சிவராமன் ஏற்படுத்திய விழிப்புணர்வு ; விவசாய விளை பொருட்களுக்கு மவுசு..!

டாக்டர் சிவராமன் ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாக விவசாய விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கிறது.;

Update: 2024-10-21 02:29 GMT

டாக்டர் கு.சிவராமன் -கோப்பு படம் 

சோசியல் மீடியாவை முறையாக பல ஆயிரம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். இதில் முதன்மையானவர் டாக்டர் சிவராமன். இந்திய குறிப்பாக தமிழக உணவுகளை பற்றியும், தமிழகத்தில் விளையும் காய்கறிகளை பற்றியும் மிகவும் பெருமையாக பேசுபவர்.

இவர் பேசுகையில், ‘உலகில் ஆகச்சிறந்த பழம் தமிழகத்தின் கொய்யா... மாதுளையின் சிறப்பு தெரியுமா? கீரைகளின் முக்கியத்துவம் தெரியுமா? மருத்துவக்குணமும், மகத்துவமும் தெரியுமா? இட்லி எவ்வளவு ஆகச்சிறந்த உணவு தெரியுமா?. இப்படி தமிழக உணவுகள், காய்கறிகளின் பெருமையினை பற்றி மிகவும் சிறப்பாக எடுத்து பேசுவார்.

இவரது பேச்சை கேட்கும் மக்கள் அதனை அதிகம் தங்கள் உணவுகளில் சேர்க்க தொடங்கினர். இதன் விளைவு தமிழக உணவுப்பொருட்களின் மவுசு கூடி விட்டது. காய்கறிகள், கீரைகள், பழங்கள் விற்பனை சக்கை போடு, போடுகிறது. கிலோ 40 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ கொய்யாப்பழம் விலையே கடந்த ஓராண்டாக கிலோ 100 ரூபாயிலேயே தொடர்கிறது. மதுளை கிலோ 250 ரூபாய்க்கு கீழே இறங்க மறுக்கிறது.

சாதாரண துவர்ப்பு சுவை கொண்ட சிறிய பிஞ்சில் பழுத்த மாதுளை விலை கிலோ 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை ஊசலாடுகிறது. தரமான மாதுளை வாங்க கிலோ 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை தர வேண்டி உள்ளது. கீழே விழுந்து கிடந்த தேங்காய் விலையும் மீண்டு வந்து விட்டது. தேங்காய் பால் பற்றி சிவராமன் பேச்சை ஒருமுறை கேட்டால் நீங்களும் தேங்காயினை தினமும் பயன்படுத்துவீர்கள். அந்த அளவு சிறப்பாக பேசியுள்ளார். மலைவாழைப்பழம் வாங்குவது மிகவும் அரிதான செயலாக மாறி விட்டது. அந்த அளவு மலைவாழைப்பழத்திற்கு மவுசு அதிகரித்து விட்டது. கீரை வகைகளே கிடைப்பதில்லை. கீரைகளுக்கு அதிக தட்டுப்பாடு நிலவுகிறது. பல உழவர் சந்தைகளிலும், மார்க்கெட்டுகளிலும் கீரைகள் வந்த ஒரு மணி நேரத்தில் விற்றுத்தீர்ந்து விடுகிறது.விலையும் மூன்று மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.

குமுட்டி கீரை, மணத்தக்காளி கீரை, முருங்கை கீரை உள்ளிட்ட சிலவகை கீரை வகைகள் கிலோ 100 ரூபாயினை எட்டி விட்டன. பொன்னாங்கன்னி, அரைக்கீரை, பாலக்கீரை உள்ளிட்ட பலவகை கீரைகளும் விலை உயர்ந்தது மட்டுமின்றி, தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது.

விவசாய பொருட்களுக்கு விலை கிடைக்க முக்கிய காரணம், சமூக ஊடகங்களும், அதனை நிபுணர்கள் முறையாக பயன்படுத்தி வருவதும் முக்கிய காரணம் என விவசாயிகளே பெருமையாக சொல்கின்றனர். பல ஆண்டுகளுக்கு பிறகு...கொரோனாவிற்கு பிந்தைய காலங்களில் விவசாயிகள் பெரிய இழப்பினை சந்திக்காமல்... குறிப்பிடத்தக்க அளவில் விளைபொருட்களுக்கு லாபம் பார்க்கின்றனர் என்றனர்.

Tags:    

Similar News