அடர்நிற காய்கறிகளும் ஆரோக்கியமும்..!
அடர்நிற காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. அதனால் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது முக்கியம்.
அடர் நிறங்களை கொண்ட காய்கறிகள், பழங்கள் (மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு, பச்சை, நீலம், ஊதா) மற்றும் முழுத்தானியங்களை உட்கொள்வது புற்றுநோய், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவும். அவற்றில் பைட்டோ கெமிக்கல் என்னும் சேர்மம் உள்ளது. அவை ஊட்டச்சத்துக்களின் பங்களிப்பை அதிகரிக்க செய்து நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்தி ஆரோக்கிய வாழ்க்கைக்கு வித்திடும்.
வெங்காயத்தில் அல்லிசின் உள்ளது. அவை பாக்டீரியா மற்றும் வைரஸ்களால் உடலில் உருவாகும் சில நச்சுக்களை தடுக்க உதவும். ராஸ்பெர்ரி, புளூபெர்ரி போன்ற சிவப்பு, நீல நிற பழங்களில் அந்தோசயனிகள் காணப்படுகின்றன. அவை விரைவில் வயதான தோற்றம் எட்டிப்பார்ப்பதை தடுக்கவும், இதய நோய் வராமல் தடுக்கவும் உதவுகின்றன. தக்காளி, ஆரஞ்சு, இளஞ்சிவப்பு திராட்சைப்பழம் மற்றும் கீரை போன்ற அடர் நிற பழங்கள் மற்றும் காய்கறிகளில் கரோட்டினாய்டுகள் காணப்படுகின்றன.
தேயிலை, ஆப்பிள், முட்டைக்கோஸ், பீன்ஸ் ஆகியவற்றில் பிளேவனாய்டுகள் காணப்படுகின்றன. அவை ஆரோக்கியத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன. தக்காளியில் லைக்கோபீன்கள் காணப்படுகின்றன. அவை சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடெண்டாக செயல்படுகின்றன. உடலில் அதிக அளவு லைக்கோபின் உள்ளடங்கியிருக்கும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் அபாயம் 22 சதவீதம் குறைவாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
கிரீன் டீ உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டது. மார்பக புற்றுநோய் அபாயத்தை தடுக்கவும் உதவும். கிரீன் டீயை தொடர்ந்து பருகி வந்தால் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். உடல் எடை குறைப்புக்கும் துணைபுரியும். புற்றுநோய் செல்களின் அசாதாரண வளர்ச்சியை கட்டுப்படுத்தும் தன்மை பிரக்கோலிக்கு உண்டு. மார்பகம், சிறுநீர்ப்பை, நுரையீரல் போன்ற உறுப்புகளில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
பெண்கள் காளான்களை சமையலில் தொடர்ந்து சேர்ப்பதும் மார்பக புற்றுநோய் வராமல் தற்காத்துக்கொள்ள உதவிடும். மாதவிடாய் சுழற்சி முடிவடையும் நிலையில் இருக்கும் பெண்கள் காளான்களை தவறாமல் சாப்பிடுவது நல்லது.கேரட்டில் அதிக அளவு கரோட்டினாய்டு நிறைந்திருக்கிறது. அப்படி உடலில் கரோட்டினாய்டுகளின் அளவு அதிகம் இருந்தால் மார்பக புற்றுநோய்க்கான அபாயம் 28 சதவீதம் குறையும். அதனால் கேரட்டை தினமும் தவறாமல் சாப்பிடுவது நல்லது.