37-வது திருமண நாளைக் கொண்டாடும் "ஆதர்ச நட்சத்திர தம்பதிகள்"

தமிழ் திரையுலகில் பல நடிகர், நடிகைகள் ஒன்றாக நடித்ததில் இருந்து பல பேருக்கு காதல் மலர்ந்து திருமணமாகியது. அதில் 'ஆதர்ச நட்சத்திர தம்பதிகள்' என்று பாராட்டப்படுவர்கள் இயக்குநர் கே.பாக்யராஜூம், நடிகை பூர்ணிமா பாக்யராஜூம். அந்த தம்பதியர் இன்று 37-வது திருமண நாளைக் கொண்டாடுகின்றனர்.

Update: 2021-02-07 12:34 GMT

இயக்குநர் கே.பாக்யராஜ் இயக்கிய 'டார்லிங் டார்லிங் டார்லிங்' திரைப்படத்தில் பூர்ணிமா நாயகியாக நடித்தார். அந்தப் படத்தில் பூர்ணிமாவுக்கு முன்பு நடிக்கவிருந்தவர் நடிகை சுஹாசினி. ஆனால், அவர் அப்போது தெலுங்கு படத்தில் நடிக்க வேண்டியிருந்ததால் இதில் நடிக்க முடியாமல் போனது. பூர்ணிமா அதில் நடிக்க அவரது வாழ்கையையே திசை மாறியது.

இன்று திருமண வாழ்வில் தங்களது மலரும் நினைவுகளை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் இயக்குநர் கே.பாக்யராஜ்,

'தாய்க்குப் பின் தாரம், மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்னு நிறைய அனுபவ மொழிகளைக் கேட்டிருப்போம். நிஜ வாழ்க்கையில அதையெல்லாம் அனுபவப்பூர்வமா உணரும் வாய்ப்பு எனக்குக் கிடைச்சது...பூர்ணிமாவுக்கும் எனக்குமான அந்த முதல் சந்திப்பு இப்பவும் எனக்கு நல்லா ஞாபகமிருக்கு. அவங்க பாம்பேலேருந்து தமிழ்ப் படங்கள் பண்ண இங்கே வந்திருந்த நேரம். என்னைப் பத்தி கேள்விப்பட்டு, என் படங்கள் பிடிச்சுப் போய், என்னை சந்திக்கணும்னு வந்தாங்க. அப்ப நான் ஒரு பிரிவியூ தியேட்டர்லேருந்து வெளியே வர்றேன்... அறிமுகப்படுத்திக்கிட்டு, 'படபட'ன்னு இங்கிலீஷ்ல பேச ஆரம்பிச்சாங்க. எனக்கு ஒண்ணுமே புரியலை. நமக்கு இங்கிலீஷ் தகராறு. 'ஓ.கே... சீ யு...'ன்னு ரெண்டே வார்த்தைகளோட முடிச்சிக்கிட்டுப் போயிட்டேன். 'ரொம்பத் திமிரு பிடிச்ச ஆள் போல...'ன்னு என்னைப் பத்தி அவங்களுக்குள்ள ஒரு தப்பான அபிப்ராயத்தை அந்த சம்பவம் உண்டாக்கிடுச்சுன்னு அப்புறம்தான் எனக்குத் தெரிஞ்சது!''


அது எப்பன்னா ''டார்லிங்... டார்லிங்... டார்லிங்... படத்துக்காக ஹீரோயின் தேடிட்டிருந்தப்ப, பூர்ணிமா ஞாபகத்துக்கு வந்தாங்க. அந்த கேரக்டருக்கு அவங்க பொருத்தமா இருப்பாங்கன்னு தோணுச்சு. அதனால அவங்களை வர வச்சு கதை சொன்னேன். அப்ப நான் அவங்கக்கிட்ட கலகலப்பாப் பேசினதைப் பார்த்துட்டு, 'அன்னிக்கு சரியா பேசாம இன்சல்ட் பண்ணீங்களே...'ன்னு கேட்டாங்க. 'நீ இங்கிலீஷ்லயே ஆரம்பிச்சு, படபடன்னு பேசிட்டே போனே... இப்ப பேசுற மாதிரி அப்ப தமிழ்ல பேசியிருந்தா, நின்னு நிதானமா நிறைய பேசியிருப்பேன்'னு தப்பிச்சு ஓடினதுக்கான காரணத்தைச் சொன்னதும் சிரிச்சாங்க. அப்புறம்தான் அவங்களுக்கு என்மேல நம்பிக்கையே வந்தது...''

