமாக இரட்டையர்கள் என்று அழைப்பது வழக்கம். நகைச்சுவையில் கலக்கிய லாரல் - ஹார்டி உண்மையில் இரட்டையர் அல்ல. ஆனால், ‘காமெடி இரட்டையர்’ என்றே புகழப்பட்டவர்கள்.

இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி, சங்கர் - கணேஷ் போன்றவர்கள் இணைந்து பணியாற்றியதால் ‘சங்கீத இரட்டையர்’ என அறியப்பட்டனர். சுரேஷ், பாலகிருஷ்ணன் இருவரும் தங்கள் பெயர்களின் முதலெழுத்தை வைத்து ‘சுபா’ என்ற புனைப்பெயரில் ஏராளமான நாவல்கள், சிறுகதைகள் எழுதியிருக்கிறார்கள். திரைப்படத் துறையிலும் கால்பதித்து முன்னேறி வருகின்றனர்.

ஜெமினி நிறுவனத்தின் லோகோவாக, குழலூதும் இரட்டையரைக் காண்பிப்பார்கள். இந்த இரட்டையர்களை டிசைன் செய்தவர் கார்ட்டூன் மேதை மாலி. சினிமாவில் இரட்டை வேடம் என்பது அனைத்துக் கதாநாயகர்களின் லட்சியக் கனவாகும். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ‘உத்தமபுத்திரன்’தான் தமிழில் வெளிவந்த முதல் இரட்டை வேடப் படம். இதில் பி.யூ.சின்னப்பா நடித்துப் பெரும்புகழ் பெற்றார். 

Tags:    

Similar News