+2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
What to read next- எந்தப் படிப்பும் மோசமானது அல்ல; ஒவ்வொரு படிப்புக்கும் ஒவ்வொரு தனித்தன்மை இருக்கிறது.
What to read next-+2 அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
எந்தப் படிப்பும் மோசமானது அல்ல; ஒவ்வொரு படிப்புக்கும் ஒவ்வொரு தனித்தன்மை இருக்கிறது; அந்தப்படிப்பை எதிர்கொள்ளும் விதம், அதைக் கற்றுக்கொள்வதற்கான அர்ப்பணிப்பு போன்றவை, பிளஸ் 2 முடித்த மாணவர்களை, வாழ்க்கைப் படிக்கட்டில் சிகரம் தொட வைக்கும்.
மொழியால்உலகம் வசப்படும்
வேரை அறுத்துவிட்டால் எப்படிச் செடி உயிர்ப்பிக்காதோ, அதுபோன்று தாய்மொழியை மறுத்தால், மனம் துளிர்க்காது எனலாம்.
மத்திய அரசும், தமிழக அரசும் நடத்துகின்ற போட்டித்தேர்வுகளை எதிர்கொள்வதற்கு மாணவர்களுக்கு சிறப்புத்தமிழ் படிப்பது மிகவும் உதவிகரமாக இருக்கும். ஊடகங்களில் பணிபுரிய மிகச்சிறந்த வாய்ப்பு அளிக்கும். சட்டம் பயில்வோருக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும். பி.ஏ., தமிழ் படித்தால் பொது அறிவு மற்றும் சமூகம் சார்ந்த அறிவு கிட்டும்.
இலக்கியங்களுடன் நின்றுவிடாமல், கணினியில் தமிழ், செயலி உருவாக்கம், புத்தகம் மற்றும் பதிப்புத்துறையில் கவனம் செலுத்துதல், மொழிபெயர்ப்பில் சிறந்துவிளங்குதல் போன்றவை வேலைவாய்ப்புக்கு உறுதுணையாக இருக்கும்.
கண்ணகி,தமிழ்த்துறைத் தலைவர்,திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரி.
ஆங்கில மொழி மற்றும் இலக்கியத்தைத் தேர்வுசெய்யும் மாணவர்கள், ஒரு முழு உலகளாவிய வாய்ப்புகளை வசமாக்கப்போகிறார்கள் என்பது நிச்சயம்.
ஆங்கிலம் சர்வதேச மொழியாகவும், தகவல் தொடர்புக்கு உதவுவதாகவும் விளங்குகிறது. உலகெங்கிலும் உள்ள எந்தப் பாடத்தையும் படித்தறிவதற்கான முக்கிய மொழி இது. படைப்புத்திறன் கொண்டோர் தொடும் உச்சம் தனி. நாவலாசிரியர்கள், பதிவர்கள் என உங்கள் எழுத்துகளை, உலகையே படிக்க வைக்கலாம். பல்வேறு தயாரிப்புகளுக்கான தொழில்நுட்ப எழுத்தாளர்களாகவும், விளம்பர நிறுவனங்களுக்கான ஸ்கிரிப்ட் மற்றும் நகல் எழுதுனர்களாக பரிணமிக்கலாம்.
அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் பணிபுரியும் வாய்ப்பு கிட்டும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மொழி மற்றும் மென் திறன் பயிற்சியாளர்களாக மாறலாம். TOEFL, IELTS போன்ற வெளிநாட்டு தேர்வுகளுக்கு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வாய்ப்பும் கிட்டும்.
- ஷோபா ராமசாமி
ஆங்கிலப் பேராசிரியர்,
'Ecological Messages in Indian Children's Literature' உள்ளிட்ட புத்தகங்களின் ஆசிரியர்.
கணிதம்கற்பது இனிமை
நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் எடுப்பதற்கு உதவும் பாடமாக கணிதம் கருதப்படுகிறது. உயர்கல்வி என்று வரும்போது, கணிதம்பலருக்கும் கசக்கிறது.
கணிதத்தின் கருத்துகள் மற்றும் நடைமுறைகள் பொறியியல், அறிவியல் மற்றும் பொருளாதாரச் சிக்கல்களைத் தீர்க்கப் பயன்படுகின்றன. அறிவியல் கற்கவும் கணிதமே அடிப்படையாக விளங்குகிறது. சிறந்த கணிதவியலாளருக்கு என்றுமே மதிப்பு இருக்கும்.
அறிவியலேஅபாரத் துணைவன்
விலங்கியல சார்ந்த படிப்பு படித்தால், என்னென்ன படித்து பயன்பெறலாம் என்ற விபரம் பலருக்கு தெரிவதில்லை. இப்பிரிவு சார்ந்த பாடங்கள் இடம்பெற்ற குரூப்பை தேர்வு செய்து, ஆர்வத்துடன் படித்தால், எளிதாக பல்வேறு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மீன் பண்ணை தரக் கட்டுப்பாட்டாளர், பூச்சியியல் துறை, லேப் டெக்னீசியன், மருத்துவப்பிரதிநிதி, விலங்குகள் பாதுகாப்பாளர், மியூசியம், பள்ளி, கல்லுாரி ஆசிரியர், பேராசிரியர், விலங்கு ஊட்டசத்து நிபுணர், பட்டுப்பூச்சி ஆராய்ச்சி மையம் என, பல்வேறு பிரிவுகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன.
