பொருளாதாரத்தில் நலிவடைந்த தகுதிவாய்ந்த பி.டெக்., மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக, ஐஐடி மெட்ராஸ், பவர் கிரிட் கார்ப்பரேசன் ஆப் இந்தியாவுடன் உடன்படிக்கையை ஏற்படுத்தியுள்ளது
பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த, தகுதிவாய்ந்த பி.டெக். மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக, சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகமான ஐஐடி மெட்ராஸ், பவர் கிரிட் கார்ப்பரேசன் ஆப் இந்தியாவுடன் உடன்படிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஐஐடி-யில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக, கல்வி உதவித்தொகை நிதியம் ஒன்றை ஏற்படுத்த, பவர் கிரிட் கார்ப்பரேசன் நிறுவனம், தனது பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு நிதியத்திலிருந்து (சிஎஸ்ஆர்) ரூ.10.5 கோடியை வழங்கியுள்ளது. இந்த நிதியம், சென்னை ஐஐடி-யில் பயிலும் தகுதிவாய்ந்த மாணவர்களின் கல்விக்கட்டணத்தை, கல்வி உதவித் தொகை வாயிலாக செலுத்த உதவும். 2021-22 நிதியாண்டில், பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு நிதியத்திலிருந்து, ஐஐடி மெட்ராஸ் ஒரே நிறுவனத்திடமிருந்து பெற்ற அதிகபட்ச தொகை இதுவாகும்.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், சென்னை ஐஐடி-யின் டீன் பேராசிரியர் மகேஷ் பஞ்சக்னூலா, பவர் கிரிட் கார்ப்பரேசன் நிறுவனத்தின் இயக்குனர்(பணியாளர்) வி.கே.சிங் ஆகியோர் இன்று கையெழுத்திட்டனர்.
இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சென்னை ஐஐடி-யின் இயக்குனர் பேராசிரியர் வி.காமகோடி, 'அனைவருக்குமான கல்வி நிறுவனம்' என்பது தான் ஐஐடி மெட்ராஸின் குறிக்கோள் என்றார். பி.எஸ்.சி. பட்டப்படிப்பு, தகுதிவாய்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவது போன்ற சென்னை ஐஐடி-யின் முயற்சிகள், இந்த நிறுவனத்தை அனைத்து தரப்பினருக்கும் ஏற்றதாக மாற்றியுள்ளதாகவும் அவர் கூறினார்.
பவர் கிரிட் கார்ப்பரேசனின் இயக்குனர் வி.கே.சிங் பேசுகையில், இந்த கல்வி உதவித்தொகை திட்டம், மக்களிடமிருந்து கிடைக்கும் வருமானத்தை சமுதாயத்திற்கே திருப்பி வழங்குவதற்கான நேரடி வழிமுறை என்பதில், தமது நிறுவனம் நம்பிக்கை கொண்டிருப்பதாகக் கூறினார். கல்விக் கட்டண உயர்வு காரணமாக, மாணவர்களின் படிப்புச் செலவுக்கான பணத் தேவைகளும் அதிகரித்து வருவதாகத் தெரிவித்தார். மேலும், இந்த உதவித் தொகையை பெற்று பயனடையும் மாணவர்களின் வாழ்க்கையில், உண்மையிலேயே குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்றும் வி.கே.சிங் நம்பிக்கை தெரிவித்தார்.