அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைநிலை படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டாம்

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அனுமதியின்றி தொலைதூர கல்வி படிப்புகளை வழங்குவதாக பல்கலைக்கழக மானியக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது;

Update: 2022-03-29 09:35 GMT

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அனுமதியின்றி தொலைதூர கல்வி படிப்புகளை வழங்குவதாக பல்கலைக்கழக மானியக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மார்ச் 25 தேதியிட்ட அறிவிப்பில், "யுஜிசி விதிகள் (திறந்த மற்றும் தொலைதூரக் கற்றல் விதிமுறைகள், 2017) மற்றும் 2020 இல் திருத்தப்பட்ட விதிமுறைகள் உட்பட அதன் அவ்வப்போது திருத்தங்களின் கீழ் வகுக்கப்பட்ட அனைத்து நிபந்தனைகளையும் முற்றிலும் மீறி, திறந்த தொலைதூரக் கல்வி படிப்புகளின் கீழ் பல்கலைக்கழகம் மாணவர்களை சேர்க்கிறது", என்று கூறப்பட்டுள்ளது.

2014-15 கல்வியாண்டு வரை மட்டுமே தொலைதூர கல்வி படிப்புகளை வழங்குவதற்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, அதன் பிறகு எந்த அங்கீகாரமும் வழங்கப்படவில்லை என்று UGC அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், "மாணவர்களின் வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு பல்கலைக்கழகம் மட்டுமே பொறுப்பு." என்றும் யுஜிசி அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

யுஜிசியின் செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் வெளியிட்டுள்ள நோட்டீஸில், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டாம் என்று எச்சரித்துள்ளார். "UGC மூலம் படிப்புகளுக்கு அங்கீகாரம் இல்லாததால், இதுபோன்ற படிப்புகளில் சேர்க்கை பெறுவது மாணவர்களின் வாழ்க்கையை பாதிக்கலாம்" என்றும் அவர் கூறியுள்ளார்.

5 என்ற அளவில் 3.26 புள்ளிகளுக்கும் குறைவான NAAC மதிப்பெண் பெற்ற நிறுவனங்களுக்கு தொலைதூர படிப்புகளை வழங்க UGC அனுமதி மறுத்துள்ளது. NAAC அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு 3.01 முதல் 3.25 புள்ளிகள் வரையிலான A கிரேடு வழங்கியுள்ளது. யுஜிசி 3.26 புள்ளிகளுடன் பல்கலைக்கழகங்களை ஆன்லைன் படிப்புகளை வழங்க அனுமதிக்கிறது.

இதனிடையே, அண்ணாமலைப் பல்கலைக்கழக இணையதளத்தின்படி, தொலைதூரக் கல்வி முறையில் 200 படிப்புகள் வழங்கப்படுகின்றன.

ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.எம்.கதிரேசன் கூறுகையில், இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளோம். நாங்கள் சமீபத்தில் NAAC ஆல் அங்கீகாரம் பெற்றுள்ளோம், இந்த வாரத்தில் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முடிவுகள் வெளியானதும், அதிக மதிப்பெண் பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது, எனவே தொலைதூரக் கல்வி படிப்புகளை வழங்குவதில் எங்களுக்கு எந்தத் தடையும் இருக்காது.

தமிழகத்தில் இருந்து சுமார் 40,000 மாணவர்கள் தொலைதூர கல்வி படிப்புகளில் சேர்ந்துள்ளனர். உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் மட்டுமே நாங்கள் செயல்படுகிறோம். நான் மூன்று மாதங்களுக்கு முன்புதான் சேர்ந்தேன், ஆனால் ரிட் மனுவின்படி நாங்கள் மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கப்படுகிறோம் என்பதை பல்கலைக்கழக அதிகாரிகள் எனக்குப் புரியவைத்துள்ளனர். யுஜிசி அந்தத் தடையை நீக்கினால், எங்கள் படிப்புகள் செல்லுபடியாகும், யுஜிசியிடம் இருந்து இன்னும் நோட்டீஸ் வரவில்லை" என்று கூறினார்.

வேலைவாய்ப்பு கிடைக்காமல் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கும் குறிப்பிட்ட பல்கலையே முழு பொறுப்பு. சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.க்கு தொலைநிலை படிப்புகளுக்கான அங்கீகாரம் வழங்கப்படாததால் யுஜிசி எச்சரிக்கை.

Tags:    

Similar News