சிகரெட் பிடிப்பவர்களா நீங்கள்...? பாலகுமாரன் அனுபவத்தை கண்டிப்பா படிங்க.
சிகரெட் பிடிக்கலாம் என்கிற ஆசையுள்ளவர்கள் தயவு செய்து அந்த எண்ணத்தை அழித்து விடுங்கள்.
எந்த ஒரு அனுபவமும் நாமே பெறவேண்டும் என்பதில்லை. அந்த அனுபவத்தை பெற்றவர்களின் அவஸ்தைகளை அவர் கூற கேட்டாலே போதும். ஆனால், நெருப்பு சுடும் என்று அனுபவித்தவர் கூறினால் அதை மீறி நாமே அனுபவப்பட வேண்டும் என்று எண்ணினால், காயம் தான் மிஞ்சும்.
அவ்வகையில் சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து அந்த பழக்கத்தால் அவதிப்பட்ட பாலகுமாரன் தன் அனுபவத்தை கூறியுள்ளார்.
இரண்டாயிரத்தில் பைபாஸ் செய்து கொண்டேன். அப்போதும் சிகரெட் பிடிப்பவனாக இருந்திருந்தால் மரணம் அன்றே குறிக்கப்பட்டிருக்கும். சிகரெட் நிறுத்தி ஆரோக்கியத்தை அதிகப்படுத்தியதால் அந்த ஆபரேஷனை சமாளிக்க முடிந்தது. பிறகு பத்து வருடங்கள் எந்தவித இம்சையும் இல்லாமல் அழகாக வாழ்க்கை ஓடியது. இரண்டாயிரத்து பதினொன்றில் நீரிழிவு காரணமாக ரத்தக்கொதிப்பின் காரணமாக மறுபடியும் அடைப்பு ஏற்பட, இரண்டாம் முறை பைபாஸ் செய்து கொண்டேன்.
சுவாச பயிற்சி செய்திருந்ததால், மூச்சு பற்றிய ஞானம் இருந்ததால், தினந்தோறும் காலையும் மாலையும் வேகமாக நடந்ததால், மெல்லிய உடற்பயிற்சிகள் செய்ததால் இரண்டாவது பைபாஸையும் தாண்டிவர முடிந்தது.
ஆனால் இரண்டாயிரத்து பன்னிரென்டில் அடுத்த சோதனை. பத்தொன்பது வயதில் பிடித்த சிகரெட்டுகள் அறுபத்தாறு வயதில் தன் விஷத்தன்மையை காட்டியது. தன் வக்கிரத்தை நிரூபித்தது. நுரையீரலின் அடிப்பக்கம் முழுவதும் நிகோடினால் ஏற்பட்ட சளி அடைப்புகள். நுரையீரல் முழு திறனோடு வேலை செய்யவில்லை. அதற்கான திறனை மெல்ல மெல்ல இழந்தது. அதோடு சளி அடைப்பும் சேர்ந்து பழிவாங்கியது. மூச்சு திணறல் ஏற்பட்டது.
ஒரு பிடி சாதத்திற்கு அவஸ்தை படும் நிலைமை. முகம் முழுவதும் மூடி ஆக்சிஜனை செலுத்தினால் தான் உயிரோடு இருப்பேன் என்கிற நிலைமை. என்.ஐ.வி என்கிற அந்த விஷயத்தோடு தான் இரவு தூங்க முடியும் என்கிற நிலைமை. பிராங்கோஸ்கோபி என்று மூச்சுகுழலுக்குள் கருவியை விட்டு சோதனை செய்து அங்கே அடி நுரையீரலில் அடர்த்தியாக அசைக்க முடியாதபடிக்கு கெட்டியாக சளி இருப்பதை தெரிந்து கொண்டார்கள்.
இதை எப்படி சரிசெய்வது?
வலியை பொறுத்துக் கொள்ளலாம். வேறு ஏதேனும் பத்தியமாக இருந்தால் அவ்விதமே நடந்து கொள்ளலாம். மூச்சு இழுத்து பிராணவாயு உள்ளே போய் வெளியே வருவதே கடினமானால் எப்படி சமாளிப்பது? தினசரி மரண போராட்டமாக மாறிவிட்டது. மூச்சு வேகமாக இழுத்து இழுத்து இன்னும் சில நிமிடங்களில் பாலகுமாரன் செத்து விடுவான் என்ற எண்ணத்தை மற்றவருக்கு ஏற்படுத்தியது. வீடு தவித்தது. வீட்டிற்குள் மூன்று நான்கு நாட்கள் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வைக்கும்படி நேரிட்டது. வேகமாக காற்றை செலுத்தக்கூடிய கருவி தனியாக இருந்தது.
ஆஸ்பத்திரியிலிருந்து வீடு வந்தவுடன் வீடு ஆஸ்பத்திரியாக மாறியது. எப்போதும் மூக்கில் ஆக்சிஜன் இருக்கும் படி ஒரு அவஸ்தை. ஸ்கூட்டர் எடுத்துக் கொண்டு மயிலாப்பூர் முழுவதும் சுற்றித் திரிந்தவனுக்கு சிறைத்தண்டனை போல வீட்டில் அதே அறையில் இருக்கும் படி நேரிட்டது. மிகப்பெரிய வலியில்லை ஜீரம் இல்லை. ஆனால் ஆக்சிஜன் குழாயை எடுத்து விட்டால் மூச்சுத் திணற ஆரம்பிக்கும். அது இல்லாமல் நடக்க முடியாது. பேச முடியாது உண்ண முடியாது எதுவும் செய்ய முடியாது. காலில் சங்கிலி கட்டி கையில் இரும்பு குண்டை கொடுத்தது போன்ற மிகப்பெரிய தண்டனை. வேறு எந்த வழியும் இல்லாமல் அமைதியாக உட்கார்ந்து கொண்டேன்.
ஒரு நாளைக்கு நூற்றியிருபது சிகரெட் பிடிக்க வேண்டும் என்கிற நிலையில் இருந்ததை நினைத்து சிரித்துக் கொண்டேன். அப்படி புகைத்தால் தான் கதை எழுத வரும் என்று முட்டாள் தனமாக நம்பியதை நொந்து கொண்டேன். மரணம் எல்லோருக்கும் வரும். எப்பொழுது வேண்டுமானாலும் வரும். எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரும். ஆனால் மூச்சு திணறி இதோ….. இதோ… என்று பயம் காட்டுகின்ற ஒரு நிலைமை யாருக்கும் வரக்கூடாது. நெஞ்சு வலித்தது. ஐந்து நிமிடம் துடித்தார். உயிர் நீங்கியது என்பது பராவாயில்லை.
மூச்சு விட முடியாமல் உள்ளுக்குள் போன மூச்சை வெளியே செலுத்த முடியாமல் வெளியே இருக்கின்ற பிராண வாயுவை உள்ளே இழுக்க முடியாமல் திணறி கதறுகின்ற வேதனை யாருக்கும் வரக்கூடாது. சிகரெட் பிடிக்கலாம் என்கிற ஆசையுள்ளவர்கள் தயவு செய்து அந்த எண்ணத்தை அழித்து விடுங்கள்.
- பாலகுமாரன்
எழுத்தாளர் பாலகுமாரனின் அனுபவத்தை பாடமாக எடுத்துக் கொண்டால் நம் உடலுக்கு நல்லது. அதை விடுத்து நாமும் சிகரெட் பிடிப்போம் என தொடங்கினால், அவர் பட்ட அவஸ்தைகளை படுவதற்கு தயாராகுங்கள்.