மோகன்குமார், பேராசிரியர், விலங்கியல் துறை, சிக்கண்ணா அரசு கல்லுாரி, திருப்பூர்.
உலகையே இயற்பியல்தான் சுழல வைத்துக்கொண்டிருக்கிறது. இயற்பியல் துறையில் உலகெங்கும் ஏராளமான ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. மருத்துவம் துவங்கி தொழில்நுட்பம் வரை எல்லாவற்றுக்கும் இயற்பியல் தேவையாக இருக்கிறது. அஸ்ட்ரோ, தியரடிக்கல், ஸ்பேஸ், லேசர், காஸ்மாலஜி என இயற்பியலில் பலவகை படிப்புகள் உள்ளன. ஆராய்ச்சிப்படிப்பு முடித்தால் அவருக்கு இருக்கும் மதிப்பே தனி. பொறியியல் துறையிலும், இயற்பியல் சார் படிப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
வேதியியல் வகுப்புகள் கடினமானதாக பலருக்கும் தோன்றலாம். சிக்கலான சூத்திரங்கள், எதிர்வினைகள், புரிந்துகொள்ள சவாலான விரிவான அறிவியல் கருத்துகளை உள்ளடக்கியதாக வேதியியல் இருப்பது பிரதானக் காரணம். அடிப்படைகளில் சிறந்துவிளங்கினால், வேதியியல் எளிதாகிவிடும். வளமான எதிர்காலத்துக்கு வாய்ப்பு வழங்கும் படிப்பாக வேதியியல் விளங்குகிறது. அனலட்டிகல் மெத்தட்ஸ் இன் கெமிஸ்ட்ரி, பயோகெமிஸ்ட்ரி என ஏராளமான படிப்புகள் உள்ளன. கெமிக்கல் இன்ஜினியரிங், புட்பிராசசிங் என வேதியியல் சார் பொறியியல் படிப்புகளுக்குத் தனி மவுசு.
உயிரியல் பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கான வேலைகள் படிப்பின் தன்மையைப் போலவே வேறுபட்டதாக இருக்கும். ஆய்வகத்தில் பணிபுரிவதைத் தவிர, பல உயிரியலாளர்கள் விவசாயம், உணவு பதப்படுத்துதல், மருந்து உற்பத்தி, சுகாதாரப் பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு உட்பட பல்வேறு துறைகளில் தங்களைக் காண்கிறார்கள். உயிரியலை ஆழமாகக் கற்றால் வேலைவாய்ப்புகள் காத்துக்கொண்டிருக்கின்றன. தாவரவியல், விலங்கியல், நுண்ணுயிரியல், வாழ்க்கை அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல் என எண்ணற்ற படிப்புகள், வேலைவாய்ப்புகளுடன் கூடியவையாக உள்ளன.
செயற்கை நுண்ணறிவேஎதிர்காலம்
அடிப்படைக் கணினி அறிவியல், பொறியியல் படிப்புகளுடன் ஆழ்நிலைக் கற்றல், இயந்திரக் கற்றல் போன்றவை செயற்கை நுண்ணறிவுத் துறைக்கு பாதை அமைத்துத் தரும். பாதுகாப்பு ஆராய்ச்சி -மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.,) போன்ற அரசு நிறுவனங்கள் தொடங்கி, பல்வேறு தனியார் நிறுவனங்கள் வரை ஏராளமான நேரடி வேலைவாய்ப்புகள் உள்ளன. கணினிமயமாக்கம் அனைத்து துறையிலும் நீக்கமற நிறைந்திருப்பதைப் போன்று, செயற்கை நுண்ணறிவும் இடம்பிடித்து வருகிறது.
வாழ்க்கையின் வளம்வணிகவியல்
வணிகவியலில் விருப்பம் உள்ளவர்களுக்கு சி.ஏ., பி.காம்., பி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், பி.காம்., வங்கியியல் மற்றும் காப்பீடு, பி.காம்., தகவல் தொழில்நுட்பம் போன்ற படிப்புகள், உயர்வைத் தரும். பி.காம்., படித்தவர்களுக்கு நிதி, வங்கியியல், பகுப்பாய்வு, மதிப்பீடு, இடர் மேலாண்மை, வரிவிதிப்பு மற்றும் அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பு கைகூடும். டிஜிட்டல் மார்க்கெட்டிங் பிரசித்தி பெற்று வருகிறது. மூன்று முதல் 11 மாதப் பயிற்சிக்குப் பின், பி.காம்., முடித்தவர்களுக்கு இத்துறையில் நல்ல வாய்ப்புகள் காத்திருக்கின்றன. தொழில் மற்றும் வர்த்தக நிறுவன நிர்வாகிகளாக ஒளிரவும் வாய்ப்பிருக்கிறது. வணிகவியல் சார்ந்த உள்ளடக்க எழுத்தாளர்களுக்கான தேவையும் அதிகமாக உள்ளது. சி.ஏ., படிப்பு முடித்தவர்களுக்கு என்றுமே மவுசுதான்.