தமிழக பள்ளிகளில் 6 முதல் 10 வரை அரையாண்டு தேர்வுக்கு புதிய கால அட்டவணை

தமிழக பள்ளிகளில் 6 முதல் 10 வரை அரையாண்டு தேர்வுக்கு புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.

Update: 2023-12-10 17:37 GMT

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்தது. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.இந்த நிலையில் டிசம்பர் 4 ஆம் தேதி புயலானது வடதமிழகத்தை ஒட்டி ஆந்திராவுக்கு செல்லவிருந்ததால் அன்றைய தினம் மேற்கண்ட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் 5 அடிக்கு மேல் தேங்கியுள்ளது.இதனால் இன்று வரை சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து டிசம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் தொடங்கவிருந்த மேல்நிலைப்பள்ளி அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. அதாவது டிசம்பர் 11 ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பலரது புத்தகங்களும் நோட்டுகளும் மழை வெள்ளத்தில் நனைந்து கந்தலாகிவிட்டது. சிலரது புத்தகங்கள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் நாளை அரையாண்டு தேர்வை அந்த மாணவர்கள் எழுத முடியாத நிலை உள்ளது. இதனால் இன்னும் இரண்டு நாட்களில் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள், சீருடைகள் வழங்குமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.மேலும் நாளை தொடங்கவுள்ள அரையாண்டு தேர்வுகள் வரும் 13 ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான புதிய தேர்வு அட்டவணை வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்புக்கான புதிய அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

டிசம்பர் 13 ஆம் தேதி தமிழ்

டிசம்பர் 14 ஆம் தேதி விருப்ப பாடம்

டிசம்பர் 15 ஆம் தேதி ஆங்கிலம்

டிசம்பர் 18 ஆம் தேதி கணிதம்

டிசம்பர் 20 ஆம் தேதி அறிவியல்

டிசம்பர் 21 ஆம் தேதி உடற்கல்வி

டிசம்பர் 22 ஆம் தேதி சமூக அறிவியல்

அது போல் 11, 12 ஆம் வகுப்புகளுக்கும் புதிய தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது. அந்த வகுப்புகளுக்கு டிசம்பர் 13 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும். தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதால் அரையாண்டு தேர்வு விடுமுறையும் தள்ளி வைக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்த நிலையில் திட்டமிட்டது போல் டிசம்பர் 22 ஆம் தேதி வரை தேர்வுகள் முடிந்து, டிசம்பர் 23 ஆம் தேதி முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News