''அந்த டார்லிங் பண்றபோது எனக்கும் பூர்ணிமாவுக்கும், ஒரு டைரக்டருக்கும் ஹீரோயினுக்குமான உறவுதான் இருந்தது. தவிர அப்ப என்னோட முதல் மனைவி பிரவீணா இருந்ததால, எனக்கு எந்தப் பெண் மேலேயும் எந்த ஐடியாவும் தோணினதில்லை...ஒரு கட்டத்துல பிரவீணாவும் பூர்ணிமாவும் ரொம்ப நெருங்கிப் பழக ஆரம்பிச்சிட்டாங்க. ஜூலை 27 எனக்கும் பிரவீணாவுக்கும் கல்யாணநாள். அன்னிக்குத்தான் பூர்ணிமாவுக்கு பிறந்தநாள். இது ரொம்ப நாள் வரை எனக்குத் தெரியாது. ஒருமுறை எங்க கல்யாண நாளன்னிக்கு நானும் பிரவீணாவும் வெளியூர்ல இருந்தோம். அப்ப ரெண்டு பேரும் போன்ல பேசிக்கிட்டாங்க. 'வெளியூருக்கு வந்தும்கூட ரெண்டுபேரும் பேசிக்கிறீங்களே... என்ன விஷயம்'னு பிரவீணாகிட்ட கேட்டப்பதான், இந்த விஷயமே எனக்கு தெரிஞ்சது...''

அந்தக் காலக் கட்டத்தில் திடீர்னு உடம்பு சரியில்லாம போய் இறந்துட்டார் பிரவீணா! 'ராஜா' அப்படீன்னு செல்லமா கூப்பிடும் பிரவீணா எனக்கு போட்ட R எழுத்து பதித்த மோதிரம் எப்போதும் என் விரலில் மின்னும். சுவரில்லாத சித்திரங்கள் பிரிவியூ பார்த்துட்டு வந்து பாராட்டி போட்ட மோதிரம் அது. தாவணிக் கனவுகள் படம் எடுத்தப்போ சூட்டிங் ஸ்பாட்ல அந்த மோதிரத்தை நான் மிஸ் பண்ணிட்டேன். பூர்ணிமா எனக்காக அதே 'ஆர்' மோதிரத்தை வைரத்தில் செய்து கொடுத்தாங்க. இப்போ என் விரங்களில் மின்னுவது பூர்ணிமாவின் அன்பு. அந்த அன்பான பிரவீணா இறந்த பின்பு பெரும் துயரத்தில் இருந்த என்னை இன்னொரு திருமணம் செய்து கொள்ள என் உடன் பிறந்தவர்களும், சொந்தகாரங்களும் வற்புறுத்தியபோது நான் செலக்ட் செஞ்சது பூர்ணிமாவை. '.. கொஞ்சம் டீடெய்லா சொல்றதா இருந்தா எனக்கு அம்மா, அப்பா கிடையாது. ஒரேயொரு அண்ணன் மட்டும்தான். இன்னொரு கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி அண்ணனும் சொந்தக்காரங்களும் தொல்லை பண்ண ஆரம்பிச்சாங்க. எனக்கோ அப்படி எந்த எண்ணமும் இல்லை. நடந்த விஷயங்களை மறக்கணும்னு பாம்பே, கோவான்னு சுத்திக்கிட்டே இருந்தேன். மனசுக்குள்ள ஏகப்பட்ட கேள்விகள்... குழப்பங்கள்... சினிமாவுல ஜெயிக்கிறதும், உச்சத்துக்குப் போறதும் எல்லோருக்கும் அமைய றதில்லை. எனக்கு அது கிடைச்சது. பெத்தவங்களும் இல்லை. கட்டினவளும் இல்லை. கட்டுப்படுத்த யாருமே இல்லாட்டா, என் வாழ்க்கை வேற திசையை நோக்கிப் போயிடுமோன்னு முதல் முறையா மனசுக்குள்ள சின்னதா ஒரு பயம் எட்டிப் பார்த்தது...


