பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு நாளை துவக்கம்
தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு நாளை துவங்குகிறது.
தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த மே மாதம் 6ம் தேதி துவங்கியது. இதனைத்தொடர்ந்து அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக் கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர விண்ணப்பதாரர்கள் www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் தங்களது விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தனர்.
நடப்பு கல்வியாண்டில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்காக 2,53,954 மாணவர்கள் இணையவழியில் விண்ணப்பித்திருந்ததனர். பின்னர் விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ்கள் சரிபார்பு நடைபெற்றது. அவர்களில் 1,99,868 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஜூன் 12ம் தேதி ரேண்டம் எண்கள் வெளியிடப்பட்டன. தொடர்ந்து ஜூலை 10ம் தேதி தரவரிசைப் பட்டியலை தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் ஆணையர் வெளியிட்டார். இந்த தரவரிசைப் பட்டியலில் 65 மாணவ, மாணவிகள் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் 440க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 2 லட்சம் இடங்கள் உள்ளன. இவை ஒற்றைச்சாளர முறையில் இணையவழி பொதுக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.
இந்த நிலையில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு நாளை தொடங்கி செப். 3ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த கலந்தாய்வு மூலம் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் சிறப்பு பிரிவினருக்கு ஜூலை 22ம் தேதியும் பொதுப் பிரிவில் சிறப்பு பிரிவினருக்கு ஜூலை 25ம் தேதியும் கலந்தாய்வு தொடங்கவுள்ளது. அதேபோல், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு 29ம் தேதி முதல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.