சென்னை நந்தனத்தில் புத்தக கண்காட்சியை துவக்கி வைத்த அமைச்சர் உதயநிதி
சென்னை நந்தனத்தில் புத்தக கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.;
சென்னையில் புத்தக கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் சென்னைநந்தனம் ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரியில் 47-வது புத்தகக் காட்சி அமைக்கப்பட்டு உள்ளது.இந்த புத்தக கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- 47-வது சென்னை புத்தகக் கண்காட்சியை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. உடற்பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் இன்று தொடங்கி வைத்தோம். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வாழ்த்துச் செய்தியை எடுத்துரைத்து, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் & பதிப்பாளர் சங்கம் சார்பில் 'முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி' விருது மற்றும் தலா ரூ.1 லட்சத்தை 6 சிறந்த படைப்பாளிகளுக்கு வழங்கி வாழ்த்தினோம்.
மேலும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் & பதிப்பாளர் சங்கம் சார்பில் சிறந்த பதிப்பாளர்கள் எழுத்தாளர்களுக்கு விருதுகளை வழங்கி கெளரவித்தோம்.
தி.மு.க. இளைஞரணி சார்பில் தொடங்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் பதிப்பகத்தின் சார்பில் புதிதாக வெளியிடப்பட்டுள்ள 9 நூல்கள் உட்பட லட்சக்கணக்கான நூல்களைக் கொண்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. உலகத்தமிழர்களின் அறிவுத்திருவிழாவாக நடைபெறவுள்ள சென்னை புத்தகக் காட்சி சிறக்கட்டும். புத்தக வாசிப்பு அறிவின் புதுப்புது கதவுகளை திறக்கட்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.
சென்னையில் ஆண்டு தோறும் இந்த புத்தக கண்காட்சியில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான புத்தகங்களை தேர்வு செய்கிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டும் சென்னை புத்தக கண்காட்சி லட்சக்கணக்கான பார்வையாளர்களை தன்னகத்தே ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை.