நாடு முழுவதும் 20 போலி பல்கலைக்கழகங்கள்: அதிர்ச்சி தகவல்
கர்நாடகா, மகாராஷ்டிரா, புதுச்சேரி, ஆந்திரா, மேற்கு வங்காளம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் போலி பல்கலைக்கழகங்கள் இருப்பதாக யு.ஜி.சி. கூறியுள்ளது.
நாடு முழுவதும் அங்கீகரிக்கப்படாத பல்கலைக்கழகங்களை பல்கலைக்கழக மானியக்குழு பட்டியலிட்டு உள்ளது. போலி பல்கலைக்கழகங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த நிறுவனங்கள் எந்த பட்டமும் வழங்க அனுமதி இல்லை என கூறியுள்ளது.
இது தொடர்பாக யு.ஜி.சி. செயலாளர் மணிஷ் ஜோஷி கூறுகையில், பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு முரணாக ஏராளமான நிறுவனங்கள் பட்டங்களை வழங்கி வருவதாக யு.ஜி.சி.க்கு தெரியவந்துள்ளது. அத்தகைய பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் பட்டங்கள் உயர்கல்வி அல்லது வேலைவாய்ப்பு நோக்கத்திற்காக அங்கீகரிக்கப்படவோ செல்லுபடியாகவோ செய்யாது. இந்தப் பல்கலைக்கழகங்களுக்கு எந்தப் பட்டமும் வழங்க அதிகாரம் இல்லை என தெரிவித்து உள்ளார்.
இவ்வாறு போலியானவை என பட்டியலிடப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களில் டெல்லியில் மட்டுமே 8 பல்கலைக்கழகங்கள் உள்ளன. அந்தவகையில், அகில இந்திய பொது மற்றும் உடல் நல அறிவியல் நிறுவனம், வர்த்தக பல்கலைக்கழகம் லிமிடெட், ஐ.நா. பல்கலைக்கழகம், தொழிற்கல்வி பல்கலைக்கழகம், ஏ.டி.ஆர். மத்திய நீதித்துறை பல்கலைக்கழகம், இந்திய அறிவியல் மற்றும் பொறியியல் நிறுவனம், சுயவேலைவாய்ப்புக்கான விஸ்வகர்மா திறந்தநிலை பல்கலைக்கழகம் மற்றும் அத்யாத்மிக் விஸ்வ வித்யாலயா (ஆன்மிக பல்கலைக்கழகம்) ஆகிய பல்கலைக்கழகங்கள் போலியானவை என அறிவிக்கப்பட்டு உள்ளன.
இதைப்போல உத்தரபிரதேசத்தில் 4 பல்கலைக்கழகங்கள் அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வருவதாக யு.ஜி.சி. கூறியுள்ளது. இதைத்தவிர கர்நாடகா, மகாராஷ்டிரா, புதுச்சேரி, ஆந்திரா, மேற்கு வங்காளம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் போலி பல்கலைக்கழகங்கள் இருப்பதாக யு.ஜி.சி. கூறியுள்ளது.
பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ள இந்த போலி பல்கலைக்கழகங்களின் பட்டியல், மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
போலி பல்கலைக்கழக பட்டியல்
டெல்லி
- அகில இந்திய பொது மற்றும் உடல் நல அறிவியல் நிறுவனம்
- கமர்ஷியல் யுனிவர்சிட்டி லிமிடெட், தர்யாகஞ்ச்
- ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம், டெல்லி
- தொழிற்கல்வி பல்கலைக்கழகம், டெல்லி
- ஏடிஆர்-சென்ட்ரிக் ஜூரிடிகல் யுனிவர்சிட்டி,
- இந்திய அறிவியல் மற்றும் பொறியியல் நிறுவனம், டெல்லி
- சுயவேலைவாய்ப்புக்கான விஸ்வகர்மா திறந்தநிலை பல்கலைக்கழகம்,
- அத்யாத்மிக் விஸ்வவித்யாலயா (ஆன்மிக பல்கலைக்கழகம்),
உத்தரப்பிரதேசம்
- காந்தி ஹிந்தி வித்யாபீடம், பிரயாக், அலகாபாத்
- எலக்ட்ரோ காம்ப்ளக்ஸ் ஹோமியோபதி தேசிய பல்கலைக்கழகம், கான்பூர்
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பல்கலைக்கழகம் (திறந்த பல்கலைக்கழகம்), அச்சால்டால், அலிகார்
- பாரதிய சிக்ஷா பரிஷத், பாரத் பவன், மாட்டியரி சின்ஹாட், பைசாபாத் சாலை, லக்னோ
மேற்கு வங்காளம்
- இந்திய மாற்று மருத்துவ நிறுவனம், கொல்கத்தா
- மாற்று மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், டயமண்ட் ஹார்பர் சாலை, பில்டெக் விடுதி, தாகுர்புர்கூர்
ஆந்திரப் பிரதேசம்
- கிறிஸ்ட் நியூ டெஸ்டமென்ட் டீம்ட் யுனிவர்சிட்டி,
- இந்திய பைபிள் திறந்த பல்கலைக்கழகம், விசாகப்பட்டினம்
கர்நாடகா
- படகன்வி சர்க்கார் உலக திறந்தநிலை பல்கலைக்கழக கல்வி சங்கம், பெல்காம்
கேரளா
- செயின்ட் ஜான்ஸ் பல்கலைக்கழகம், கிஷாநத்தம்
மகாராஷ்டிரா
- ராஜா அரபு பல்கலைக்கழகம், நாக்பூர்
புதுச்சேரி
- ஸ்ரீ போதி அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன்