நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
தமிழ்நாட்டில் சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பிளஸ் 2 தேர்வை எழுதி உள்ளனர்.
தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை மார்ச் 1ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையில், 3,302 மையங்களில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 7 ஆயிரத்து 534 மேல்நிலைப் பள்ளிகளில் படித்த சுமார் 7 லட்சத்து 72 ஆயிரத்து 360 மாணவர்களும், தனித்தேர்வர்கள் 8 ஆயிரத்து 190 பேரும் என 7 லடசத்து 80 ஆயிரத்து 550 மாணவர்கள் எழுதி உள்ளனர்.
இதனையடுத்து, விடைத்தாள் திருத்தும் பணியில், 86 மையங்களில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரையில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபட்டனர். அதன் பின்னர், மாணவர்களின் மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு, மே 6ஆம் தேதி தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு அரசுத் தேர்வுத்துறை தயார் நிலையில் உள்ளது.
சென்னையில் எழும்பூர் டிபிஐ வளாகத்தில் அதாவது அன்பழகன் வளாகத்தில் அமைந்துள்ள அரசு தேர்வுகள் இயக்ககத்தில் காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “2024 மார்ச் 12ஆம் வகுப்பு நடைபெற்ற பொதுத்தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதி, பேராசிரியர் அன்பழகன் கல்வி வாளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது.
மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in அல்லது www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதிவை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம்.
மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிடும் போதே அவர்கள் தேர்விற்கான விண்ணப்பத்தில் அளித்த செல்போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகளில் மாணவர்கள் மதிப்பெண்களைப் பார்த்து தெரிந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஞாயிற்றுக்கிழமையே மதிப்பெண்களுடன் கூடிய பட்டியல்கள் அனுப்பப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து வரும் 10 ஆம் தேதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.