கால்கட்டு போட்டுக்கிறதுன்னு அப்பதான் முடிவு பண்ணினேன். மாசக்கணக்குல சுத்திட்டு, மறுபடி பாம்பே வந்தேன். அங்க ஒரு ஹோட்டல்ல தங்கினேன். எனக்கும் பூர்ணிமாவுக்கும் ஒரே பி.ஆர்.ஓ. அவரை யதேச்சையா அங்கே சந்திச்சேன். அவரோட பேசிட்டிருக்கிறப்ப, பூர்ணிமா அடுத்த நாள் பாரிஸ் போறதாகவும், அவங்களை வழியனுப்ப வந்திருக்கிறதாகவும் சொன்னார். பூர்ணிமாகிட்டேயும், நான் பாம்பே வந்திருக்கிற விஷயத்தைச் சொல்லியிருக்கார். 'நம்மூருக்கு வந்துட்டு, நம்ம வீட்டுக்கு வராமப் போனா எப்படி'ன்னு பூர்ணிமாவும் அவங்கம்மாவும் என்னை அவங்க வீட்டுக்கு சாப்பிடக் கூப்பிட்டாங்க... போனேன்."என்று சொல்லி நிறுத்தி விட்ட பாக்யராஜ் தன் கல்யாண கதையின் தொடர்சியை தன் ஆசை மனைவி பூர்ணிமா மூலம் சொல்ல வைத்தார்

"டார்லிங் டார்லிங் டார்லிங்' படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்துச்சு. அந்த ஷூட்டிங்கின்போது பாக்யராஜ் நிறைய கோபப்படுவார். யாரையாவது திட்டணும்ன்னா அவங்களை திட்டாமல் என்னைத்தான் திட்டுவார். ஏன்னா.. நான்தான அந்த யூனிட்லேயே புதுசு. அப்படியொரு முறை கிளைமாக்ஸ் காட்சி படமாக்கும்போது அசோக்குமார் ஸார் ஏதோ சொன்னதைப் பார்த்து குபீர்ன்ன்னு சிரிச்சிட்டேன்.

இதைப் பார்த்து பாக்யராஜ் என்னை ரொம்பத் திட்டிட்டார். எனக்கு அழுகையே வந்திடுச்சு. அப்புறம் அடுத்த மூணு நாளும் நான் பயங்கர அமைதியா இருந்தேன். அப்போ ஒரு நாள் பாக்யராஜ் என்கிட்ட கேட்டார். "என்ன விஷயம்.. ஏன் அமைதியா இருக்க..?" என்று கேட்டார். அப்போ நான் "நீங்க தேவையில்லாமல் திட்டுனீங்களே..?" என்றேன். அவருக்கு அதுவே மறந்துவிட்டது. "நான் எப்பவும் அப்படித்தாம்மா. சோகக் காட்சில நடிக்கும்போது அதே பீலிங்ல இருக்கணும். சிரிச்சிட்டா அது நல்லா வராது. அதனாலதான் திட்டினேன்.." என்று சொல்லி என்னைச் சமாதானப்படுத்தினார்.

அந்தப் படம் ஷூட்டிங் எடுத்துக்கிட்டிருக்கும்போது பிரவீணா அக்கா என்கூட நல்லா பழகினாங்க. என் வீட்டுக்கெல்லாம் வந்து எங்கம்மாகிட்ட ஆசிர்வாத மெல்லாம் வாங்கிட்டுப் போனாங்க. நானும் அவங்க வீட்டுக்கு வந்து பேசியிருக்கேன். ரொம்ப நல்ல டைப். எனக்கு பிலிம்பேர் அவார்டு கிடைக்கும்ன்னு பேச்சு இருந்தப்ப "அந்த நிகழ்ச்சில நானும் வருவேன். உன் பக்கத்துல உட்கார்வேன்…" என்றெல்லாம் சொல்லிக்கிட்டிருந்தாங்க. திடீர்ன்னு அவங்க உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்ததால் அந்த நிகழ்ச்சிக்கு வர முடியலை. அடுத்த நாள் நான் 'தங்க மகன்' ஷூட்டிங்ல இருந்தப்பதான் அவங்க இறந்திட்டதா தகவல் வந்துச்சு. ரொம்ப வருத்தமா இருந்தது. அப்பவும் பாக்யராஜ் ஸார்கூட எங்க பேமிலியே நல்ல நட்புலதான் இருந்தோம்.

