இன்னல்கள் காரணமாக பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் பள்ளி படிப்பை தொடர நிதி உதவி- மத்திய அமைச்சர்
இந்தியாவில் பல இன்னல்கள் காரணமாக பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்கள் மீண்டும் பள்ளி படிப்பை தொடர நிதி உதவி வழங்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சில ஆண்டுகளாக பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் பொருட்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது அந்த வகையில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அவர்கள் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, பல்வேறு காரணங்களால் பள்ளி படிப்பை பாதியில் கைவிட்டோர் குறித்த தகவலை சேகரிக்க மத்திய கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
மேலும் இதற்காக தற்போது 'பிரபந்த்' என்னும் வலைதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த வலைத்தளம் மூலம் நாட்டில் உள்ள அனைத்து மாநில/யூனியன் பிரதேச பகுதிகளில் பள்ளி மற்றும் சிறப்பு பயிற்சி மையங்களில் படிப்பை பாதியில் நிறுத்திய 6-18 வயது உள்ளோரின் விவரங்களை இந்த வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் 6-14 வயது உள்ள மாணவர்கள், 'சமக்ரா சிக் ஷா' என்ற திட்டத்தின் கீழ் பள்ளிகளில் மீண்டும் சேர்க்கப்படுவர்.
இதை தொடர்ந்து அவர்களுக்கு நிதி உதவியும் வழங்கப்படும். மேலும் சமூக மற்றும் பொருளாதார தரத்தில் பின் தங்கி, படிப்பை பாதியில் நிறுத்திய 16-18 வயது உள்ள மாணவர்கள், திறந்தவெளி பல்கலையில் படிப்பை தொடர ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்றும் மத்திய கல்வி அமைச்சர் அவர்கள் தெரிவித்தார். மேலும் இந்த திட்டம் இந்த கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.