அன்றாட மருத்துவத்தில் பனங்கற்கண்டின் பயன்கள்
இருமல், சளி என்றால் எப்பொழுதும் வீட்டில் பனங்கற்கண்டு இருக்க வேண்டும் என்று கூறுவார்கள்.
இருமல் வந்த உடனே பனங்கற்கண்டை எடுத்து வாயில் போட்டுக்கொள்ள வேண்டும் என்பார்கள். பனம் பாளையின் முனையை சீவி விட, சாறு வடியும். இச்சாறு வடியும் கலத்தில் சுண்ணாம்பு நீர் விட்டு வைப்பின் புளிப்பாகாமல் சுவை நீராகும். இதுவே பதநீர். இதிலிருந்தே பனைவெல்லம், கற்கண்டு, சீனி ஆகியவை தயார் செய்யப்படுகின்றன. பதநீரை ஒரு குவளை தினந்தோறும் அருந்தி வந்தால் பித்த வெட்டை, வெள்ளை, சொறி, சிரங்கு ஆகியவை நீங்கி தாதுப் பெருக்கம் அடையும்.
கைப்பிடி துளசி இலையை சிதைத்து அரை லிட்டர் நீரில் இட்டு 200 மில்லியாக காய்ச்சி வடிகட்டி 15 கிராம் பனங்கற்கண்டும் 2 தேக்கரண்டி தேனும் கலந்து 50 மில்லி அளவாக நாளும் நான்கு வேளை குடித்து வர மார்பு நோய், காசநோய், காய்ச்சல் ஆகியவை தீரும். வாழைப்பூவை அவித்து கசக்கிப் பிழிந்த சாற்றில் சிறிது பனங்கற்கண்டு கலந்து காலை, மாலை கொடுக்க சூதக வலி, பெரும்பாடு தீரும்.
சிறு குழந்தைகளுக்கு மார்பு எலும்புக்கூடு முன்தள்ளி நோஞ்சான் போல காணப்படுவார்கள். இவர்களுக்கு வேலிப்பருத்தி இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்து அதனுடன் சீரகம் ஒரு ஸ்பூன், அருகம்புல் பொடி ஒரு ஸ்பூன் சேர்த்து கசாயம் செய்து பனங்கற்கண்டு சேர்த்து கொடுத்து வந்தால் நோஞ்சான் தன்மை மாறி உடல் வலுப்பெறுவார்கள்.
சதக்குப்பை, கருஞ்சீரகம், மரமஞ்சள் வகைக்கு சம அளவாக எடுத்து இடித்து பொடியாக்கி சம அளவு பனைவெல்லம் சேர்த்து அரைத்து ஒரு ஸ்பூன் வீதம் காலை, மாலை இருவேளை சாப்பிட்டு, சிறிது நேரம் கழித்து சோம்பு குடிநீர் குடித்து வர உதிரச் சிக்கல் நீங்கி கருப்பை பலப்படும்.
ஒரு ஸ்பூன் அளவு லெமன் கிராஸ் பவுடரை கொதிக்கும் நீரில் போட்டு இரண்டு நிமிடங்கள் கழித்து வடிகட்டினால் புத்துணர்வு பானம் தயாராகி விடும். சுவைக்காக பனைவெல்லம் சேர்த்துக் கொள்ளலாம். வெளிநாடுகளில் இதை உணவுக்கு முன் பசியை தூண்டும் பானமாகவும், உணவை சாப்பிட்ட பிறகு எளிதில் ஜீரணம் ஆவதற்கும் உயர்தர நட்சத்திர ஓட்டல்களில் வழங்குகிறார்கள்.
வாழைப்பூவை இடித்து எடுத்த சாற்றில் பனங்கற்கண்டு கலந்து 100 மில்லியாக காலை, மாலை அருந்தி வர வயிற்றுக் கடுப்பு, வெள்ளை, ரத்தம் கலந்த சிறுநீர் பிரச்னை தீரும். மகிழம்பூ 50 கிராம் எடுத்து 300 மி.லி. நீரிலிட்டு 100 மில்லியாக காய்ச்சி வடிகட்டியதில் பாலும், கற்கண்டும் கலந்து இரவு உணவுக்குப் பின் குடித்து வர உடல் வலிமை மிகும்.