இது நடந்து கொஞ்ச மாதங்கள் கழித்து நான் ஒரு மலையாளப் படத்துக்காக பாரீஸூக்கு போக வேண்டியிருந்தது. கிடைத்த ஒரு நாள் விடுமுறையில் மும்பையில் இருக்கும் என் வீட்டுக்குப் போயிருந்தேன். அப்போ எங்கம்மா என்கிட்ட, "பாக்யராஜ் ஸார்.. இங்க வந்திருக்காராம். அவரை வீட்டுக்குக் கூப்பிடேன்…" அப்ப்டீன்னு சொன்னாங்க. உடனே நானும் போன் செஞ்சு அவரை என் வீட்டுக்குக் கூப்பிட்டேன். வந்தாரு. அவர் வந்த நேரம் வீட்ல சமைக்கக் கூட எதுவும் இல்லை. அப்புறம் அவசரம், அவசரமா வெளில போய் எல்லாத்தையும் வாங்கிட்டு வந்து அம்மா சமைச்சாங்க. அப்போ நவராத்திரி வாரம். அதுனால மும்பைல தாண்டியா நடனம் ஆடுவாங்க. அந்த நடனத்தை எங்க வீட்டு மொட்டை மாடில இருந்து ராத்திரி ரொம்ப நேரம் நாங்க ரெண்டு பேரும் பார்த்தோம். அப்பவும் ரொம்ப கேஷுவலாத்தான் சாதாரணமாகத்தான் பேசிக்கிட்டிருந்தோம்.

இதுக்கப்புறம் நான் திரும்பவும் சென்னைக்கு வந்து படங்கள்ல நடிச்சிட்டிருந்தேன். அப்போதான் பாக்யராஜ் என் வீட்டு்க்கு வந்து என் அம்மா, அப்பாகிட்ட என்னைக் கல்யாணம் செஞ்சுக்க விரும்புறதா சொன்னாரு. எனக்கு முதல்ல இது அதிர்ச்சியாத்தான் இருந்தது. என் வீட்ல அம்மா, அப்பா இரண்டு பேருமே.. "இது உன்னுடைய விருப்பம்"ன்னு சொல்லிட்டாங்க. நானும் யோசிச்சு பார்த்தேன். பாக்யராஜை எனக்கு தனிப்பட்ட முறையிலேயும் தெரியும். நல்ல மனிதர். எப்படியோ ஒரு நாள் கல்யாணம் பண்ணிக்கத்தான் போறோம். இப்படியொரு நல்ல மனிதர் கிடைக்கும்போது நாம ஏன் விடணும்ன்னு 'ஓகே'ன்னு சொல்லிட்டேன்.

அப்போ என் கைல 20 படங்கள் இருந்துச்சு. எல்லாத்தையும் சட்டுன்னு முடிக்க முடியாதுன்றதால இப்போ நிச்சயத்தார்த்தம் செஞ்சுக்கிட்டு மூணு வருஷம் கழிச்சு கல்யாணம் செய்யலாம்ன்னு நினைச்சேன். ஆனால், அவர் வீட்ல ஜோதிடம் பார்க்கும்போது 'இன்னும் ஆறு மாசத்துக்குள்ள கல்யாணம் நடந்தாகணும்'ன்னு சொல்லிட்டாங்களாம். அதனால் உடனேயே கல்யாணம்ன்னு சொல்லிட்டாங்க. அதுலேயும் அப்போ முதலமைச்சரா இருந்த எம்.ஜி.ஆர்., உடனேயே தேதி கொடுத்ததால சட்டுன்னு கல்யாணத்தை வைக்க வேண்டியதா போச்சு.

என் கல்யாணத்துக்கு எம்.ஜி.ஆர்., சிவாஜி ரெண்டு பேருமே குடும்பத்தோட வந்திருந்து வாழ்த்தினாங்க. அது எங்களுக்குக் கிடைச்ச மிகப் பெரிய கிப்ட்டா நினைக்கிறேன்.." என்றார் பூர்ணிமா பாக்யராஜ்.

-மைக்கேல்ராஜ்.

Tags:    

Similar News